எஸ். ஆர். பிரபு | |
---|---|
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் பொருளாளர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அரசூருக்கு அருகாமையில் உள்ள சுண்டக்காபாளையம், தமிழ்நாடு, இந்தியா |
துணைவர் | தீப்தி முத்துசாமி |
வாழிடம்(s) | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | திரைப்படத் தயாரிப்பாளர் |
எஸ். ஆர். பிரபு (S. R.Prabhu) ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். ஸ்டுடியோ கிரீனில் (2006-2013) இவர் இருந்த காலத்தில் 12 தமிழ் திரைப்படங்களைத் தயாரித்தும், 18 தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை விநியோகித்தும் உள்ளார். 2010 ஆம் ஆண்டில், இவரும், இவரது சகோதரர் எஸ். ஆர். பிரகாஷ்பாபுவும் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். இவர் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் என்ற மற்றுமொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரும் ஆவார். இவர் நடிகர் சிவகுமார் மற்றும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் உறவினர் ஆவார்.
இவர் ஸ்டுடியோ கிரீனில் இருந்த பொழுது, 2006 ஆம் ஆண்டில் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை தயாரித்து விநியோகித்தார். இவரது அடுத்த தயாரி்ப்பு கார்த்தி நடித்த பருத்திவீரன் ஆகும். பருத்தி வீரனின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படம் 2010 ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல மற்றும் கார்த்தி, தமன்னா நடித்த சிறுத்தை படங்களை தயாரித்தார். அதே நேரத்தில் சிங்கம் படத்தின் தெலுங்குப் பதிப்பாக யமுடு மற்றும் பையா படத்தின் தெலுங்குப் பதிப்பான ஆவாரா ஆகிய திரைப்படங்களின் விநியோகத்தையும் பார்த்துக் கொண்டார். 2012 ஆம் ஆண்டில், சில குறைந்த செலவுத்திட்ட படங்களான அட்டகத்தி, கும்கி ஆகிய திரைப்படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.2013 ஆம் ஆண்டில், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களின் விநியோகத்தையும் பார்த்துக் கொண்டார். கார்த்தியின் நடிப்பில் ஆல் இன் ஆல் அழகு ராஜா(2013), பிரியாணி(2013), மெட்ராஸ்(2014) மற்றும் கொம்பன்(2015) ஆகிய திரைப்படங்களையும் தயாரித்தார்.
எஸ். ஆர். பிரபு தனது சகோதரர் எஸ். ஆர். பிரகாஷ் பாபுவுடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற ஒரு புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பு கார்த்தி மற்றும் பிரனிதா நடிப்பில் உருவான சகுனி(2012) திரைப்படமாகும். இத்திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. தொடக்கத்தில் சலீம் கவுஸை வில்லனாக வைத்து எடுத்த பகுதி திருப்தியாக இல்லாததால், பிரகாஷ் ராஜை வில்லனாக வைத்து படமானது மீண்டும் எடுக்கப்பட்டது.[1] சகுனிக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் கார்த்தியின் தொழில் வாழ்வில் அதிக செலவினத்தில் எடுக்கப்பட்ட காஷ்மோரா இவர்களின் இரண்டாவது தயாரிப்பாக இருந்தது. இத்திரைப்படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.[2][3][4] இத்திரைப்படம் இயக்குநர் கோகுலால் எடுக்கப்பட்ட நகைச்சுவை கலந்த திகில் படமாக வந்தது. இயக்குநர் கோகுல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். காஷ்மோரா திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.இந்நிறுவனத்தின் அடுத்த படமாக 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் இருந்தது. இத்திரைப்படத்தை முன்னதாக குக்கூ திரைப்படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கியிருந்தார். ஜோக்கர் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார்.[4][5] இத்திரைப்படம் கிராமப்புற வீடுகளுக்கு கழிப்பறையின் அவசியத்தை வலியுறுத்தியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதே கருத்தை வலியுறுத்தி வந்த நேரமாதலால் இத்திரைப்படத்தை பிரதமர் பார்க்க வேண்டும் என்ற கருத்தினை ஊடகங்கள் கேட்டுக்கொண்டன.[6] இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் தன்னை இந்தியாவின் குடியரசுத் தலைவராக கற்பிதம் செய்து கொண்டிருப்பதாக அமைந்திருந்தது.[7]ஜோக்கர் தனக்குள் இருக்கும் மாறுபட்ட பக்கத்தைக் கண்டறிய உதவியதாக குரு சோமசுந்தரம் தெரிவித்தார்.[8] தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் ஜோக்கர் படக்குழுவினரைப் பாராட்டினார்.[9] இத்திரைப்படம் ஆனந்த விகடன் பத்திரிக்கையால் வழங்கப்பட்ட விருதுகளில் சிறந்த வசனம், சிறந்த தயாரிப்பு மற்றும் சில விருதுகளையும் பெற்றது.[10] இந்நிறுவனம் அருண் பிரபு இயக்கத்தில் அருவி என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சமூக ஊடகங்கள் வாயிலாக நடிகையைத் தேடினர்.[11] சூன் 2016 இல் சாங்காயில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பங்குபெற்றது.[12] இத்திரைப்படத் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தங்கள் நிறுவனத் தயாரிப்பில் வெளியான சிறந்த படங்களுள் அருவி திரைப்படமும் சேர்ந்துள்ளதற்காக பெருமைப்படுவதாகத் தெரிவித்தார்.[13] அருவி திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே இயக்குநராக ஞானவேல் அறிமுகமான கூட்டத்தில் ஒருவன் என்ற படத்தின் தயாரிப்புப் பணிகளும் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் பிரியா ஆனந்து ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.[14] காஷ்மோரா, அருவி, கூட்டத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு கார்த்தியின் 16 ஆவது திரைப்படமான தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் 36 ஆவது திரைப்படம் ஆகியவற்றின் வேலைகளை இந்நிறுவனம் தொடங்கியது.[15][16]