ஏமனில் போக்குவரத்து

ஏமனில் போக்குவரத்து (Transport in Yemen) போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல் அடிப்படையில் அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளுடன் ஒப்பிடப்பட்டு சாதகமற்ற நிலையையே கொண்டுள்ளது. வறுமை நிலை ஏமன் நாட்டின் போக்குவரத்து வசதிகளை பெரிதும் பாதிக்கிறது. போக்குவரத்து அமைப்பை சீர்படுத்தி மேம்படுத்த பல திட்டங்கள் திட்டமிடப்பட்டாலும், பொதுவாக சாலைகள் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. வலைப்பின்னல் இரயில் போக்குவரத்து வசதிகள் எதுவும் ஏமன் நாட்டில் அமைந்திருக்கவில்லை. விமானப் போக்குவரத்து வசதிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வாடிக்கொண்டிருக்கின்றன. தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாட்டுத் திறன்கள் குறைவான வளர்ச்சி நிலையிலேயே உள்ளன. 2002 தாக்குதலில் இருந்து நம்பிக்கைக்குரிய மீட்பை ஏடன் துறைமுகம் மட்டுமே எட்டியுள்ளது. இத்துறைமுகத்தின் செயல்பாட்டு விகிதம் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும், 2006 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கப்பல்காரர்களுக்கான அதிக அளவு காப்பீடு சந்தாக்கள், எதிர்காலத்தில் இச்செயல்பாட்டு விகிதத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏடன் துறைமுகத்தின் முக்கிய அம்சமான ஏடன் கொள்கலன் முனை, அடுத்த 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு அனைத்துலக துபாய் துறைமுகத்தால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2005 கோடையில் வெளியான இவ்வறிவிப்பைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இத்துறைமுகம் மேலும் விரிவடையும் வாய்ப்பை கொண்டுள்ளது. [1]

சாலைகள்

[தொகு]

ஏமனின் அளவைக் கருத்தில் கொண்டால், அதன் சாலை போக்குவரத்து அமைப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ளது. ஏமனில் 71.300 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் உள்ளன, இவற்றில் 6,200 கிலோ மீட்டர் மட்டும் நடைபாதைகளாக உள்ளன. வடக்கில், சனா, தையிசு மற்றும் அல் உதாயதா பகுதிகளை இணைக்கும் சாலைகள் நல்ல நிலையில் நகரங்களுக்கிடையிலான பேருந்துப் போக்குவரத்திற்கு உதவும் வகையில் உள்ளன. அதேவேளையில் ஏடன்-தையிசு சாலையைத் தவிர்த்து தென்புறமுள்ள பிற சாலைகள், பழுதான நிலையில் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

ஏமன் நாட்டின் 200 கிலோமீட்டர் கிராமப்புர இணைப்பு சாலைகளுக்காகவும், 75 கிலோமீட்டர் கிராமச்சாலைகள் மேம்பாட்டிற்காகவும் உலக வங்கி 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை அங்கீகரித்தது. ஏமன் நாட்டின் கிராமப்புறச் சாலை திட்டமிடல் மற்றும் பொறியியல் வலிமைகளை மேம்படுத்தும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்நிதி ஒப்புதல் கருதப்பட்டது. தென்புறத்தில் ஏடனையும் வடக்கில் அம்ரான் மாவட்டத்தையும் இணைக்கின்ற தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்திடும் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இச்சாலை அமைக்கும் திட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட குகைப் பாதைகளும் உள்ளடங்கும். மேலும் இத்திட்டத்தால், சவூதி அரேபியாவுடனான வடக்கு எல்லைப் பகுதியில் இருந்து தெற்கு கடற்கரை வரைக்குமான பயணநேரம் பாதியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏமன் நாட்டில் சாலைப் பயணம் பெரும்பாலும் பாதுகாப்பானதாக இல்லை. நகரங்களுக்குள் சிறிய கூடு உந்துகள் மற்றும் சிறிய பேருந்துகள் பிற வாகனங்களுக்கு மாற்றாக பயணிகளை அழைத்து வருதல், மீள அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை செய்து கொண்டிருக்கின்றன. வாடகை வாகனங்களும் அரசுப் பேருந்துகளும் காணப்பட்டாலும் பெரும்பாலும் அவை பாதுகாப்பில்லாத நிலையிலேயே ஒடுகின்றன. போக்குவரத்து விளக்குகள், காவலர்கள் வழிநடத்திக் கொண்டிருந்தாலும், ஓட்டுநர்கள் மிக குறிப்பாக குறுக்காக செல்லும் வாகனங்களைக் கவனித்து, வாகனங்களை ஓட்டும் போது எச்சரிக்கையாக ஓட்டவேண்டுமென்று அமெரிக்கத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது .

