எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள் (Timeline of Jerusalem) என்பது உலகத்தில் பல மதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகராக விளங்குகின்ற எருசலேம் வரலாற்றில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஆகும்.
எருசலேமின் நீண்டகால வரலாற்றின்போது அந்நகரம் இருமுறை அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; 23 தடவை முற்றுகையிடப்பட்டது; 52 தடவை தாக்குதலுக்கு உள்ளானது; 44 தடவை கைப்பற்றப்பட்டது. நகரத்தின் பழைய பகுதியில் கி.மு. 4ஆம் ஆயிரமாண்டிலிருந்தே மக்கள் குடியேற்றம் இருந்துவந்துள்ளது. இவ்வாறு எருசலேம் உலகப் பழம் நகரங்களுள் ஒன்றாக எண்ணப்படுகிறது. மதில்சுவர்களைக் கொண்ட பழைய எருசலேம் உலகப் பாரம்பரியச் சொத்து (World Heritage) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு குடியிருப்புகளை உள்ளடக்கியது. அவை: அர்மீனியக் குடியிருப்பு, கிறித்தவக் குடியிருப்பு, யூத குடியிருப்பு, முஸ்லிம் குடியிருப்பு என்பனவாகும்.
எருசலேமின் வரலாற்றில் பல நிகழ்வுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானவை கீழே தரப்படுகின்றன [1].
பழங்காலம்
கி.மு. 4000 ஆண்டுகள்: செப்புக் காலம்: எருசலேமில் மக்கள் குடியேறிய தடயங்கள் உள்ளன.
கி.மு. 3000 ஆண்டுகள்: நிலையான குடியிருப்புகள் உருவாயின.
கி.மு. சுமார் 2600: எருசலேம் நகர் நிறுவப்பட்டது.
கி.மு. சுமார் 1000: தாவீது மன்னர் எபூசியர் என்னும் இனத்தாரிடமிருந்து எருசலேமைக் கைப்பற்றினார்; தன் அரசின் தலைநகரை அங்கு நிறுவினார். தாவீது அரண்மனையின் பகுதிகள் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
கி.மு. 970: தாவீதின் ஆட்சி இறுதியில் அவர்தம் மகன் சாலமோன் அரசரானார். அவர் மொரியா மலையில் பெரியதொரு கோவில் கட்டினார். இது "முதல் கோவில்" என்றும் "சாலமோனின் கோவில்" என்றும் பின்னர் அழைக்கப்பட்டது. யூத வரலாற்றில் முதன்மை வாய்ந்த இக்கோவிலில் "உடன்படிக்கைப் பேழை" வைக்கப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு மேலாக எருசலேம் நகர் இசுரயேல் மற்றும் யூதா அரசுகள் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. இக்காலம் "முதல் கோவில் காலம்" என்று அழைக்கப்படுகிறது. எருசலேம் கோவில் யூதர்களின் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்தது.
கி.மு. சுமார் 930: சாலமோன் மன்னரின் இறப்பு. ஐக்கிய அரசு "இசுரயேல் நாடு" (வடக்கு) என்றும், "யூதா நாடு" (தெற்கு) என்றும் பிளவுபட்டது. வட நாட்டில் பத்து குலத்தவரும் தென்னாட்டில் இரு குலத்தவரும் அடங்குவர். தென்னாட்டின் தலைநகராக எருசலேம் தொடர்ந்து இருந்துவந்தது.
கி.மு. 722: அசீரியர்கள் இசுரயேல் நாட்டின்மீது வெற்றிகொண்டனர். வட நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த பலர் தென்னாடு சென்று எருசலேமில் குடியேறினர்.
கி.மு. 587 பாபிலோனியர் தென்னாட்டையும் அதன் தலைநகர் எருசலேமையும் கைப்பற்றினர். சாலமோனின் கோவிலை அழித்துத் தரைமட்டமாக்கினர். யூத மக்களும் தலைவர்களும் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் ("பாபிலோனிய அடிமைத்தனம்" - Babylonian Captivity).
கி.மு. 538: பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூத மக்கள் 50 ஆண்டுகள் துன்பத்திற்குப் பிறகு தம் சொந்த நாடு திரும்பவும் எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்பவும் பாரசீக மன்னன் சைரசு இசைவு அளித்தார். எருசலேமில் "இரண்டாம் கோவில்" கி.மு. 516இல் கட்டியெழுப்பப்பட்டது. அது தாரியுசு மன்னன் காலம்; முதல் கோவில் அழிந்து 70 ஆண்டுகளுக்குப் பின் புதிய கோவில் எழுந்தது.
கி.மு. சுமார் 445: பாரசீக மன்னன் முதலாம் அர்த்தக்சஸ்தா எருசலேமின் மதில்சுவர்களைக் கட்ட இசைவு அளித்தார். யூத மக்களின் தலைநகராகவும் வழிபாட்டு மையமாகவும் எருசலேம் மீண்டும் உருவெடுத்தது.
செவ்விய முற்காலம்
கி.மு. 322: பாரசீகப் பேரரசை முறியடித்த பெரிய அலெக்சாண்டர் எருசலேமைக் கைப்பற்றினார். அலக்சாந்தரின் இறப்புக்குப் பின் எருசலேம் தாலமி வழியினரின் ஆட்சிக்கு உட்பட்டது.
கி.மு. 198: செலூக்கிய வழியினராகிய மூன்றாம் அந்தியோக்கு என்பவர் ஐந்தாம் தாலமியை முறியடித்து எருசலேமைக் கைப்பற்றினார். செலூக்கியர் எருசலேமில் கிரேக்க கலாச்சார முறைகளை வலிந்து திணித்ததால் அதை எதிர்த்து யூத இனத்தவரான மக்கபேயர் கி.மு. 167இல் கிளர்ச்சி செய்தார்கள். அவர்கள் கி.மு. 164இல் யூத மரபுக்கு உகந்த விதத்தில் அரசு நிறுவினார்கள். சில ஆண்டுகளுக்குப் பின் செலூக்கியர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்கள்.
உரோமையர் காலம்
கி.மு. 63: பொம்பேயி என்னும் உரோமைத் தளபதி எருசலேமைக் கைப்பற்றினார். எருசலேம் கோவிலினுள் நுழைந்த பொம்பேயி அங்கிருந்த புனிதப் பொருள்களை விட்டுவைத்தார்.
கி.மு. 54: உரோமைத் தளபதி கிராஸ்ஸசு (Crassus) எருசலேம் கோவிலைச் சூறையாடினார்; அங்கிருந்த பொன்னைக் கவர்ந்தார்.
