![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 25 சூன் 2009 |
தலைமையகம் | மெனாரா IMC, எண் 8 சுல்தான் இசுமாயில் சாலை, கோலாலம்பூர், மலேசியா |
முதன்மை நபர்கள் | அசுரி அமிடான் (தலைவர்), ஜோ லோ (ஆலோசகர்) |
தொழில்துறை | முதலீட்டு வியூகம். |
வருமானம் | வெளியிடப்படவில்லை |
உரிமையாளர்கள் | மலேசிய நிதி அமைச்சு |
இணையத்தளம் | www.1mdb.com.my |
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அல்லது 1எம்டிபி (மலாய்: 1Malaysia Development Berhad; (1MDB) ஆங்கிலம்: 1Malaysia Development Berhad) என்பது மேம்பாட்டு வியூகம் வகிக்கும் மலேசிய அரசு அமைப்புமாகும்.
இந்த நிறுவனம் 2009-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. உலக நாடுகளுடன் பரஸ்பர கூட்டு வணிகம் மேற்கொள்வது; வெளிநாட்டு முதலீடுகளை மலேசியாவிற்குள் கொண்டு வருவது; மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது முக்கிய நோக்கமாகும்.
மேலும், மலேசிய மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவது; உலகளாவிய நிலையில் பங்குதாரர்களைப் பெறுவது [1] நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான வியூகத்தை உருவாக்குவது, உலகளாவிய பங்குதாரர்களை பெறுவது; அந்நிய நேரடி முதலீட்டைநாட்டிற்கு கொண்டு வருவது; ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்ட அமைப்பாகும்.[2]
இந்த நிறுவனம் தற்போது நாட்டின் முக்கிய திட்டங்களான துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் அதன் துணை நிறுவனமான பண்டார் மலேசியா மற்றும் மூன்று மின் உற்பத்தி நிறுவனங்களைப் பெற்றுள்ளது.
மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான இந்த மலேசிய மேம்பாட்டு நிறுவனம், தற்போது திவாலான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]
1எம்டிபி நிறுவனம் மூன்று அடுக்கு சரிபார்த்தல் மற்றும் சமநிலைக்குழு அமைப்பை கொண்டுள்ளது அதில் அறிவுரைக்குழு, இயக்குநர் குழுமம் மற்றும் மூத்த மேலாண்மைக் குழு ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. அறிவுரைக் குழுவின் தலைவராக மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் இருக்கிறார்.[4]
2015-இல், இந்த நிறுவனம் தொடர்பான செய்திகள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கைகளில் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக அமெரிக்க வால் ஸ்டிரீட் பத்திரிக்கையில் பிரதமர் நஜீப் ரசாகின் சொந்த வங்கி கணக்கிலும் அவரின் நெருங்கியவர்களின் கணக்குகளில் இந்த நிறுவனத்தின் பணம் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க நீதித் துறை (United States Department of Justice) தாக்கல் செய்த ஒரு வழக்கின் அடிப்படையில், மலேசியாவின் 1எம்டிபி நிறுவனம், மலேசிய அரசுக்கு சொந்தமான நிதியில் இருந்து குறைந்தபட்சம் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
செப்டம்பர் 2020 இல், திருடப்பட்டதாகக் கூறப்படும் தொகை US$4.5 பில்லியனாக உயர்த்தப்பட்டது மற்றும் மலேசிய அரசாங்க அறிக்கை 1எம்டிபி நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன்கள் அமெரிக்க டாலர் US $7.8 பில்லியன் என்று பட்டியலிட்டுள்ளது.[5]
இந்த ஊழல் தொடர்பாக 2018 மலேசியப் பொதுத் தேர்தலில் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கின் கட்சி தோல்வியடைந்தது; இறுதியில் நஜீப் ரசாக் மீது விசாரணை நடைபெற்று அவருக்குச் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
6 ஆகத்து 2022 நிலவரப்படி, உலகளாவிய ஊழலை எதிர்த்துப் போராடும் முயற்சியில், ஐக்கிய அமெரிக்க நீதித் துறை, அமெரிக்க அதிகார வரம்பிற்குள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை மலேசிய மக்களுக்கு திருப்பி அளித்தது.[6]
2008-ஆம் ஆண்டில் திராங்கானு மாநிலத்தில் ஒரு முதலீட்டுக் கழகம் இருந்தது. அதன் பெயர் திரங்கானு இன்வெஸ்ட்மெண்ட் அத்தோரிட்டி (Terengganu Investment Authority). சுருக்கமாக டி.ஐ.ஏ. (TIA) என்பார்கள். அந்த முதலீட்டுக் கழகத்தின் புதிய வடிவமே 1எம்டிபி. நிறுவனம் ஆகும்.
1எம்டிபி. நிறுவனம் மலேசிய நிதியமைச்சிற்குச் சொந்தமானது (Minister of Finance (Incorporated). மலேசிய நிதியமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. இந்த நிறுவனத்தின் பண முதலீடுகள்; வருமானம்; இலாப நட்டம் அனைத்திற்கும் மலேசிய நிதி அமைச்சு பொறுப்பு வகித்தது.
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், மலேசியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனால் நிதியமைச்சு அவரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமை ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முன்னாள் பிரதமர் நஜீப் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் 1எம்டிபி நிறுவனம் இயங்கி வந்தது.
1எம்டிபி. நிறுவனத்தின் பொதுவான நோக்கம்; எரிபொருள், நில உடைமைகள்; சுற்றுலாத் துறை; விவசாய வணிகம் போன்ற அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்துவது ஆகும். அந்த வகையில் சில முக்கியமான திட்டங்களில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதில் துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (Tun Razak Exchange) எனும் துன் ரசாக் மாற்றுத் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். [7]
கோலாம்பூர் மாநகரின் நடு மையத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டம் வகுக்கப் பட்டது. புக்கிட் பிந்தாங், புடு, காக்ரேன், கம்போங் பாண்டான், அம்பாங் ஈலீர் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு மேம்பாட்டுத் திட்டம். இந்தத் துன் ரசாக் மாற்றுத் திட்டத்தின் கீழ் வருவது பண்டார் மலேசியா எனும் மற்றொரு துணைத் திட்டம். 486 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. சுங்கை பீசி வானூர்தி நிலையத்தில் மையம் கொண்டது.
பண்டார் மலேசியா திட்டம் 15 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட திட்டம் வகுக்கப் பட்டது. புதிய பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் இந்தத் திட்டம் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.[8]