எரிக்கா தோபியாசன் ஏம்தென்(Erika Tobiason Hamden) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் அரிசோனா பல்கலைக்கழகத்திலும் சுட்டீவார்டு நோக்கீட்டகத்திலும் உதவிப் பேராசிரியராக உள்ளார். இவரது ஆய்வு புற ஊதாக்கதிர்க் கட்புலக் காட்சி தொலைநோக்கித் தொழில்நுட்பத்திலும் கருவியாக்கத்திலும் கதிர்நிரல் அளவியாக்கத்திலும் பால்வெளிப் படிமலர்ச்சியிலும் முனைந்துள்ளது.[1] இவர் பால்வெளிப் பருதியின் ஊடகத்தை நோக்குவதற்காக வடிவமைக்கப்படும் புற ஊதா பல்பொருள் கதிர்நிரல்நோக்கி, நெருப்புக் குண்டம்-2 ஆகியவற்றின் அறியலாளராகவும் திட்ட மேலாளராகவும் பணிபுரிந்தார்.[2] இவர் 2019 ஆம் ஆண்டு TED ஆய்வுறுப்பினர் ஆவார்.[3]
இவர் நியூஜெர்சியில் உள்ள மாண்டிகிளேரில் பிறந்தார். ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் 2006 இல் பட்டம் பெற்றுள்ளார்.[4] இவர் ஆர்வார்டு வானியற்பியல் மையத்தில் ஆந்திரூ சுழந்த்கியோர்கியின் மேற்பார்வையின்கீழ் முதுநிலை ஆய்வை முடித்துள்ளார்.[4] பட்டம் பெற்றதும் இவர் நியூஜெர்சியில் சமையல்வேலைப் பொறுப்பை ஏற்கும் முன்பு இலண்டனில் உள்ளைலெ கோர்தான் புளூவில் சமையல் பட்டயம் பெற்றுள்ளார். இவர் 2007 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தார். பிறகு 2014 இல் முனைவர் பட்டத்தை டேவிடு சுச்சிமினோவிச் வழிகாட்டுதலில் ஈட்டியுள்ளார் .[5] இவர் காலெக்சு(GALEX ) ஆவணத் தரவுகளைப் பயன்படுத்திப் புற ஊதா பின்னணியுள்ள பால்வெளி விரவலுக்கான புற ஊதா அலைகாணி உருவாக்கம், புற ஊதா கருவியாக்கம் ஆகிய பணிகளில் ஆய்வு செய்து அவற்றை உருவாக்கினார்.[4][6] இவர் 2011 முதல் 2014 வரை நாசாவின் புவி, விண்வெளி அறிவியல் ஆய்வுத்தகைமையைப் பெற்றுள்ளார்.
இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகக் கிறித்தோபர் மாட்டினுடன் சேர்ந்தார். இங்கு இவர் உயர் குத்துநிலை வளிமக் குமிழிக்கான ஊதாக் கதிர்த் தொலைநோக்கியை உருவாக்கினார். இது "மங்கலான பால்வெளி ஊடகச் செம்பெயர்வு உமிழ்வு " ஆய்வுக்காக உருவாக்கப்பட்டதாகும்.[4][7] இரண்டாம் தீப்பந்துக்கலம்(பயர்பால்-2) என்பது மங்கலான பால்வெளிப் பருதி ஊடகச் செம்பெயர்வு உமிழ்வை புற ஊதாக்கதிர் அலைநீள நெடுக்கத்தில் நோக்கீடு செய்ய வல்லதாகும்.[8] இவர் வனியலில் 365 நாட்கள் எனும் காணொலியில் தோன்றியுள்ளார்.[9] இவர் 2014 இல் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வானியல், வானியற்பியலுக்கான முதுமுனைவர் ஆய்வுநல்கையைப் பெற்றார்.[10] இந்த ஆய்வுநல்கை இவருக்கு கெக் அண்ட வலைப் படிமக் கருவிவழியாக செம்பெயர்ச்சி நெடுக்கத்தில் பால்வெளிகளை ஆயும் கருவித் தொகுப்பை உருவாக்கவே தரப்பட்டது.[11] இவர் 2016 இல் சிலிக்கான் காணிகளை அல்லது ஒற்றிகளை உருவாக்கியதற்காக நாசாவின் நான்சி உரோமன் தொழில்நுட்ப ஆய்வுத்தகைமையைப் பெற்ற முதல் பெண்மணி ஆவார் [12] இவர் 2017 இல் செய்முறை இயற்பியலுக்கான இராபர்ட் ஆந்திரூசு மில்லிக்கன் ஆய்வுறுப்பினர் ஆனார்.