கி.மு. 37: உரோமையரின் ஆட்சியின் கீழ் எருசலேம் யூதேயாவின் தலைநகர் ஆகியது. இதுமேய இனத்தவரான ஏரோது யூதேயாவின் ஆட்சியாளராக உரோமையரால் நியமிக்கப்பட்டார்.
கி.மு. 19: (முதலாம்) ஏரோது "கோவில் மலை" என்னும் பகுதியை இருமடங்காக விரிவாக்கி, அங்கு உரோமைக் கலைப் பாணியில் கோவில் கட்டினார் ("ஏரோது கோவில்"). "மேற்குச் சுவர்" என்னும் பகுதியையும் பல அரண்மனைகளையும் கட்டினார்.
இயேசுவின் காலமும் கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளும்
கி.மு. சுமார் 6: எருசலேம் அருகிலுள்ள பெத்லகேமில்இயேசு பிறந்தார். எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டார். தம் 12ஆம் வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்று மறை அறிஞரோடு விவாதித்தார்.
கி.பி. 6: பெரிய ஏரோது இறந்தார். யூதேயாவில் ஏரோதின் வாரிசுகள் ஆண்டபோதிலும், அது யூதேயா மண்டலம் என்னும் பெயரில் உரோமையரின் நேரடி ஆளுகையின் கீழ் வந்தது.
கி.பி. சுமார் 26-28: மூன்று ஆண்டுகாலம் இயேசு மக்களுக்குக் கடவுள் ஆட்சி பற்றிய நற்செய்தியை எடுத்துரைத்தார். ஏரோது கட்டியெழுப்பிய எருசலேம் கோவிலுக்குச் சென்று அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தோரை இயேசு விரட்டினார்.
கி.பி. 37-40: உரோமைப் பேரரசு முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது யூதர்களுக்கும் உரோமையருக்குமிடையே பிளவு ஏற்பட்டது. கலிகுலா மன்னன் காலம்.
கி.பி. 50: எருசலேமில் கூடிய சங்கத்தில் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் சமய, சமூக, வழிபாட்டு முறைகளில் வேறுபாடு உள்ளது என்று ஏற்கப்பட்டது.
தார்சு நகரைச் சார்ந்த பவுல் என்னும் கிறித்துவின் திருத்தூதர் கிறித்தவ சமயத்தைப் போதித்ததற்காக எருசலேமில் கைதுசெய்யப்பட்டார். எருசலேம் கோவிலில் அவரை ஒரு கும்பல் தாக்கியது. அவர் யூத சங்கத்தின்முன் தன்னிலை விளக்கம் தந்தார்.
கி.பி. 66-73: யூதர்களுக்கும் உரோமையர்களுக்கும் இடையே நிகழ்ந்த முதல் போர்.
கி.பி. 70: உரோமைப் பேரரசின் படைகள் எருசலேமை முற்றுகையிட்டன. தீத்து என்னும் உரோமைத் தளபதி (பின்னாளில் பேரரசன்) யூதக் கலவரத்தை அடக்கி, எருசலேமில் அமைந்திருந்த ஏரோதின் கோவிலைத் தரைமட்டமாக்கினார். உரோமைப் படைகள் எருசலேமில் முகாமிட்டன.
கி.பி. 90-96: டொமீசியன் மன்னன் காலத்தில் உரோமைப் பேரரசு முழுவதும் கிறித்தவரும்யூதரும் கொடுமைக்கு உள்ளாயினர்.
கி.பி. 117: எருசலேமின் ஆயர் சிமியோன் நகரின் அருகே சிலுவையில் அறையுண்டு கொல்லப்பட்டார். மன்னன் திரயான் காலம்.
கி.பி. 132-135: பார் கோக்பா என்பவரின் தலைமையில் யூதர்கள் உரோமையருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சியை உரோமையர் அடக்கினார்கள். ஹேட்ரியன் மன்னன் எருசலேமின் இடிபாடுகளைச் சென்று பார்த்துவிட்டு, அங்கு உரோமைப் பாணியில் புதியதொரு நகர் எழுப்பி, உரோமைக் கடவுளர்க்குக் கோவில்கள் கட்டவும், குறிப்பாக சூஸ் என்னும் தலைமைக் கடவுளுக்குக் கோவில் அமைக்கவும் தீர்மானித்தார். இதை யூதர்கள் எதிர்த்தார்கள். யூதர்கள் எருசலேமுக்குச் சென்று வழிபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது.
கி.பி. சுமார் 136-140: எருசலேமில் கோவில் மலையின் மீது சூஸ் கடவுளுக்குக் கோவில் கட்டப்பட்டது. வீனஸ் கடவுளுக்கு மண்டை ஓடு என்று பொருள்படும் கல்வாரி மலைமேல் கோவில் கட்டப்பட்டது.
கி.பி. 259: உரோமை அரசன் வலேரியன் தோல்வியுற்றதைத் தொடர்ந்து உரோமை அரசு சிதறுண்டது. ஆனால் கி.பி. 272இல் அவுரேலியன் மன்னன் எருசலேமை மீண்டும் உரோமை ஆதிக்கத்தின் கீழ்க் கொணர்ந்தார்.
கி.பி. 300-629
கி.பி. 312: உரோமையில் முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னன் கிறித்தவ சமயத்தைத் தழுவினார். மறு ஆண்டில், உரோமைப் பேரரசு முழுவதிலும் கிறித்தவ சமயம் நிலவுவதற்குத் தடையில்லை என்று சட்டம் இயற்றினார். அச்சட்டம் "மிலான் சாசனம்" (Edict of Milan) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, எருசலேமில் "திருக் கல்லறை சகோதரத்துவம்" என்னும் அமைப்பு நிறுவப்பட்டது.
கி.பி. 324-325: முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசை ஒன்றிணைத்தார். முதலாம் நீசேயா சங்கத்தைக் கூட்டினார். அது எருசலேமை ஓர் உயர் மறைமாவட்டமாக நிறுவியது. கிறித்தவர்கள் எருசலேமில் குடியேறத் தொடங்கினர்.
கி.பி. சுமார் 325: யூதர்கள் எருசலேமுக்குள் நுழைவதற்கு இடப்பட்டிருந்த தடை தொடர்ந்தது. ஆண்டுக்கு ஒருமுறை பேரழிவு நாளில் மட்டும் எருசலேம் மேற்குச் சுவருக்குச் சென்று இறைவேண்டல் செய்ய அவர்களுக்கு இசைவு அளிக்கப்பட்டது.
