ஓளியூடுருவு தோற்படலம் (stratum lucidum) என்பது இறந்த அல்லது உயிர்ப்பில்லாது காய்ந்து இருக்கும் ஒளியூடுருவு தன்மைகொண்ட தோலணுக்களால் ஆன படலம். இது மாந்தர்களின் உள்ளங்கை, உள்ளங்கால்களில் காணப்படும் தோற்பகுதி. நுண்ணோக்கியால் காணும்பொழுது ஒளியூடுருவும் தன்மை அறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது. உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற தடித்த தோலின் மேலிருக்கும் பகுதியில்தான் இந்தப் படலத்தை நுண்ணோக்கியால் காணமுடிகின்றது[1][2].
கெரட்டினணுக்களால் (keratinocytes) ஆன மேற்தோல் குருணையணுப் படலத்துக்கும் (stratum granulosum) கெட்டி மேற்தோல் படலத்துக்கும் (stratum corneum) இடையே மூன்றுமுதல் ஐந்து வரையிலான படலங்களாக, இறந்துபட்ட தட்டையான படலங்களாக இந்த ஒளியூடுருவு படல அடை கெரட்டின் அணுக்களால் ஆனதாக உள்ளது[3][4] இந்த ஒளியூடுருவு படலத்தின் கெரட்டின் தோலணுக்கள் தனித்த எல்லைகள் கொண்டிராமல் கெரட்டின் அணுக்குகளுக்கு இடைப்பட்ட ஒருவகையான எலைடின் (eleidin) என்னும் அணுவிடைப் புரதப்பொருளால் நிரப்பப்பெற்றுள்ளது.