ஐதரோசீயர் (Hydrosere) என்பது தாவரக் கூட்டுத்தொடர் வளர்ச்சியின் ஒரு வகையாகும். இந்தக்கூட்டுத்தொடர் வளர்ச்சியின்போது தாவரங்களில் ஏற்படக்கூடிய தொடர் மாற்றங்களை ஐதரோசீயர் என்கிறோம். பெரும்பாலும் நீர்நிலைகளின் சுற்றுப்புறச் சூழலில், குறிப்பாக இலாட அமைப்பு ஏரி மற்றும் பனிக்குழிவு ஏரி போன்ற இடங்களில் ஐதரோசீயர் வகை வளர்ச்சி காணப்படுகிறது. திறந்தவெளி நீர்நிலைகள் இயற்கையாகவே காலப்போக்கில் வறண்டு, மரங்கள் சூழ்ந்த நிலப்பகுதியாக, கானகமாக மாறிவிடுகின்றன. இம்மாற்றத்தின்போது, சேற்று நிலம், சதுப்பு நிலம் போன்ற வெவ்வேறு வகையான நிலப்பகுதிகள் ஒன்றையடுத்து ஒன்று தோன்றுகின்றன.
ஒரு நீர்நிலை படிப்படையாக மாற்றமடைந்து அடுத்தடுத்து உச்சகட்ட நிலப்பகுதியாக மாறுவதற்கு நூற்றாண்டுகள் முதல் இலட்சம் ஆண்டுகள்வரை ஆகலாம். தோன்றும் நிலப்பகுதிகளில் சில ஒன்றைவிட மற்றொன்று குறுகிய காலம் நீடித்தும் மறையலாம். உதாரணமாக சேற்று நில, சதுப்பு நில மாற்றம் பத்தாண்டு காலத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் நிகழ்ந்துவிடலாம். நீர்நிலையில் படியும் வண்டல்படிவின் அளவைப் பொறுத்தே இம்மாற்றம் நிகழ்வதற்கான காலப்பகுதி நிர்ணயமாகிறது.
ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் சுற்றுப்புறச் சூ&ழலில் ஐதரோசீயர் கூட்டுத்தொடர் வளர்ச்சி தோன்றுகிறது. இதன் விளைவாக நீரில் வாழக்கூடிய சமுதாயங்கள் நேரடியாக நிலத்தில் வாழக்கூடிய தாவர சமுதாயங்களாக மாற்றமடைகின்றன. தொடக்கநிலை மாற்றங்கள் புறத்திலிருந்து நிகழ்கின்றன. மணல், களிமண் போன்ற கனிமத்துகள்கள் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அடித்துவரப்பட்டு நீர்நிலை அல்லது நீர்ப்படுகளில் நிரம்பத் தொடங்குகின்றன. நாளடைவில் மட்கிய தாவரங்களும் இந்நீர்நிலைகளை நிரப்பி அடுத்தடுத்த சூழ்நிலை மாற்றங்களுக்கு காரணமாகின்றன.
நீர்நிலைகள் பெரியனவாகவோ அல்லது ஆழமாகவோ இருந்து, பலத்த அலைகளின் ஆற்றல் அல்லது வேறு இயற்கை சக்திகளின் செயலாக்கத்தால் அங்கு ஒரு நிலையான நீர்நிலைச் சமுதாயம் ஏற்படலாம். மேலும் அதிகப்படியான மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், குளம், குட்டை ஏரிகள் போன்ற ஆழம் குறைவான நீர்நிலைகளில் அலை மற்றும் இயற்கைச் சக்திகளால் மண் ஓரப் பகுதிகள் அரித்துச் செல்லப்படுகின்றன. கூட்டுத்தொடர் வளர்ச்சியினால் தாவரங்கள் கூட்டு சேர்ந்து சமுதாயங்கள் அமைவதை அறிய இயலும். நீர்நிலையின் வெவ்வேறு ஆழப்பகுதிகளில் வெவ்வேறு வகையான தாவரங்கள் வளரலாம். ஆழம் குறைவாக ஓரங்களிலுள்ள சேறான பகுதிகளில் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய வேர் தாவரங்களும், மிதக்கும் தாவரங்கள் நடுப்பகுதியிலும் வளரலாம்.
ஐதரோசீயர் கூட்டுத்தொடர் வளர்ச்சியின்போது காற்றில் அடித்து வரப்பட்ட பாசி போன்ற உயிரினங்களின் விதைகள் நீரினால் கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு நீரில் மிதக்கும் தாவர, விலங்கு நுண்ணுயிர்களே முன்னோடிச் சமுதாயங்களைத் தோற்றுவிக்கக் கூடியவையாகும். இந்த உயிரின வடிவங்கள் அவற்றின் பல்வேறு வகையான உயிரினச் செயல்பாடுகளினால் ஊட்டச்சத்துகளையும் கரிமப் பொருட்களையும் அந்நீர்ப் பகுதியில் சேர்க்கின்றன. நாளடைவில் இவையே மடிந்து அடியில் படிந்து எருவாகவும் மாறுகின்றன.