கி.பி. 326: முதலாம் கான்ஸ்டன்டைன் மன்னரின் தாய் புனித ஹெலன் என்பவர் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றார்; ஹேட்ரியன் மன்னன் எழுப்பியிருந்த வீனஸ் கோவிலை அகற்றினார்; அப்பகுதியில் தோண்டியபோது இயேசு இறந்த சிலுவை, சிலுவையில் அறையப்பட்ட ஆணிகள் மற்றும் இறந்த அவரது உடலைச் சுற்றியிருந்த துணி ஆகியவற்றை ஹெலன் கண்டெடுத்தார்.
கி.பி. 335: இயேசு இறந்த இடத்தின்மீது, கல்வாரி மலையில் முதல் "திருக்கல்லறைக் கோவில்" கட்டப்பட்டது.
கி.பி. 347: எருசலேம் ஆயர் சிரில் கிறித்தவ மறை பற்றி விளக்கவுரை வழங்கினார் (Mystagogy).
கி.பி. 361: கிறித்தவ மறையின் செல்வாக்கைக் குறைத்து, பிற சமயங்களை ஆதரிக்கும் வகையில் ஜூலியன் மன்னன் எருசலேமில் யூதக் கோவிலைக் கட்ட ஊக்கமளித்தார். யூதர்கள் எருசலேமுக்குத் திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது.
கி.பி. 363: கலிலேயப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூலியன் மன்னன் சமாரா போரில் இறந்தார். கிறித்தவம் செல்வாக்குப் பெற்றது. இக்காரணங்களின் விளைவாக எருசலேமில் யூத கோவில் கட்டும் முயற்சி கைவிடப்பட்டது.
கி.பி. 380: முதலாம் தியொடேசியுசு மன்னன் கிறித்தவத்தை நாட்டு மதமாக அறிவித்தார். பின்னர் உரோமைப் பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, எருசலேம் கீழைப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. கீழைப் பேரரசு பிசான்சியம் (Byzantium/Byzantine Empire) என்னும் பெயரால் அறியப்பட்டது.
கி.பி. சுமார் 300: திரான்னியுசு ருஃபீனிசு (Tyrannius Rufinus) என்பவரும் மூத்த மெலானியா (Melania the Elder) எருசலேமில் ஒலிவ மலைமீது முதல் துறவியர் இல்லத்தை நிறுவினார்கள்.
கி.பி. 386: புனித ஜெரோம் என்பவர் எருசலேக்குச் சென்று, விவிலியத்தைஎபிரேயம், கிரேக்கம் ஆகிய மூல மொழிகளிலிருந்து இலத்தீன் மொழியில் பெயர்க்கும் பணியைத் தொடங்கினார். இம்மொழிபெயர்ப்பு பொது மொழிபெயர்ப்பு (Vulgata = Vulgate) என்று அழைக்கப்படுகிறது. இப்பணியைச் செய்யுமாறு திருத்தந்தை முதலாம் தாமசுஸ் (Pope Damasus I) ஜெரோமைக் கேட்டுக்கொண்டார். பின்னர் ஜெரோம் பெத்லகேம் சென்று மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்ந்தார்.
கி.பி. 394: எருசலேமின் ஆயர் இரண்டாம் ஜாண் என்பவர் அந்நகரில் இயேசு இறுதி இரா உணவை உண்ட இடமாகக் கருதப்படும் மேலறை இருந்த இடத்தில் தூய சீயோன் கோவில் என்னும் கட்டடத்தை எழுப்பினார்.
கி.பி. 451: கால்செதோன் பொதுச்சங்கம் எருசலேம் நகர் உயர் ஆயர் பீடமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. எருசலேம் நகர் யூவெனால் என்பவர் அந்நகரின் முதுநிலை ஆயர் ஆனார்.
கி.பி. சுமார் 600: திருத்தந்தை முதலாம் கிரகோரி திருநாட்டிற்கு (Holy Land) வரும் திருப்பயணியர்க்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக மருத்துவ மனையொன்றை நிறுவும் பணியை ரவேன்னா நகர் ப்ரோபுசு என்னும் தலைமைத் துறவியிடம் ஒப்படைத்தார்.
கி.பி. 610: முசுலிம்கள் கருத்துப்படி, தொழுகையின்போது எருசலேமில் அமைந்துள்ள கோவில் மலையை நோக்கும் பழக்கம் தொடங்கியது. இது 18 மாதங்கள் நீடித்தது என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் இது 13 ஆண்டுகள் நீடித்தது என்பர்.
கி.பி. 610: யூதர்கள் பிசான்சிய அரசர் ஹெராக்லியுசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். கிளர்ச்சி அந்தியோக்கியாவிலிருந்து தொடங்கி எருசலேம் உட்பட்ட பிற நகர்களுக்கும் பரவியது.
கி.பி. 614: எருசலேம் முற்றுகையிடப்பட்டது. பிசான்சிய பேரரசுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையே நிகழ்ந்த போரில் (602-628) சாசானிய மன்னர் இரண்டாம் கொசாரு என்பவரின் தளபதி ஷார்பாராஸ் எருசலேமைக் கைப்பற்றினார். யூதரும் சாசானியரோடு சேர்ந்துகொண்டார்கள். எருசலேமில் திருக்கல்லறைக் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது. முது ஆயர் சக்கரியா கைதுசெய்யப்பட்டார். இயேசு இறந்த சிலுவையாகிய திருப்பொருளும் பிற திருப்பொருள்களும் (இன்றைய பாக்தாத் நகருக்கு அருகில் உள்ள) டெசிஃபோன் (Ctesiphon) நகருக்கு கடத்தப்பட்டன. கிறித்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். எருசலேம் பெரும் அழிவைச் சந்தித்தது.
கி.பி. 617: நெகமியா பென் ஹுஷியெல் என்னும் யூத ஆளுநர் கொல்லப்பட்டார். சாசானியர் கலகத்தை அடக்கி, ஒரு கிறித்தவ ஆளுநரை நியமித்தனர்.
கி.பி. 620: இசுலாமியர் நம்பிக்கைப்படி, முகமது நபி "இரவுப் பயணம்" (Isra and Mi'raj) [2] மேற்கொண்டு எருசலேம் சென்று, ஆபிரகாம், மோசே, இயேசு ஆகிய இறைத்தூதர்களைச் சந்த்தித்து, விண்ணகம் சென்று திரும்பினார்.
