ஒனகே ஒபவ்வா (Onake Obavva, உலக்கை ஒபவ்வா; கன்னடம்:ಓಬವ್ವ) என்பவர் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சித்ரதுர்கா பெண்மணி. சித்ரதுர்கா கோட்டைக் காவலாளி ஒருவரின் மனைவியான[1] இவர், தந்திரமாக கோட்டைக்குள் நுழைய முற்பட்ட ஐதர் அலியின் படைவீரர்களைத் தனி ஒரு பெண்மணியாக நின்று தடுத்ததன் காரணமாக, கர்நாடகாவின் மிகவும் மதிக்கத்தக்க வீரப் பெண்மணிகளுள் ஒருவராக மதிக்கப்படுகின்றார்[2]. எதிரி வீரர்களைத் தாக்க இவர் உலக்கையை பயன்படுத்தியதால் ஒபவ்வா எனும் இவரின் பெயர் ஒனகே ஒபவ்வா (ஒனகே - உலக்கை) என வழங்கலாயிற்று.
18ம் நூற்றாண்டின் மத்தியில் சித்ரதுர்கா, மதகரி நாயக்கர் என்பரால் ஆளப்பட்டது. இவருடைய கோட்டைக் காவளாளி ஒருவரின் மனைவிதான் ஒபவ்வா. 1779ல் மைசூரைத் தலைநகராக கொண்டு ஆண்டுவந்த ஐதர் அலியின் படைகள் இந்தக் கோட்டையை முற்றுகையிட்டன. குன்றின் மீது அமைந்திருந்த இந்த கோட்டையின் உள்ளே நுழைய சிரமப்பட்ட ஐதரின் படைகள், அதில் இருந்த ஒரு சிறு பிளவைப் பயன்படுத்தி உள்ளே நுழைய முடிவெடுத்தன. பிளவு மிகவும் சிறியதாகவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழையும் வண்ணமும் இருந்தது. இருப்பினும் வேறு வழி இல்லாததால் அதையே பயன்படுத்த ஐதரின் படைகள் தயராகின. அதே நேரத்தில், அந்த பிளவில் இருந்த ஆபத்தை உணர்ந்த மதகரி நாயக்கரும், அதன் அருகே காவலுக்கு ஒபவ்வாவின் கணவரை நியமித்தார்.
குறிப்பிட்ட நாளில் மதிய உணவுக்காகத் தனது வீட்டுக்கு வந்த ஒபவ்வாவின் கணவர், தண்ணீர் எடுத்துவருவதற்குத் தனது மனைவியைப் பணித்தார். பிளவின் அருகே இருந்த குட்டையில் தண்ணீர் பிடிக்க வந்த ஒபவ்வா, பிளவில் இருந்து எதிரியின் படைகள் கோட்டைக்குள் நுழைய முற்படுவதைக் கண்டார். தொடர்ந்து அருகில் எவரும் இல்லாத்தால், தனது கையில் இருந்த உலக்கையை வைத்து பிளவின் வழியாக வெளியேற முயன்ற முதல் வீரனைத் தலையில் அடித்துக் கொன்றார். மேலும் தொடர்ந்து வரும் வீரர்கள் அறியாத வண்ணம் இறந்த அந்த உடலை அருகில் இருக்கும் பள்ளத்தில் தள்ளிவிட்டார். இதேபோல தொடர்ந்து வந்த வீர்ர்கள் அனைவரும் ஒபாவ்வாவினால் கொல்லப்பட்டனர்.[3] மதிய உணவை முடித்துவிட்டு தனது பணிக்குத் திரும்பிய கணவர், கையில் இரத்தம் சொட்டும் உலக்கையுடன் ஒபவ்வா நிற்பதையும், கீழே எதிரி வீரர்களின் உடல்கள் கிடப்பதையும் கண்டார். நிலைமையை உணர்ந்த கணவர், உடனடியாக மற்ற வீரர்களை எச்சரிக்கை செய்து அபாயச் சங்கை ஊதினார். இதையடுத்து பிளவின் அருகே கூடிய மதகரி நாயக்கரின் படைகள், பிளவின் உள்ளே இருந்த மற்ற எதிரி வீரர்களையும் கொலை செய்தனர். இப்படியாக ஐதர் அலியின் கோட்டைப் பிரவேசம் தடுத்து நிறுத்தப்பட்டது. இருப்பினும் சம்பவம் நடந்த அதே நாளில் ஒனகே ஒபவ்வாவும் மரணமடைந்தார். இவரின் மரணம் குறித்து, எதிரி வீரர்களால் கொல்லப்பட்டார் எனவும் அதிர்ச்சியில் இறந்தார் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.[2]
இவரின் தைரியம் காரணமாக, இவர் கர்நாடகாவின் வீரப் பெண்மணி என அழைக்கப்படுகின்றார். சித்ரதுர்கா கோட்டையில் ஐதர் அலி வீரர்கள் நுழைய முற்பட்ட பிளவு, இவரின் பெயரால் ஒனகே ஒபவ்வா கிண்டி (கிண்டி - துளை) என அழைக்கப்படுகின்றது. மேலும் சித்ரதுர்காவில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்துக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது[4].
{{cite book}}
: Cite has empty unknown parameters: |lastauthoramp=
, |chapterurl=
, |laydate=
, |laysummary=
, and |separator=
(help)
{{cite book}}
: |volume=
has extra text (help); Cite has empty unknown parameter: |month=
(help)
{{cite book}}
: |volume=
has extra text (help)[தொடர்பிழந்த இணைப்பு]