எம். எஸ். ரகுநாதன், இந்தியக் கணித மேதைகளில் ஒருவர். ஆந்திரப் பிரதேசத்தில் 1941-ல் பிறந்த இவர் தனது மாமாவின் வீட்டில் வளர்ந்தார். இந்தியாவில் டாடா பண்டமென்டல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டில் பேராசிரியர் பதவி வகிப்பவர். இவர் தன் 19 வது வயதில், இந்த நிறுவனத்தில் சேர்ந்தார். இவரின் முழுப்பெயர் ’மாடபூசி சந்தானம் ரகுநாதன்’ என்பதாகும். இவர் தந்தை, சென்னையில் மரக்கடை வணிகம் செய்தவர். மயிலை பி.எஸ்.மேனிலைப் பள்ளியில் படித்த இவர், விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு முடித்தார். பின்பு டாடா ஆய்வகத்தில் சேர்ந்து முனைவர் (பி.எச்.டி.,) பட்டத்தையும் பெற்றார்.
கணிதத்தில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட இவர், சாந்தி சுவரூப் பட்நாகர் விருது, ராமானுஜம் பதக்கம், பத்மபூஷண் விருது ஆகியவற்றைப் பெற்றார். அறிவியல் அறிஞர்களாக மதிக்கப்பட்டு, உலக சமுதாயத்தால் ஏற்கப்பட்டு, அவர்கள் கையொப்பம் பதித்த ஆவணம் இலண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் உள்ளது. பிரபல அறிவியலாளர் ஐசக் நியூட்டன் இதில் கையொப்பமிட்டிருக்கிறார். அதில் சமீபத்தில் கையொப்பமிட்ட பேராசிரியர் எம்.எஸ்.ரகுநாதன் ஆவார். வரலாற்றுப்புகழ் மிக்க கணித மேதை சிறீநிவாச ராமானுஜம், சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன் என இந்திய கணித இயல் துறையின் பெருமையைக் கட்டிக்காத்த பெருமகன்களின் வரிசையில் இவர் இடம் பெற்றுள்ளார்.