கி.பி. 624: முசுலிம்கள் எருசலேமை நோக்கி தொழுகை செய்யும் பழக்கத்தை விட்டுவிட்டு மெக்காவை நோக்கித் தொழுகை செய்யும் பழக்கம் தொடங்கியது.
கி.பி. 629: பிசான்சிய மன்னர் ஹெராக்லியசு நினிவே போரில் (627) சாசானியரைத் தோற்கடித்து எருசலேமைத் திரும்பவும் கைப்பற்றினார். இயேசு இறந்த சிலுவை எருசலேமுக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
ராசிதுன், உமய்யா, அப்பாசியக் கலீபகங்களின் காலம்
கி.பி. 636-637: யார்முக் என்னும் இடத்தில் நிகழ்ந்த போரில் உமர் கலீபா பிசான்சிய அரசை முறியடித்து எருசலேமைக் கைப்பற்றி அங்கு நுழைந்தார். கிறித்தவர்களுக்கு சமய சுதந்திரம் வழங்கப்பட்டாலும் யூதர் எருசலேமில் தங்குவதற்குத் தடையிடப்பட்டது.
கி.பி. 638: அர்மீனிய திருத்தூதுச் சபை எருசலேமில் தன் சபை ஆயரை நியமிக்கத் தொடங்கியது.
கி.பி. 687-691: எருசலேமில் கலீபா அபுத் அல்மாலிக் இபன் மர்வான் என்பவர் பாறைக் குவிமுக மாடம் கட்டியெழுப்புகிறார். இதுவே முதலில் எழுந்த இசுலாமிய கட்டடக் கலைச் சாதனை ஆகும். அரபியில் ஹரம் அஷ்-ஷரிஃப் என்று அழைக்கப்படும் இக்கட்டடம் மலைக் கோவில் பகுதியைக் கி.மு. 70இல் தீத்து அழித்ததிலிருந்து 600 ஆண்டுகளாகக் கட்டப்படாமல் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 705: முதலாம் அல்-வாலித் என்னும் உமய்யா கலீபா அல்-அக்சா மசூதியை கட்டியெழுப்பினார்.
கி.பி. 730-749: தமஸ்கு நகர் ஜாண் என்னும் கிறித்தவர் ஹிஷம் இபன் அபுத் அல்-மாலிக் என்னும் கலீபாவுக்கு ஆலோசகராக இருந்தார். பின்னர் அவர் எருசலேமுக்கு வெளியே இருந்த மார் சாபா என்னும் துறவியர் இல்லம் சென்றார். கிறித்தவ நூல்கள் பலவற்றை இயற்றினார்.
கி.பி. 744-750: இரண்டாம் மர்வான் ஆட்சியில் எருசலேமிலும் பிற சில சிரிய நகர்களிலும் ஏற்பட்ட கலவரங்கள் அடக்கப்பட்டன. சாப் ஆற்றங்கரையில் (ஈராக்) 750இல் நிகழ்ந்த போரில் உமய்யா படையை அப்பாசிய படை முறியடித்தது. இரண்டாம் மர்வான் எருசலேம் வழியாக எகிப்துக்குத் தப்பியோடி, அங்கே கொல்லப்பட்டார். இவ்வாறு உமய்யா கலீபகம் முடிவுக்கு வந்தது; அப்பாசியக் கலீபகம் தொடங்கியது. எருசலேம் உட்பட கலீபகம் முழுவதும் அப்பாசியர் கைவசம் ஆயிற்று.
கி.பி. 793-796: பாலஸ்தீனத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.
கி.பி. 797: அப்பாசியக் கலீபாக்களுள் மிகப் புகழ்பெற்ற ஹாரூன் அல்-ரஷீத் என்பவருக்கு சார்லிமேன் மன்னர் தூது அனுப்பினார். இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. எருசலேமில் இருந்த திருத்தலங்களைக் காக்கும் பொறுப்பை ஹாரூன் சார்லிமேனுக்குக் கொடுத்தார் எனத் தெரிகிறது. எருசலேமில் திருக்கல்லறைக் கோவில் புதுப்பிக்கப்பட்டது; இலத்தீன் மருத்துவமனை விரிவாக்கப்பட்டு பெனதிக்து சபைத் துறவியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கி.பி. 799: சார்லிமேன் எருசலேம் முது ஆயர் ஜார்ஜ் என்பவருக்குத் தூது அனுப்பினார்.
கி.பி. 813: ஹாரூன் அல்-ரஷீதின் மகன் அல்-மாமூன் எருசலேமுக்கு வருகைதந்து, பாறைக் குவிமுக மாடத்தில் புதுப்பிப்பு வேலைகள் நிகழ ஏற்பாடு செய்தார்.
கி.பி. 966: அல்-முக்கதாசி என்னும் புவியியல் அறிஞர் எருசலேமிலிருந்து பயணமாகப் பாலஸ்தீனம் முழுவதும் சென்று, இருபது ஆண்டு ஆய்வு அடிப்படையில் புவியியல் நூலை எழுதினார்.
பாத்திம கலீபகக் காலம்
கி.பி. 969: ஷியா பிரிவைச் சார்ந்த இஸ்மயேல் பாத்திம தளபதியான காவ்கார் அல்-சிக்கில்லி என்பவர் அப்பாசியக் கலீபகத்தின் இக்ஷிட்டி பகுதியைக் கைப்பற்றினார். எருசலேமையும் உள்ளடக்கிய இப்பகுதியில் சுன்னி முசுலீம்களுக்கு மத உரிமை வழங்கப்பட்டது.
கி.பி. 1009: பாத்திம கலீபா அல்-ஹாக்கிம் என்பவர் எருசலேமில் இருந்த திருக்கல்லறைக் கோவில் உட்பட அனைத்து கிறித்தவக் கோவில்களையும் இடித்துத் தள்ளுமாறு ஆணையிட்டார்.
கி.பி. 1016: பாத்திம கலீபகத்தின் ஏழாம் கலீபாவாகிய அலி அஸ்ஸாகீர் என்பவர் எருசலேமில் பாறைக் குவிமுக மாடத்தைப் புதுப்பித்தார்.
கி.பி. 1030: அலி அஸ்ஸாகீர் பிசான்சிய மன்னர் மூன்றாம் ரோமானோஸ் என்பவரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எருசலேமில் அமைந்த திருக்கல்லறைக் கோவிலையும் பிற கிறித்தவக் கோவில்களையும் மீண்டும் கட்டியெழுப்ப இசைவு வழங்கினார்.
