ஐசாஸ் பின் இலியாஸ் சீமா (Aizaz bin Ilyas Cheema) (பிறப்பு: செப்டம்பர் 5, 1979 சர்கோதாவில் ) [1] ஐசாஸ் சீமா என பரவலாக அறியப்படும் இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சர்வதேச துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
நவம்பரில், சீனாவின் குவாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீமா பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சார்பாக விளையாடினார்.[2] 3 வது இடத்திற்காக நடைபெற்ற பிளேஆஃப் சுற்றில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினை வீழ்த்தி பாக்கித்தான் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
செப்டம்பர் மாதம் ஒரு தேர்வுத் துடுப்பாட்டம் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் அனுபவமற்ற வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் நினைத்தது. முன்னணி பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ், உமர் குல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சீமா அணியில் தேர்வு செய்யப்பட்டார்.[3][4] செப்டம்பர் 1 ஆம் தேதி ஜிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச அளவில் அனுபவமற்றவர்களாக இருந்தனர். அந்தப் போட்டியில் அனுபவமான ஒரே ஒரு வீரர் மட்டுமே இருந்தபோதிலும் அவர்கள் அந்தப் போட்டியினை வென்றனர். இவரின் பந்துவீச்சு குறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் வகார் யூனிசு தெரிவிக்கையில் நெருப்பு போன்று ஆக்ரோசமாக பந்து வீசினார் எனத் தெரிவித்தார்.[5] ரே பிரச் என்பவரை தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட இலக்காக வீழ்த்தினார். மேலும் அந்தப் போட்டியில் 103 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து எட்டு இலக்குகளைக் கைப்பற்றினார். இது பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்களின் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு ஆகும்.[6] அதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் பாக்கித்தான் அறிமுக வீரர் பந்துவீச்சு வரிசையில் இது நான்காவது சிறந்த பந்துவீச்சு ஆகும்.[7] இந்தத் தொடரில் அவர் மொத்தமாக எட்டு இலக்குகளைக் கைப்பற்ரினார். 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றியது இவரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்[8]
2012 ஆம் ஆண்டில் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார்.அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.இருதிப் போட்டியில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் 49 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.இறுதி ஓவரில் ஒன்பது ஓட்டங்கள் தேவைப்பட்ட போது இரண்டு ஓட்டங்களில் வெற்றி பெற இவர் உதவினார். இதன்மூலம் சாலிட் பிளேயர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குவைத் -இ- அசாம் கோப்பைத் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 60 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.[9]