ஒலிம்பிக் பூங்கா (Olympic Park) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான விளையாட்டு வளாகம் ஆகும். பொதுவாக இந்த வளாகத்தில் ஒலிம்பிக் விளையாட்டரங்கமும் பன்னாட்டு தகவல்பரப்பு மையமும் அமைந்திருக்கும். ஒலிம்பிக் சிற்றூரும் இங்கு அமைக்கப்பட்டிருக்கலாம். சில ஒலிம்பிக் பூங்காக்களில் வேறு விளையாட்டுக்களுக்கான அரங்கங்களும், காட்டாக ஒலிம்பிக் நீச்சற் குளங்கள், அமைக்கப்படலாம். பெரும்பாலும் ஒலிம்பிக்கை ஏற்று நடத்திய நகரத்திற்கு ஒலிம்பிக் பூங்கா "மரபுவழி எச்சமாக" பயனளிக்கின்றது. ஒலிம்பிக் முடிந்த பிறகு அந்நினைவை நிலைநிறுத்தும் வண்ணம் இங்கு நகரியப் பூங்காவோ அருங்காட்சியகமோ கட்டமைக்கப்படுவதுண்டு.
1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு இவ்வாறு வரையறுத்துள்ளது: "எங்கு தட களப் போட்டிகளுக்கும் மிதிவண்டிப் போட்டிகளுக்கும் வட்டரங்கம் அமைக்கப்படுகின்றதோ அதே வளாகத்தில் நீச்சல், விற்போட்டி, கத்திச் சண்டை, குத்துச் சண்டை போன்ற அனைத்துப் போட்டிகளையும் நடத்துமிடங்கள், இயன்றளவில், கட்டமைக்கப்படவேண்டும்."[1] ஒலிம்பிக் போட்டிகள் அனைத்திலும் இவ்வாறான மையப்படுத்தப்பட்ட வளாகம் உருவாக்கப்படவில்லை. 1992, 2010 குளிர்காலப் போட்டிகளில் போட்டியரங்கங்கள் பரந்த பரப்பில் இருந்தன. 2016இல் இரியோ டி செனீரோ ஒலிம்பிக் போட்டிகளின்போது ஒரே பூங்காவாக அமைக்கப்படாது நான்கு "கொத்துக்களாக" அமைக்கப்பட்டுள்ளன.