கி.பி. எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான பொருளுதவியை பிசான்சிய அரசர் ஒன்பதாம் கான்ஸ்டன்டைன் வழங்கினார்.
கி.பி. 1054: கிறித்தவ திருச்சபை இரண்டாகப் பிளவுபட்டது. உரோமையின் கீழ் மேற்கு கிறித்தவமும், கான்ஸ்டான்டிநோபிளின் கீழ் கீழைக் கிறித்தவமும் செயல்படலாயின. எருசலேம் நகரில் இருந்த முது ஆயர் கான்ஸ்டான்டிநோபிளில் அமைந்த கீழைக் கிறித்தவத்தோடு சேர்ந்தார். இவ்வாறு திருநாட்டின் எல்லாக் கிறித்தவர்களும் கீழைக் கிறித்தவர்களாகக் கருதப்பட்டனர். இந்நிலையை மாற்றுவதும் சிலுவைப் போர்கள் நிகழ்வதற்குக் காரணமாயிது.
கி.பி. 1073: துருக்கிய-பாரசீக-சுன்னி ஆட்சியமைப்பைச் சார்ந்த முதலாம் மாலிக்-ஷா எருசலேமைக் கைப்பற்றினார்.
கி.பி. 1077: எருசலேமில் நடந்த கலவரத்தைக் காரணமாகக் காட்டி, அதன் ஆட்சியாளர் அட்சிஸ் இபத் உவாக் என்பவர் அங்கு வாழ்ந்துவந்த எண்ணிறந்த மக்களைக் கொன்றுகுவித்தார்.
கி.பி. 1095-1096: அல்-கசாலி எருசலேமில் வாழ்ந்த காலம்.
கி.பி. 1095: கிளேர்மோன் நரில் நிகழ்ந்த சங்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் எருசலேம் போன்ற திருத்தலங்களை உள்ளடக்கிய திருநாட்டை விடுவிக்க சிலுவைப் போர் நிகழ்த்துவது பொருத்தமே என்று அறிவித்தார்.
கி.பி. 1098: பாத்திமக் கலீபகத்தைச் சேர்ந்த அல்-அஃப்டல் ஷாகான்ஷா என்பவர் எருசலேமை மீண்டும் கைப்பற்றினார்.
சிலுவை வீரர்கள் எருசலேம் இராச்சியத்தை நிறுவதல்
கி.பி. 1099: முதலாம் சிலுவைப் போர். பிசான்சிய மன்னர் முதலாம் அலக்சியோஸ் கொம்மேனோஸ் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க, திருத்தந்தை இரண்டாம் அர்பன் என்பவர் ஐரோப்பாவிலிருந்து ஒரு படையை அனுப்பியது சிலுவைப் போருக்கு அடித்தளமாயிற்று. போர்வீரர்களும் குடியானவர்களும் அடங்கிய சிலுவை வீரர்கள் தங்கள் உடைகளில் சிலுவைச் சின்னத்தைக் குறித்துக்கோண்டு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் எகிப்து பாத்திம நகரையும் பின்னர் அந்தியோக்கியாவையும் தம் வயம் கொணர்ந்தனர். முசுலிம்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட திருநாட்டை மீட்டெடுப்பதற்காகவும், அங்கிருந்த கீழை முறைக் கிறித்தவர்களை விடுவிப்பதற்காகவும், கிறித்தவத் திருப்பயணிகள் எருசலேம் போன்ற திருத்தலங்களைச் சந்திக்க வழிவகுப்பதற்காகவும் தொடங்கப்பட்ட சிலுவைப் போரில் எருசலேம் கிறித்தவர்கள் கைக்கு மாறியது. நகரில் வாழ்ந்த யூதர் மற்றும் முசுலிம்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலுவை அரசு/எருசலேம் இராச்சியம் நிறுவப்பட்டது. இவ்வாறு 461 ஆண்டு இடைவெளிக்குப்பின் எருசலேம் மீண்டும் கிறித்தவர் ஆட்சி வசமானது.
சிலுவை வீரர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேமில் இருந்த பாறைக் குவிமுக மாடம் ஒரு கிறித்தவக் கோவிலாக மாற்றப்பட்டது. பூயோன் நகர காட்ஃப்ரீ (Godfrey of Bouillon) என்பவர் திருக்கல்லறைக் காவலர் என்னும் பட்டத்தோடு கிறித்தவ எருசலேம் இராச்சியத்தை ஆளத் தொடங்கினார்.
கி.பி. 1104: அல்-அக்சா மசூதி எருசலேம் இராச்சியத்தின் அரண்மனையாக மாற்றப்பட்டது..
கி.பி. 1112: கத்தோலிக்கர் அல்லாத பிற கிறித்தவர் திருக்கல்லறைக் கோவிலில் வழிபாடு நடத்த தடை.
கி.பி. 1113: மருத்துவ வீரர் (Knights Hospitaller) குழு எருசலேமில் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே 1023இல் தொடங்கி செயல்பட்ட மருத்துவ மனை எருசலேமில் இருந்தது. அதில் திருப்பயணிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ வீரர் குழு திருப்பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், திருநாட்டைக் காக்கவும் உதவினார்கள்.
கி.பி. 1119: கோவில் வீரர் குழு (Knights Templar) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு, அல்-அக்சா மசூதியில் அமைப்பிடம் பெற்றது.
கி.பி. 1138: எருசலேமில் புனித அன்னா கோவில் கட்டப்பட்டது.
கி.பி. 1149: முன்னால் அழிவுக்கு உட்பட்ட திருக்கல்லறைக் கோவில் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.
கி.பி. 1170-1184: தீர் நகர வில்லியம் என்பவர் எருசலேமின் வரலாறு என்னும் சிறப்புமிக்க நூலை எழுதினார்.
எருசலேம் கிறித்தவர் கைகளிலிருந்து மாறுதல்
கி.பி. 1187: சலாதீன் எருசலேமை முற்றுகையிட்டு, அங்கிருந்த கிறித்தவ எருசலேம் இராச்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். யூதர்களும் மரபுவழிக் கிறித்தவரும் எருசலேமில் வழிபட அனுமதித்தார். பாறைக் குவிமுக மாடம் மீண்டும் இசுலாமிய வழிபாட்டிடமாக மாற்றப்பட்டது.
கி.பி. 1192: எருசலேமை மீட்டெடுக்க மூன்றாம் சிலுவைப் போர் தொடங்கப்பட்டது. சிங்க இதய ரிச்சர்ட் (Richard the Lionheart) என்பவரின் தலைமையில் நிகழ்ந்த போர் தோல்வியில் முடிந்தது. ரம்லா ஒப்பந்ததின்படி சலாதீன் மேற்குக் கிறித்தவர்கள் எருசலேமில் சுதந்திரமாக வழிபடலாம் என்று அனுமதி வழங்கினார்.