ஏமன் நாட்டில் சாலை விதிகள் உள்ளன என்றாலும், அவை எப்போதும் வலியுறுத்தப்படுவது இல்லை.வலது கைப்பக்கத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று ஏமன் நாட்டுச் சட்டம் குறிப்பிட்டாலும், அங்குள்ள ஓட்டுநர்கள் சில சமயங்களில் சாலையின் இடது பக்கத்தில் வாகனங்களை ஓட்டுகின்றனர். குழந்தைகளுக்குக் கூட கார்களில் இருக்கை வார்ப்பட்டைகள் அணிவது அங்கு கட்டாயமாக்கப்படவில்லை. அதிகபட்சமாக சாலைகளில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் இந்த வேகக்கட்டுப்பாடு அரிதாகவே கண்காணிக்கப்படுகிறது. மேலும் ஏமன் நாட்டுச் சாலைகளில் ஏராளமான வயது குறைவான ஓட்டுநர்கள் வாகனங்களைச் செலுத்துவதைக் காணலாம். வாகனங்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் முகப்பு விளக்கு, பின்பக்க விளக்குகள் எரியாமல், குறைபாடுள்ள திருப்பம் அறிவிக்கும் விளக்குகளோடு ஓடுகின்றன. நடைபாதை மனிதர்கள், அதிலும் குறிப்பாக குழந்தைகள் நகர் மற்றும் கிராமப் புறங்களில் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர். பொதுவாக இங்கு நகரங்களிடை சாலைகள் பழுதுபார்க்கப்பட வேண்டும். கிராமப்புறச் சாலைகள் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதெற்கேற்ப சரிசெய்யப்படவேண்டும். அல்லது வாகனங்கள் சீர் செய்யப்பட வேண்டும்.

இரயில் போக்குவரத்து

[தொகு]

தொடருந்து போக்குவரத்திற்காக அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வந்தபோதிலும், ஏமனில் இருப்புபாதை போக்குவரத்து எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், எயாட்சு இரயில்வேயை ஏமன் வரை நீட்டிக்கலாம் என்று ஒட்டோமான் பேரரசு பரிந்துரைத்தது. ஆனால் இப்பரிந்துரை செயல்வடிவம் பெறவேயில்லை. சமீபத்தில் 2005 ஆம் ஆண்டில்கூட ஏமன் அரசு போக்குவரத்து கட்டமைப்பு வசதியை அதிகரிக்கும்பொருட்டு இருப்புப் பாதைகளை இணைப்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டது [2]. ஒருங்கிணைந்த மண்டல இரயில் போக்குவரத்தில் ஏமனையும் இணைத்துக்கொள்வதற்கான சம்மதத்தை 2008 ஆம் ஆண்டில் வளைகுடா கூட்டுறவு அமைப்பு அறிவித்தது. இதற்கான சாத்தியங்களை ஆராயவும் தொடங்கியது. ஏடனிலிருந்து தொடங்கும் கடற்கரையோர இருப்புப் பாதையை விரும்பி ஏமன் அரசும் முன்னுரிமையைத் தெரிவித்தது [3] Yemen has expressed preference for a coastal route beginning in ஏடன்.[4].

துறைமுகமும் வாணிபக் கடல்படையும்

[தொகு]

ஏடன், அல் உதாய்தாக் , அல் முகால்லா, மோச்சா போன்றவை ஏமனின் முக்கிய துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரமான ஏடன், ஏமனின் முதன்மையான துறைமுகம் ஆகும். எண்ணெய் ஏற்றுமதியில், ஏற்றுதல் புள்ளியாகச் செயல்படும் இராசு ஏசாவும் கூடுதலாக ஒரு துறைமுகம் போல இங்குச் செயல்படுகிறது. நிசுடன் துறைமுத்தில் சிறிதளவு சரக்குப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. ஏடன் துறைமுகத்தில் மல்லா கொள்கலன் முனையம் மற்றும் மார்ச்சு 1999 இல் தொடங்கப்பட்ட ஏடன் கொள்கலன் முனையம் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளன. ரோ-ரோ கப்பல், கொள்கலக் கப்பல், சரக்குக் கப்பல், எண்ணெய்க் கப்பல் முதலான கப்பல் வகைகள் இத்துறைமுகத்திற்கு வந்து போகின்ற. நவம்பர் 2003-ல், ஏமன் கடற்பகுதியில் 2002 ஆம் ஆண்டு அக்டோபரில், பிரஞ்சுக்குச் சொந்தமான மிகப்பெரிய எண்ணெய்க்கப்பல் இலிம்பர்க் மீது நிகழ்ந்த குண்டுவீச்சைத் தொடர்ந்து 2003 இல் சிங்கப்பூர் துறைமுக நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை மீண்டும் ஏமன் அரசாங்கத்திற்கு விற்றது. பின்னர், இத்துறைமுகத்தை நிர்வகிக்க 2005 ஆம் ஆண்டில் 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்திற்காக துபாய் அனைத்துலக துறைமுக அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏமன் அரசாங்கம் குறைவான பங்குகள் கொண்ட ஒரு சிறுபான்மை பங்குதர்ராக நீடித்தது. இதனால் 2002 குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட இத்துறைமுகம் மீண்டும் சீர்பெற்றது. ஒவ்வொர் ஆண்டும் படிப்படியாக சரக்குப் போக்குவரத்தின் அளவு ஏறுமுகமாக உயர்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]