எம். மணிகண்டன் M. Manikanda | |
---|---|
2018 ஆம் ஆண்டில் மணிகண்டன் | |
பிறப்பு | தமிழ்நாடு, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, விளாம்பட்டி |
பணி | ஒளிப்பதிவாளர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போதுவரை |
எம். மணிகண்டன் (M. Manikandan) என்பவர் ஒரு ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றிவருகிறார். இவர் தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் முதலில் விண்ட் (2010) என்ற குறுப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய காக்கா முட்டை திரைப்படமானது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இது 2015 இல் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.
மணிகண்டன் மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] தலைமைக் காவலரான தந்தையின் பணி நிமித்தம் பல ஊர்களுக்கு இடம்பெயரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் படிப்பை முடித்தபின், வாகன பொறியியலில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார்.[2] தொடக்கத்தில், திருமண ஒளிப்படக் கலைஞராக அவர் பணியாற்றினார்.[3] மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வடிவமைத்தல் போன்ற வேலைகளையும் செய்தார். திரைப்படத்தில் முயற்சி செய்யலாமென சென்னைக்கு வந்தார். அவரது ஒளிப்படங்களைப் பார்த்த ஒருவர், ‘ஸ்டில் ஃபோட்டோகிராபியில் படைப்பாற்றலுக்குப் பெரிய இடமிருக்காது, எனவே, ஒளிப்பதிவுக்கு முயற்சி செய்யுங்கள்’ என ஆலோசனை வழங்கினார். எண்ணியல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்காக, ராஜிவ் மேனனால் நிர்வகிக்கப்படும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.[1]
2000களின் நடுவில், தமிழ் திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நேரத்தில், இவர் குறும்படங்களுக்காக பல திரைக்கதைகளை எழுதினார். விஜய் சேதுபதி நடிப்பில் விண்ட் (2010) என்ற குறும்படத்தை இயக்கினார். இப்படம் விமர்சனரீதியாக புகழப்பட்டு, பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.[2] இந்தப்படமானது தமிழ் திரைப்பட இயக்குனரான வெற்றிமாறனின் கவனத்தை ஈர்த்தது. அவர் இவரது முதல் திரைப்படமான காக்கா முட்டை படத்தைத் தயாரித்து உதவினார். இந்த திரைப்படமானது சேரியில் வாழும் இரண்டு சிறுவர்கள் பீத்சாவை உண்ண ஆசைப்படும் என்ற நிகழ்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.[1] இப்படம் 2014 டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் 2015 சூனில் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 62 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படமும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது என இரண்டு விருதுகளை வென்றது.[4] லாஸ் ஏஞ்சல்சின் 13 வது இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர் விருதை வென்றது.[5]
ஆண்டு | படம் | இயக்கம் | எழுத்து | ஒளிப்பதிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2015 | காக்கா முட்டை | ஆம் | ஆம் | ஆம் | சிறந்த குழந்தைகள் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது லாஸ் ஏஞ்சல்சின் 13 வது இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பார்வையாளர் விருது போட்டியில்—சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்[சான்று தேவை] |
2015 | கிருமி | இல்லை | ஆம் | இல்லை | |
2016 | குற்றமே தண்டனை | ஆம் | ஆம் | ஆம் | |
2016 | ஆண்டவன் கட்டளை | ஆம் | இல்லை | இல்லை | |
2016 | ஆஃப் டிக்கட் | இல்லை | ஆம் | இல்லை | இது காக்காமுட்டை திரைப்படத்தின் மராத்திய மொழி மறு ஆக்கம். |
2018 | கடைசி விவசாயி | ஆம் | ஆம் | ஆம் | தயாரிப்பில் |
குறும்படம்