கி.பி. 1193: திருக்கல்லறைக் கோவிலுக்கு வெளிப்புறத்தில் உமர் மசூதியைசலாதீன் கட்டினார். உமர் என்னும் இரண்டாம் கலீபா கி.பி.634 முதல் கி.பி. 644 வரை ஆட்சி செய்தவர். திருக்கல்லறைக் கோவிலின் உள்ளே இசுலாமியத் தொழுகை நடத்தாமல், கிறித்தவர்களின் சமய உணர்வை மதித்து, அக்கோவிலுக்கு வெளியே தொழுகை செய்தார் என்று இவரைப் பற்றிக் கூறப்படுகிறது. இப்பின்னணியில் சலாதீன் உமரின் பெயரைச் சிறப்பிக்கும் வண்ணம் உமர் மசூதியைத் திருக்கல்லறைக் கோவிலுக்கு வெளியே கட்டினார்.
கி.பி. 1193: எருசலேமில் மரோக்கிய பகுதி உருவானது.
கி.பி. 1212: இங்கிலாந்திலிருந்திம் பிரான்சிலிருந்தும் 300 யூத குருக்கள் எருசலேமில் குடியேறினார்கள்.
கி.பி. 1219: அரண்செய்யப்பட்ட எருசலேம் நகரைச் சிலுவைப் போர் வீரர்கள் கைப்பற்றுவதைத் தடுக்க அந்நகர மதில்சுவர்களை தமஸ்கு நகர் ஆட்சியாளர் இடித்துத் தள்ளினார்.
கி.பி. 1219: ஜாக் டெ விட்றி என்பவர் எருசலேமின் வரலாறு என்னும் நூலை எழுதினார்.
கி.பி. 1229: புனித உரோமைப் பேரரசர் ஃப்ரெடெரிக் என்பவர் எருசலேமை கைப்பற்றச் சென்றார். அங்கு சுல்தான் அல்-கமில் என்பவரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கிறித்தவர்கள் எருசலேமில் வாழ அனுமதிக்கப்பட்டனர். இசுலாமியர் கையில் அவர்களது புனித இடங்கள் தொடர்ந்து இருந்துவந்தன.
கி.பி. 1244: எருசலேம் நகர் முற்றுகையிடப்பட்டது. தொடர்ந்து அழிவுக்கு உள்ளானது. சிலுவை வீரர் ஆட்சி மறைந்தது.
கி.பி. 1248-50: எருசலேமைக் கைப்பற்ற பிரான்சு அரசர் ஒன்பதாம் லூயி என்பவர் ஏழாம் சிலுவைப் போரைத் தொடங்கினார். போர் தோல்வியில் முடிந்தது.
கி.பி. 1260: மங்கோலியர் எருசலேமைத் தாக்கினார்கள். அயின் ஜாலுட் சண்டையில் அவர்கள் தோல்வியுற்றனர்.
கி.பி. 1267: நாமானிடஸ் என்னும் யூத அறிஞர் ஐரோப்பாவிலிருந்து வந்து எருசலேமில் மேற்குச் சுவரின் முன் இறைவேண்டல் செய்தார். அப்போது எருசலேமில் இரண்டு யூத குடும்பங்கள் மட்டுமே இருக்கக் கண்டார்.
கி.பி. 1330: மங்கோலியர் மீண்டும் எருசலேமைத் தாக்கினர்.
கி.பி. 1340: எருசலேமில் அர்மீனிய முது ஆயர் அர்மீனியப் பகுதியைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் எழுப்பினார்.
கி.பி. 1347: கருப்புக் கொள்ளை நோய் (Black Death) என்னும் கொடிய நோய் எருசலேமில் பரவி எண்ணிறந்த மக்கள் அழிந்தனர்.
கி.பி. 1392-1393: இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஹென்றி எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றார்.
கி.பி. 1482: புனித தோமினிக் சபைக் குரு ஃபெலிக்ஸ் ஃபாப்ரி என்பவர் எருசலேமுக்குச் சென்றார். அங்கு கிரேக்கர், சிரியர், அபிசீனியர், ஆர்மீனியர், மரோனித்தர், யூதர் போன்ற பலர் இருந்தனர் என்றும், மேற்கு திருச்சபையினர் திருத்தந்தையின் ஆட்சியின் கீழ் எருசலேம் வர வேண்டும் என்று விரும்பினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நவீன காலத்தின் முற்பகுதி
கி.பி. 1516: மம்லுக் வம்சத்தின் கடைசி சுல்தானாக ஆட்சிசெய்த அல்-அஷ்ரஃப் கான்சு அல்-காவ்ரி என்பவரை சுல்தான் முதலாம் செலிம் என்பவர் தோற்கடித்து பாலஸ்தீனத்தை ஓட்டோமான் அரசின் கீழ் கொணர்ந்தார்.
கி.பி. 1517: முதலாம் செலின் எருசலேமுக்குத் திருப்பயணமாகச் சென்றார். இசுலாமிய உலகுக்குத் தாமே கலீபா என்று அறிவித்தார்.
கி.பி. 1541: சுல்தான் சுலைமான் (Suleiman the Magnificent) என்பவர் எருசலேம் நகரத்தின் சுவர்களைக் கட்டியெழுப்பினார்.
கி.பி. 1541: யூத மெசியா நுழைந்துவிடலாகாது என்று எருசலேம் நகரின் பொன்வாயிலை முசுலிம்கள் அடைத்துவிட்டனர்.
கி.பி. 1556: எருசலேம் நிலநடுக்கத்தால் சேதமுற்றது.
கி.பி. 1604: கிறித்தவர்கள் ஐரோப்பாவிலிருந்து எருசலேமைச் சந்திக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பிரான்சு நாட்டிலிருந்து கிறித்தவ மதப் பணியாளர்கள் எருசலேமுக்கும் பிற ஓட்டோமான் நகர்களுக்கும் செல்லத் தொடங்கினர்.
கி.பி. 1672: கிரேக்க மரபுவழித் திருச்சபையின் முது ஆயர் தோசித்தேயோஸ் நோத்தாரஸ் என்பவர் "எருசலேம் திருச்சங்கத்தைக்" கூட்டினார். பெத்லகேமில் இயேசு பிறப்புக் கோவில் அர்ச்சிக்கப்பட்டது.
