எட்விக் கண்ணாடிக் குவளை (Hedwig glass) என்பது, கிபி 10-12 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் மையக் கிழக்கில் அல்லது நோர்மன் சிசிலியில் தோன்றிய ஒருவகைக் கண்ணாடிக் குவளை ஆகும். இவ்வாறான மூன்று குவளைகளை வைத்திருந்தார்[1] எனக் கருதப்படும் சிலேசிய இளவரசியான செயின்ட் எட்விக்கின் (1174–1245) பெயரைத் தழுவியே இக்குவளைக்குப் பெயரிடப்பட்டது. இது வரை முழுமையான 14 குவளைகளே இருப்பதாகத் தெரிய வருகிறது. இக்குவளை வகை தோன்றிய இடம் குறித்து எகிப்து, ஈரான், சிரியா என்பவற்றுக்கு இடையே சர்ச்சை நிலவுகிறது. இவை இசுலாமியத் தயாரிப்போ இல்லையோ இவற்றில் நிச்சயமாக இசுலாமியக் கண்ணாடிக் குவளைகளின் செல்வாக்கு உண்டு.[2][3] முசுலிம் கைப்பணியாளர்களால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இக் குவளைகளில் கிறித்தவப் படிமங்களைக் காணமுடிகிறது. இக்குவளைகள் ஏற்றுமதிக்காகச் செய்யப்பட்டதால் அல்லது கிறித்தவ வாடிக்கையாளர்களுக்காகச் செய்யப்பட்டதால் இப்படிமங்கள் இடம்பெற்று இருக்கக்கூடும்.[4] இக் குவளைகள் நோர்மன் சிசிலியில் 11 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை என்னும் கருத்தை ரோசுமேரி லியார்க்கே என்பவர் தான் 2005 ஆம் ஆண்டில் எழுதிய நூலொன்றில் வெளியிட்டார். இக்கருத்துக்கு வல்லுனர்கள் மத்தியில் ஓரளவு ஆதரவு உண்டு.[5]
இது வரை அறியப்பட்ட 14 குவளைகளுமே ஏறத்தாழ ஒரே வடிவம் கொண்டவை. தடிப்பான சுவர்களையும், நேரான பக்கங்களையும் கொண்ட இக் குவளைகளின் அடிப்பகுதியில் விளிம்புப் பட்டைகள் உள்ளன. இவை ஏறத்தாழ 14 சமீ உயரமும், 14 சமீ விட்டமும் கொண்டவை. ஒன்றைத் தவிர ஏனையவை எல்லாம் சில்லுவெட்டு முறையில் செய்யப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளோடு கூடியவை. இக் குவளைகள் புகைத்தன்மையான உலோக நிறம் உடையவை. சில பச்சை, மஞ்சள் சாயல்கள் கொண்ட கண்ணாடியால் ஆனவையாகக் காணப்படுகின்றன. அலங்கார வேலைப்பாடுகள் இரண்டு விதமான பாணிகளைச் சேர்ந்தவை. நான்கு குவளைகள் சமாரா பாணி "சி" இலிருந்து பெறப்பட்ட பண்பியல் வடிவ அலங்காரங்கள் கொண்டவை. எட்டுக் குவளைகளில் அலங்காரத்துக்கு சிங்கம், கழுகு, புற்றாவர வகைகள் அடங்கிய தாவர விலங்கு உருவங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இக்குவளைகள், நடுக் காலத்தில் ஆடம்பரப் பொருட்களுள் ஒன்றாகக் கருதப்பட்டதும், பாத்திமிய எகிப்தில் செய்யப்பட்டதுமான பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கக்கூடும். மேற்படி பாறைப் பளிங்குச் செதுக்குப் பாண்டங்கள் பெரும்பாலும் தேவாலயப் பொக்கிசங்களிடையே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வெனிசின் புனித மார்க் பசிலிக்காவின் பொக்கிசங்களில் இப்பாண்டங்களும் உள்ளன.