எல்ஆர்ஜிபி (LRGB) என்பது ஒளிர்மை, சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துக்களின் சேர்க்கையிலான சுருக்கப் பெயராகும். இது தரமான வண்ணமயமான வானியல் புகைப்படங்களை எடுக்க பயில்நிலை வானியலில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பத்தைக் குறிப்பிடுகிறது. இதில் உயர் தரமான கருப்பு, வெள்ளை உருவம் குறைந்த தர வண்ண உருவத்துடன் இணைக்கப்படுகிறது.[2]
பயில்நிலை வானியலில், கருப்பு, வெள்ளை நிறத்தில் நல்ல தரமான, உயர் குறிகை-இரைச்சல் விகிதப் படங்களைப் பெறுவதில் எளிதாகவும் மலிவானதாகவும் இருக்கிறது. இவ்வாறு எல்ஆர்ஜிபி தொழில்நுட்பம் நல்ல தரமான வண்ணப்படங்களை எடுக்க பயன்படுகிறது. இதில் கருப்பு, வெள்ளை படத்தில் வண்ணங்களை இணைப்பதினால் ஒட்டுமொத்தப் படமும் உயர் பொலிவும் தரமும் அடைகிறது.
எல்ஆர்ஜிபி நுட்பங்களுக்கு பின்னால் உள்ள செயல்திறன் கோட்பாடு, மனிதவிழி நிறத்தைப் பார்க்கும் திறனுடன் தொடர்புடையது.[3][3] மனிதக் கண்களில் உள்ள தண்டுக் கலங்கள் ஒளி, வெளி சார்ந்த தரவுகளை உணரும் திறன் கொண்டுள்ளன, அதே நேரத்தில் கூம்புக் கலங்கள் நிறத்தை உணரும் திறன் கொண்டவை. மனிதக் கண்ணில் மூன்று வகை கூம்புகள் உள்ளன: சிவப்பு, பச்சை, நீலத்திற்கு என தனித்தனி உணர்திறன் கூம்புகள் உள்ளன. எனவே, எல்ஆர்ஜிபியின் ஒளி ஏற்பி மனிதக் கண் போன்று வடிவமைந்துள்ளது.