கி.பி. 1703-1705: அநியாய வரியை எதிர்த்து எருசலேம் மக்கள் கிளர்ச்சி செய்தனர்.
கி.பி. 1705: யூதர்களுக்கு எதிராகக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
கி.பி. 1757: எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஆணையை ஓட்டோமான் அரசு அறிவித்தது.
கி.பி. 1774: ஓட்டோமான் பேரரசின் கீழ் வாழ்ந்த கிறித்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் சுல்தான் அப்துல்-ஹமீதுக்கும் உருசிய பேரரசி மகா கத்தரீனுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
கி.பி. 1799: எகிப்து, சிரியா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றி, எருசலேமுக்குள் நுழைய நெப்போலியன் முயன்றார். ஆனால் ஆக்கர் முற்றுகையின்போது (Siege of Acre) தோல்வியுற்றார்.
நவீன காலம்
கி.பி. 1821: ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்க சுதந்திரப் போர் பாத்ராஸ் நகரில் தொடங்கியது. எருசலேமில் இருந்த கிரேக்க மரபுவழி திருச்சபையைச் சார்ந்த கிறித்தவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் கருப்பு ஆடை அணியவேண்டும் என்றும், எருசலேம் நகரின் மதில்சுவர்களைக் கட்டியெழுப்ப வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.
கி.பி. 1831: எகிப்து ஆளுநர் முகமது அலி எருசலேமைக் கைப்பற்றினார். முதலாம் துருக்கிய-எகிப்திய போர் எழுந்தது.
கி.பி. 1834: அர்மீனியர்கள் எருசலேமில் முதல் அச்சுக்கூடத்தை நிறுவினார்கள்.
கி.பி. 1834: பாலஸ்தீனத்தில் எகிப்திய ஆட்சிக்கு எதிராக முதல் அரபுக் கிளர்ச்சி நிகழ்ந்தது.
கி.பி. 1838-1857: எருசலேமில் ஐரோப்பிய நாடுகள் தூதரகங்கள் அமைக்கத் தொடங்கின.
கி.பி. 1840: ஐரோப்பியாவில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்துக்கும் எருசலேமுக்கும் திரும்பிச் சென்று அங்குக் குடியேற வேண்டும் என்னும் கருத்து எழுந்தது.
கி.பி. எகிப்தை ஆண்டுவந்த இப்ராஹிம் பாஷா யூதர்கள் எருசலேமில் மேற்கு சுவருக்கு முன் பகுதிக்குக் கல்தரை அமைக்கக் கூடாது என்றும், அங்கு தங்களுடைய நூல்களை வெளிமுறையாகக் காட்டவோ, உரத்த குரலில் இறைவேண்டல் செய்யவோ கூடாது என்று தடை விதிக்கிறார்.
கி.பி. 1840: ஓட்டோமான் துருக்கியர் ஆங்கிலேயரின் உதவியோடு எருசலேமை மீண்டும் கைப்பற்றினார்கள்.
கி.பி. 1841 எருசலேமில் புரட்டஸ்தாந்த சபையினரின் ஒருங்கிணைந்த மறைமாவட்டம் நிறுவப்பட்டது. பிரித்தானிய மற்றும் புருஸ்ஸிய அரசுகளும், இங்கிலாந்து திருச்சபையும், புருஸ்ஸிய நற்செய்தித் திருச்சபையும் இணைந்து மேற்கூறிய மறைவாட்டத்தை உருவாக்கின. மைக்கிள் சாலமோன் அலக்சாந்தர் என்பவர் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார்.
கி.பி. 1847: சிலுவைப் போர்கள் நிகழ்ந்த காலத்துக்குப்பின் முதல் இலத்தீன் முது ஆயராக ஜுசேப்பே வலேர்கா என்பவர் நியமிக்கப்பட்டார்.
கி.பி. 1852: எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலில் எந்தப் பகுதி எந்தெந்த கிறித்தவ சபைகளுக்குச் சேரவேண்டும் என்று வரையறுத்து சுல்தான் அப்துல்மெசிட் ஆணை பிறப்பித்தார். அன்று வழங்கப்பட்ட வழிமுறைகள் இன்றும், இருபதாம் நூற்றாண்டில் வழக்கத்திலுள்ளன.
கி.பி. 1853-1854: பிரான்சு நாட்டின் ஆளுநராயிருந்த மூன்றாம் நெப்போலியன் தம் இராணுவ பலத்தாலும் பொருள் பலத்தாலும் சுல்தான் அப்துல்மெசிட் என்பவரோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி, பிரான்சு நாடும் உரோமைக் கத்தோலிக்க திருச்சபையும் திருநாட்டின்மீது முழு அதிகாரம் கொண்டிருக்கும்; எருசலேமில் உள்ள திருக்கல்லறைக் கோவிலையும் பெத்லகேம் இயேசு பிறப்புக் கோவிலையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொணரும். இந்த ஒப்பந்தம் 1774இல் உருசியாவோடு ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இருந்ததால் கிரிமேயப் போர் (Crimean War) ஏற்பட்டது.
கி.பி. 1857-1869: எருசலேமின் யூதப் பகுதி வளரத் தொடங்கியது. எருசலேமில் நிலம் வாங்கிக் குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாகியது. யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு வேண்டும் என்னும் கோரிக்கை எழுப்பப்பட்டது.
கி.பி. 1873-1875: பழைய எருசலேமுக்கு வெளியே "மேயா ஷெரிம்" (Mea Shearim) என்னும் குடியிருப்பு எழுந்தது. இதில் மரபு யூதர்கள் குடியேறினர்.
கி.பி. 1881: சிக்ககோவைச் சார்ந்த அன்னா மற்றும் ஹொரேசியோ ஸ்பாஃபோர்டு என்பவர்களின் முயற்சியால் எருசலேமில் "அமெரிக்க குடியிருப்பு" உருவானது.
கி.பி. 1881: எலியேசர் பென்-யேகுடா என்பவர் எருசலேமில் குடியேறி, நவீன எபிரேய மொழியை வளர்க்க முயற்சி மேற்கொண்டார்.
கி.பி. 1882: பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்னும் கோரிக்கையை எழுப்பிய "சீயோனியம்" (Zionism) என்னும் இயக்கத்தின் சார்பில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் ஐரோப்பிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள்.
கி.பி. 1886: உருசிய மரபுவழித் திருச்சபை எருசலேமில் புனித மகதலா மரியாவின் கோவிலைக் கட்டியது.
