![]() | |
நிலைமை | ரண்டம் ஹவுஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ளது |
---|---|
துவங்கப்பட்டது | 1917 |
துவங்கியவர் | லெனார்ட் வூல்ஃப், வெர்சீனியா வூல்ஃப் |
Successor | சட்டோ & வின்டஸ் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
தலைமையகம் | இலண்டன் |
வெளியிடும் வகைகள் | நூல்கள் |
ஓகார்த் அச்சகம் (Hogarth Press) 1917ல் லெனார்ட் வூல்ஃப், வெர்சீனியா வூல்ஃப் ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு பிரித்தானிய பதிப்பகம் ஆகும். தொடக்கத்தில் இது ரிச்மன்டில் வூல்ஃப் தம்பதிகள் வாழ்ந்த ஓகார்த் இல்லத்தில் ஒரு கையால் இயக்கும் இயந்திரத்துடன் தொடங்கப்பட்டது. இந்த வீட்டின் பெயரைத் தழுவியே பதிப்பகத்துக்கும் பெயரிடப்பட்டது. வூல்ஃப் தம்பதிகளின் பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட இந்த அச்சகம், உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு வணிக நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. 1938ல் வெர்சீனியா வூல்ஃப் இந்த நிறுவனத்தில் இருந்து விலகிக்கொள்ளவே, லெனார்ட் வூல்ஃப் யோன் லேமன் என்பவருடன் சேர்ந்து 1646 வரை ஒரு பங்கு நிறுவனமாக நடத்தினார். இதன் பின்னர் இது "சட்டோ அன்ட் வின்டசு" நிறுவனத்தின் ஒரு கூட்டு நிறுவனம் ஆனது. தற்போது "ரன்டம் ஹவுஸ்" நிறுவனத்தின் ஒரு பகுதியாகிய கிரவுன் பதிப்பகக் குழுமத்தின் அச்சகமாக "ஓகார்த்" உள்ளது.
புளூம்சுபெரி குழு உறுப்பினர்களின் நூல்களை அச்சிட்டதோடு ஓகார்த் அச்சகம், உளப்பகுப்பாய்வியல் ஆக்கங்களை வெளியிடுவதிலும் முன்னணியில் இருந்தது. அத்துடன், பிற மொழி நூல்களின் மொழிபெயர்ப்புகளை, குறிப்பாக உருசிய மொழி ஆக்கங்களை மொழிபெயர்த்து இந்நிறுவனம் வெளியிட்டு வந்தது.
வூல்ஃப் தம்பதிகள் அச்சிடுவதை ஒரு பொழுதுபோக்காகவே தொடங்கினர். எழுத்து வெர்சீனியாவுக்கு மன அழுத்தத்தைக் கொடுப்பதாக அமையும்போது, அதிலிருந்து விலகியிருக்க அச்சிடுதல் ஒரு வழியாக அமைந்தது. வூல்ஃப் தம்பதிகள் 1917ல் கையால் இயக்கும் அச்சியந்திரம் ஒன்றை 19 பவுனுக்கு (2012ல் 900 பவுனுக்குச் சமம்) வாங்கினர். தாமாகவே அதைப் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டனர். அவர்கள் வாழ்ந்த "ஓவார்த் இல்ல" சாப்பாட்டு அறையில் இந்த இயந்திரத்தை அவர்கள் நிறுவினர். 1917 யூலை மாதத்தில் அவர்களது முதல் நூல் வெளியானது. இச்சிறிய நூலில் லெனார்ட் எழுதிய ஒரு கதையும், வெர்சீனியா எழுதிய ஒரு கதையும் இடம்பெற்றிருந்தது.[1]
1917க்கும், 1946க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்பதிப்பகத்தில் இருந்து 527 நூல்கள் வெளியாகின.[2]