க. உமாமகேஸ்வரன் | |
---|---|
பிறப்பு | நல்லைநாதன் 18 பெப்ரவரி 1945 வறுத்தலைவிளான், இலங்கை |
இறப்பு | 16 சூலை 1989 கொழும்பு, இலங்கை | (அகவை 44)
மற்ற பெயர்கள் | முகுந்தன் |
பணி | நிலஅளவையாளர் |
அமைப்பு(கள்) | தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் |
கதிர்காமப்பிள்ளை உமாமகேஸ்வரன் (முகுந்தன், 18 பெப்ரவரி 1945 – 16 சூலை 1989), தமிழீழ மக்களின் விடுதலைக்கழக (புளொட்) இயக்கத்தின் செயலதிபரும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டி.பி.எல்.எவ்) அமைப்பாளரும் ஆவார். 1976 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு தமிழீழப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயற்படத்தொடங்கிய போது அதன் முதற் தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர்.[1] உமாமகேஸ்வரன் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து அவருடைய மெய்பாதுகாவலர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.[2]
நல்லைநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட உமாமகேசுவரன் 1945 பெப்ரவரி 18 இல் யாழ்ப்பாண மாவட்டம், வறுத்தலைவிளானில் பிறந்தார்.[3][4] இலங்கை நிலஅளவையாளர் திணைக்களத்தின் உயரதிகாரியாக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார்.[4][5][6]
இக்காலகட்டத்தில் அவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தலைவர்களுடன் மாத்திரமன்றி சிறுசிறுகுழுக்களாக செயற்பட்டு வந்த அனைத்து ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஓரணியில் திரட்டும் தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தவர்.
1975 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தனித்தும் சிறுசிறு குழுக்களாகவும் செயற்பட்டு வந்த ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), புதிய புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) போன்ற ஆரம்பகால போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனும் நெருக்கமான நட்புறவை கொண்டிருந்தார். அவர்களுக்கான வெளியுலகத் தொடர்புகள் உட்பட பல்வேறு தேவைகளையும் கொழும்பில் இருந்தவாறே மேற்கொண்டிருந்தார்.
பாலஸ்தீனத்தில் ஆயுதப்பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய உமாமகேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கையூடாகவே போராட்டப்பணிகளை முன்னெடுத்துச் சென்றார்.
"புதிய தமிழ்ப் புலிகள்" என்று 1972 ஆரம்பிக்கப்பட்ட ஈழ போராட்ட அமைப்பு, இன்று முதன்மையாக இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று 1976 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளினது தொடக்க கட்ட தலைவராக உமாமகேஸ்வரன் தேர்தெடுக்கப்பட்டு செயற்பட்டார்.[7] 1980 ஆம் ஆண்டில் உமாமகேஸ்வரனுக்கும் வேலுப்பிள்ளை பிராபாகரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக உமாமகேஸ்வரன் பிரிந்து சென்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) என்ற ஈழப் போராட்ட இயக்கத்தை ஆரம்பித்தார்.[8]
நா. சண்முகதாசன், சரத் முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்தின, அண்ணாமலை போன்ற இடதுசாரி தலைவர்களுடனும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜய குமாரணதுங்க மற்றும் தென்னிலங்கையின் முற்போக்கு சக்திகளுடனும் நெருக்கமான உறவை பேணிவந்தார் உமாமகேஸ்வரன். இதன் காரணமாக வவுனியாவின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டனர்.
{{cite book}}
: CS1 maint: unfit URL (link)