கி.பி. 1887-1888: ஓட்டோமான் பாலஸ்தீனம் எருசலேம், நபுலுஸ் மற்றும் ஆக்கர் என்னும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. எருசலேம் மாவட்டம் இஸ்தான்புல் நகரின் கீழ் வைக்கப்பட்டது.
கி.பி. 1897: முதல் சீயோனிய மாநாட்டில் எதிர்கால யூத நாட்டின் தலைநகராக எருசலேமை அமைப்பது என்னும் பொருள் விவாதிக்கப்பட்டது.
கி.பி. 1898: செருமானிய அரசர் கைசர் வில்ஹெல்ம் என்பவர் என்பவர் எருசலேம் சென்று, அங்கு லூத்தரன் சபைக்கு உரிய "மீட்பர்" கோவிலை அர்ப்பணிக்கிறார்.
கி.பி. 1899: எருசலேமில் புனித ஜார்ஜ் பெருங்கோவில் கட்டப்பட்டு, எருசலேம் ஆங்கிலிக்க ஆயரின் தலைமை இடமாக்கப்பட்டது.
கி.பி. 1901: எருசலேமில் சீயோனிய குடியிருப்பைக் கட்டுப்படுத்த ஓட்டோமான் அரசு தீர்மானிக்கிறது.
கி.பி. 1908:இளம் துருக்கியர் புரட்சி என்னும் அமைப்பு ஓட்டோமான் நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறது. எருசலேம் மாவட்டம் இரு பதிலாள்களை அனுப்பியது.
பிரித்தானிய ஆட்சிக் காலம்
கி.பி. 1917: முதலாம் உலகப் போரில், எருசலேம் சண்டையின்போது பிரித்தானியர் ஓட்டோமான் ஆட்சியினரைத் தோற்கடித்தனர். பிரித்தானிய இராணுவத்தின் பொதுத்தளபதி எருசலேமுக்குள் கால்நடையாக நுழைந்து அதைக் கைப்பற்றினார். இது முற்காலத்தில் (கி.பி. 637) கலீபா உமர் செய்ததைப் பின்பற்றி நிகழ்ந்தது. 1917 நவம்பர் மாதத்தில் "பால்ஃபர் அறிக்கை" (Balfour Declaration) வெளியிடப்பட்டது. அதன்படி, பிரித்தானியா பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென்று தனி நாடு அமைக்கப்படுவதற்குத் தன் ஆதரவைத் தெரிவித்தது.
கி.பி. 1918: எருசலேமில் எபிரேயப் பல்கலைக்கழகத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. 1925இல் திறந்துவைக்கப்பட்டது.
கி.பி. 1918-1920: எருசலேம் நகரம் பிரித்தானிய இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது.
கி.பி. 1920: மூசா நபி விழாவன்று பாலஸ்தீன முசுலிம்கள் பழைய எருசலேம் பகுதியில் கிளர்ச்சி செய்தனர். தங்களுக்கென்று சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு எதிராகக் கோரிக்கை எழுப்பினர். யூத குடியிருப்புகளும் கடைகளும் தாக்கப்பட்டன. இராணுவச் சட்டம் அமுலாகியது. இது அரபு-இசுரயேலி மோதலில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.
கி.பி. 1921: ஹஜ் முகம்மது அமின் அல்-ஹுசாய்னி என்பவர் எருசலேமின் பெரும் முஃப்டி (Grand Mufti) பதவிக்கு நியமிக்கப்பட்டார். எருசலேமில் உள்ள இசுலாமிய திருத்தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அவருடையதாய் இருந்தது.
கி.பி. 1924: சீயோனிய இயக்கத்தைச் சார்ந்த யூதர் ஒருவர் அந்த இயக்கத்தின் குறிக்கோள்களை ஆதரிக்காத ஜேக்கப் இஸ்ரயேல் தெ ஹான் என்னும் பிரபல எழுத்தாளரைக் கொலைசெய்தார். இது சீயோனிய இயக்கத்தின் முதல் அரசியல் கொலையாகக் கருதப்படுகிறது. யூதருக்கும் அரபு இனத்தவருக்கும் இடையே நல்லெண்ணம் உருவாக்கும் முயற்சியில் ஜேக்கப் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1929: பாலஸ்தீனக் கலவரம் (மேற்குச் சுவர் கலவரம்) யூதருக்கும் முசுலிம்களுக்கும் இடையே நிகழ்ந்தது. ஒரு வாரம் நீடித்த அக்கலவரத்தில் 116 முசுலிம்களும் 133 யூதர்களும் கொல்லப்பட்டனர். யூதர்கள் எருசலேமிலும் சுற்றுப்புறங்களிலும் நிலம் வாங்கிக் குடியிருப்புகள் ஏற்படுத்தியதால் படிப்படியாக ஆட்சியைப் பிடித்து அரபு பாலஸ்தீனியரை அடிமைப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சமும், பொருளாதாரத்தில் தங்கள் நிலை பாதிக்கப்படும் என்ற அச்சமும் எழுந்ததும் கலவரத்துக்குக் காரணமாகக் காட்டப்பட்டது. அதே சமயத்தில் சீயோனிய இயக்கத்தைச் சார்ந்த யூதர்கள் தங்களுக்கென்று தனி நாடு கோரி, எருசலேமில் மேற்குச் சுவர்ப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பியதும் கலவரத்துக்குக் காரணமாயிற்று.
கி.பி. 1932: எருசலேமில் உலகப் புகழ் பெற்ற தாவீது மன்னன் ஓட்டல் (King David Hotel) திறந்துவைக்கப்பட்டது. பன்னாட்டு ஆய்வு நிகழ்ச்சிகள், நாட்டுத் தலைவர்கள் மாநாடுகள் போன்றவை அங்கு நடப்பது வழக்கம். இசுரயேல் நாடு உருவானதில் இந்த ஓட்டலுக்குச் சிறப்பிடம் உண்டு.
கி.பி. 1946: எருசலேமில் அமைந்த தாவீது மன்னன் ஓட்டல் பாலஸ்தீனத் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியது. 28 பிரித்தானிய அரசு அலுவலர் உட்பட 91 பேர் இத்தாக்குதலின்போது உயிரிழந்தனர்.
கி.பி. 1947, நவம்பர் 29: ஐக்கிய நாடுகள் அவையின் பரிந்துரைப்படி, எருசலேம் தனியமைப்புக்குட்பட்ட பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்[3]. ஆனால் அத்தீர்மானம் செயலாக்கம் பெறவில்லை.