இவர் 2018 இல் அரிசோனா பல்கலைக்கழகத்திலும் சுட்டீவார்டு நோக்கீட்டகத்திலும் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[13] இங்கு இவர் ஒரு புற ஊதாக்கதிர் சிலிக்கான் காணி அல்லது ஒற்றி ஆய்வகத்தை தோற்றுவித்து இரண்டாம் தீப்பந்துக்கலத்தை(பயர்பால்-2) உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் இங்கு கெக் அண்ட மீள்மின்னணுவாக்கப் படம்பிடிப்பியின் திட்ட அறிவியலாளராகவும் விளங்கினார்.
இவர் பால்வெளிப் பருதி ஊடகத்தின் இலைமன் ஆல்பா செம்பெயர்வு உமிழ்வுக்கான சிலிக்கான் காணி அல்லது ஒற்றி தொழில்நுட்பங்களில் ஆர்வம் பூண்டிருந்தார்.[14] இவர் டெல்ட்டா மாசேற்ற மின்னூட்டப் பிணைப்புக் கருவிகளின் தெறிப்பெதிர்ப்புப் பூச்சுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, இந்தப் பூச்சுகளின் புற ஊதா அலை நெடுக்கத் திறமையை மேம்படுத்த உதவி செய்தார்.[15][16][17] இந்தப் புதிய தொழில்நுட்பத்தை ஓர்வுசெய்யவே இரண்டாம் தீப்பந்துக்கலம் (பயர்பால்-2) உருவாக்கப்பட்டது.[8] மின்னன்பெருக்க மின்னூட்டப் பிணைப்புக் கருவிகள் தூண்டல், சூழல் மின்னூட்டங்களால் தாக்கமுற வாய்ப்புள்ளதால், அவற்றின் இரைச்சலைச் சிறுமம் ஆக்க, கவனமாக வடிவமைத்த உருவமுள்ள நிறவியைபுக் கடிகாரங்கள் தேவைப்படுகின்றன.[18][19] இவர் இரண்டாம் தீப்பந்துக்கலத் திட்டத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் அது ஏவப்பட்ட 2018 செப்டம்பர் 22 ஆம் நாள் வரை பணிபுரிந்தார். இவர் 2018 இல் நியூமெக்சிகோ நகர த்துப் போர்ட் சம்மர் பகுதியில் இரண்டாம் தீப்பந்துக்கலக் கருவியைத் தொடுத்துப் பூட்டியபோது உடன் இருந்துள்ளார். அப்போது தீப்ப்ந்துக்கலத்தின் தொலநோக்கி மீது ஒரு பால்கன் பறவை வந்தமர்ந்துள்ளது.[20]
ஏம்தென் கோடார்டு விண்வெளிப் பறப்பு மையத்தின் அண்டத் தோற்ற அறிவியல் பணிக்குழு உறுப்பினர் ஆவார்.[21] இவர் 2019 அம் ஆண்டைய TED ஆய்வுத்தகைமைக்குத் தெரிவுசெய்த 20 பேரில் ஒருவர் ஆவார் .[22][23] இவரது TED உரை 2019 ஏப்பிரல் கருத்தரங்க உரைகளில் சிறந்ததாகத் தெரிவு செய்யப்பட்டது. இவ்வுரையை ஒயர்டு இதழ் முழுமையாக வெளியிட்டது.[24][25]