ஒருங்குதொடர் தொகுப்புமுறை

ஒருங்குதொடர் தொகுப்புமுறை (Convergent synthesis) என்பது வேதியியலில், பெரும்பாலும் கரிம வேதியியலில் பயன்படுத்தப்படும் ஒரு தயாரிப்புமுறை உத்தியாகும். பலவடுக்கு தொகுப்பு முறையின் செயல்திறனை மேம்படுத்துவது இவ்வுத்தியின் நோக்கமாகும். இத் தொகுப்பு முறையில், ஒரு சிக்கலான மூலக்கூறின் எளிய தனித்தனிக் கூறுகள் முதல்நிலை வினை, இரண்டாம்நிலை வினையெனத் தனித்தனியே தொகுக்கப்படுகின்றன. தனித்தனியாகத் தயாரிக்கப்பட்ட இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இறுதியாக சிக்கலான மூலக்கூறைத் தருகின்றன[1]. நேரிடையான ஒருபடித் தொகுப்புமுறையில், அடுத்தடுத்த படிநிலை வினைகளின் போது ஒட்டுமொத்த உற்பத்தி வீதம் விரைவாக குறைந்துவிடுகிறது.

ஏ → பி → சி → டி

ஒவ்வொரு வினையிலும், ஒருவேளை 50% உற்பத்தியிருக்கும் என்று கருதினால் ஏ இலிருந்து டி இன் தயாரிப்பு வெறும் 12.5% மட்டுமேயாகும்.

இதுவே ஒருங்குதொடர் தொகுப்புமுறை எனில்,

ஏ → பி (50%)
சி → டி (50%)
பி + டி → இ (25%)

ஒட்டுமொத்த வினையில் இ 25% விளைகிறது என்பது சற்று ஆறுதலாகும். சிக்கலான கலப்பு மூலக்கூறுகளைத் தொகுப்பு முறையில் தயாரிக்கவும், தனித்தனியான சிறிய துண்டுகளை இணைத்துப் பிணைக்கவும் மற்றும் தனித்தனி மூலக்கூறுகளைத் தொகுக்கவும் ஒருங்குதொடர் தொகுப்புமுறை பயன்படுத்தப்படுகிறது.

  • தெந்திரைமர் தொகுப்புமுறை [2] அல்லது அடுக்குக் கிளைத்தொகுப்பு முறையில் இந்த ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தி பயன்படுத்தப்படுகிறது. இதனால், மரபார்ந்த முறையில் முன்னரே உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையில் கிளைகள் மைய உள்ளகத்துடன் இணைகின்றன.
  • அதிகபட்சமாக 300 அமினோ அமிலங்கள் வரை கொண்ட புரதங்கள், ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தியின் மூலம் வேதியியல் இணைப்புப் பெற்று உருவாகின்றன.
  • உதாரணமாக சேர்மம் பையோயானகின் ஏ [3] தயாரிப்பின் இறுதிநிலை (ஒளிவேதியியல்[2+2]வளையக்கூட்டு வினை) முடிவுத் தொகுப்பு வினையில் ஒருங்குதொடர் தொகுப்புமுறை உத்தி பயன்படுத்தப்படுகிறது.
பையோயானகின் ஏ சேர்மத்தின் முடிவுத் தொகுப்பின் இறுதிப் படிநிலை

மேற்கோள்கள்

[தொகு]
  1. Organic Synthesis, 3th Ed. 2010 Michael Smith
  2. Convergent Synthesis of Internally Branched PAMAM Dendrimers Michael Pittelkow, Jrn B. Christensen Org. Lett., 7 (7), 1295 -1298, 2005
  3. Total Synthesis and Revised Structure of Biyouyanagin A K. C. Nicolaou, David Sarlah, and David M. Shaw Angew. Chem. Int. Ed. 2007, 46, 4708 –4711 எஆசு:10.1002/anie.200701552

இவற்றையும் காண்க

[தொகு]