சதாசிவ் கானோஜி பாட்டீல் (சுருக்கமாக எஸ்.கே. பாட்டீல் ) (1898-1981) மகாராட்டிர மாநிலதத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆவார். மூத்த சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், அறிஞர் மற்றும் பேச்சாளர் என பன்முகத்திறமை கொண்ட இவர் மூன்று முறை மும்பை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசில் இரயில்வே துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் "பம்பாயின் முடிசூடா ராஜா" என்ற புனைப்பெயரிலும் பரவலாக அறியப்பட்டார். [1] [2] [3] [4]
1898 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராட்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள சவந்த்வாடி தாலுகாவின் கூடல் மற்றும் சாவந்த்வாடிக்கு இடையே அமைந்துள்ள ஜராப் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கோலாப்பூர் மாநிலத்தில் காவல் அதிகாரியாக இருந்தார். பூனாவில் சட்டம் பயின்ற இவர் 1921 இல் தனது 23 வது வயதில் பாரிஸ்டர் வெலிங்கர் சபையில் சேர மும்பைக்கு குடிபெயர்ந்தார். இவர் 1929 இல் தனது சுய சட்டப் பயிற்சியைத் தொடங்கிய இவர் குறிப்பாக சிறு வழக்குகள் நீதிமன்றம் மற்றும் நகர பொது நீதிமன்றத்திலும், மும்பை உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் மன்றத்தின் ஒரு சில பொது மேல்முறையீட்டு வழக்குகளிலும் பயிற்சி செய்தார்.
மும்பை ஒருங்கிணைந்த பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது இவர் அப்போதைய பம்பாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். 1964 முதல் 1967 வரை மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். மூன்று முறை மக்களைவக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், 1967ல் மும்பை தெற்கு தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் குஜராத்தில் உள்ள பனசுகந்தா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்களவை உறுப்பினரானார் 1969ல், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவின் போது, மொரார்ஜி தேசாய் மற்றும் நிஜலிங்கப்பாவுடன் இணைந்து நிறுவன காங்கிரஸ் பிரிவின் முன்னணி தலைவராக விளங்கினார். இவர் 1971 இல் பனஸ்கந்தா மக்களவைத் தொகுதியில் நிறுவன காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு, இந்திரா காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
15 நவம்பர் 1955 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் அறிக்கை மீதான இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை விவாதத்தில் பம்பாய் நகரத்தை ஒரு தன்னாட்சி நகர-மாநிலமாக அமைக்க வேண்டும் என்று பாட்டீல் கோரினார். மேலும் மும்பையின் பெரு மாநநகரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அழுத்தத்தை அளித்தார்.