நாராயணன் நம்பூதிரி கக்காடு ( மலையாளம்: നാരായണൻ നമ്പൂതിരി കക്കാട്) (14 ஜூலை 1927 - 6 ஜனவரி 1987), பொதுவாக என்.என். கக்காடு என்று அழைக்கப்படும் இவர் மலையாள மொழியின் இந்தியக் கவிஞர் ஆவார். சபலமே யாத்ரா, பத்தலதிண்டே முழக்கம் மற்றும் சங்கதம் போன்ற படைப்புகளுக்குப் பெயர் பெற்ற இவர் சமசுகிருத அறிஞராகவும் இருந்துள்ளார். ஓவியம் மற்றும் இசையில் தேர்ச்சி பெற்றவர் என்றும் அறியப்படுகிறது. ஒடக்குழல் விருது, ஆசான் சமாரக கவிதா புரஸ்காரம், கவிதைக்கான கேரள சாகித்ய அகாடமி விருது மற்றும் வயலார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கக்காடு 1927 ஜூலை 14 ஆம் தேதி தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தின் அவிதனல்லூரில், கக்காடு வலிய நாராயணன் நம்பூதிரி மற்றும் தேவகி அந்தர்ஜனம் ஆகியோருக்கு ஒரு மரபுவழி பிராமண குடும்பத்தில் பிறந்தார். [1] இவரது ஆரம்பக் கல்வி சமசுகிருதத்தில் பாரம்பரிய முறையில் இருந்தது. மேலும் ஓவியம், பாரம்பரிய இசை மற்றும் புல்லாங்குழல் ஆகியவற்றையும் பயின்றார். 16 வயதில்தான், அவர் தனது முறையான கல்வியைத் தொடங்க முடிந்தது. முதலில் 6 ஆம் வகுப்பிலும் பின்னர் 1943 ஆம் ஆண்டில், கோழிக்கோடு சாமோரியன் உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பிலும் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, விவேகோதயம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்து பள்ளிப்படிப்பை முடித்து, 1948 இல் சிறீ கேரள வர்மா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தனது இலக்கியத் திறனை வளர்த்துக் கொள்ள பிரபல கவிஞரும் அறிஞருமான என்வி கிருஷ்ணவாரியரின் கீழ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. [2] பி.ஓ.எல் பட்டப்படிப்பை முடித்த பிறகு, இவர் நடுவண்ணூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனிப் பயிற்சி கல்லூரிக்குச் செல்ல பள்ளி நிர்வாகத்துடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து இவர் பதவி துறந்ததால் அவரது பதவிக்காலம் அங்கு குறுகிய காலமே இருந்தது. பின்னர், அகில இந்திய வானொலியின் கோழிக்கோடு நிலையத்தில் [3] ஒரு கதை எழுத்தாளராக சேர்ந்து பணியாற்றினார். 1985 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பாளராக தனது தொழில் வாழ்க்கையில் ஓய்வு பெற்றார்.
கக்காடு ஸ்ரீதேவி என்பவரை மணந்தார். இவர்கள் திருமணம் 1955 ஏப்ரல் 25, அன்று நடைபெற்றது. [2] இவர், 1987 சனவரி 6 அன்று தனது 59 வயதில் புற்றுநோயால் இறந்தார். [4]
அவர் தனது பள்ளி நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். [5] அவரது வெளியிடப்பட்ட முதல் படைப்பான சலப கீதம் 1957இல் வெளிவந்தது. இதன் பின்னர் மேலும் பத்து கவிதை புத்தகங்களையும் மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். [6] மலையாளத்தில் [7] [8] புதுமைக் கவிதைகளின் முன்னோடியாகவும், மலையாள இலக்கியத்தில் நவீனத்துவ இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் பல விமர்சகர்களால் இவர் கருதப்படுகிறார். [9] [10] 1960களின் முற்பகுதியில் மாத்ருபூமி வார இதழில் வெளியிடப்பட்ட கன்வான் மற்றும் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து மூன்று என்ற கவிதை எலியட்டின் செல்வாக்கை வெளிப்படுத்தியது. மேலும், இவரை ஒரு நவீன கவிஞராக நிறுவியது. சபலமே யாத்ரா என்ற படைப்பு அவருக்கு பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த இவரது மகத்தான படைப்பு 1985 இல் வெளியிடப்பட்டது. அவரது இரண்டு படைப்புகள், ''நாடன் சிந்துகள்'' மற்றும் ''பக்கலருத்திக்கு முன்பு'' ஆகியவை அவரது மரணத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டன. [2]
கக்காடு அரசியலிலும் ஈடுபட்டுள்ளார்.இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகத் தொடங்கி, பின்னர், இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு நகர்ந்தார். இவர் கம்யூனிஸ்ட் பதாகையின் கீழ் பாலுசேரியிலிருந்து மலபார் மாவட்ட வாரியத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அகில இந்திய வானொலி பணியாளர்கள் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளராக இருந்தார். [1] கேரள சாகித்ய அகாதமி, கேரள சாகித்ய சமிதி, வல்லத்தோல் வித்யாபீடம், சாகித்ய பிரவர்தக சககாரண சங்கம் ஆகிய சபைகளிலும் இருந்ந்தார். [2]
கக்காடு 1985 ஆம் ஆண்டில் சபலமே யாத்ரா என்ற படைப்பிற்காக ஒடக்குழல் விருதைப் பெற்றார். [11] அதே ஆண்டு கவிதா என்ற கவிதைத் தொகுப்பிற்கான செருகாடு விருதும் கிடைத்தது. [12] கேரள சாகித்ய அகாதமி 1986 ஆம் ஆண்டில் கவிதைக்கான வருடாந்திர விருதுக்கு சபலமே யாத்ராவைத் தேர்ந்தெடுத்தது. [13] மேலும் அவர் 1986 ஆம் ஆண்டில் மேலும் ஒரு விருதைப் பெற்றார் வயலார் விருது, சபலமே யாத்ரா மீண்டும் அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது. [14] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1989 ஆம் ஆண்டு ஆசான் சமாரக கவிதா புரஸ்காரத்தை மரணத்திற்குப் பின் கௌரவமாகப் பெற்றார். [15]