ஒளியணு இராக்கெட் (Photon rocket) என்பது கருதுகோள் நிலையிலுள்ள ஒர் ஏவூர்தியாகும். உமிழப்பட்ட ஒளியணுக்களின் உந்துகையை இவ்வகை இராக்கெட்டுகள் தங்கள் உந்துவிசையாகப் பயன்படுத்திக் கொள்ளும்.[1]. அணுக்கரு ஒளியணு இராக்கெட்டுகளில் உள்ளது போல இராக்கெட் மேலுள்ள ஒளியணுவாக்கிகள் ஒளியணுக்களை உற்பத்தி செய்கின்றன. அனைத்து எரிபொருளும் ஒளியணுக்களாக மாற்றப்பட்டு ஒரே திசையில் வெளிப்படும் என்பதான நல்லியல் நிகழ்வு இத்தகைய இராக்கெட்டுகளின் நிலையான பாடநூல் வழக்காகும். அனைத்து ஒளியணுக் கற்றைகளும் முழுவதுமாக நேர்வரிசையாக்கப் படுவதில்லை என்பதும் அனைத்து எரிபொருளும் முழுமையாக ஒளியணுக்களாக மாற்றப்படுவதில்லை என்பதும் மிகவும் யதார்த்தமான உண்மை நிலையாகும். இதனால் மிக அதிக அளவிலான எரிபொருள் தேவைப்படும் என்பதால் மிகப்பெரிய இராக்கெட்டுகள் வடிவமைத்தல் அவசியமாகிறது [2][3]. கற்றை சீரொளி உந்துகையில் ஒளியணுவாக்கிகளும் விண்வெளியூர்திகளும் தனித்தனியாகப் பிரித்துவைக்கப்படுகின்றன. ஒளியணு மூலத்திலிருந்து வரும் ஓளியணுக்கள் கற்றையாக்கப்பட்டு சீரொளியைப் பயன்படுத்தும் விண்வெளியூர்திக்கு அனுப்பப்படுகிறது.
ஒளியணு சீரொளி அமுக்கியில் நேர்வரிசையாக்கப் பட்ட ஒளியணுக்களின் துள்ளல்களை ஆடிகளால் பலமடங்கு அதிகரிப்பதன் மூலம் மீளப்பயன்படுத்தப்படுகின்றன.