க. துரைரத்தினசிங்கம் K. Thurairetnasingam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் | |
பதவியில் 2015–2020 | |
பதவியில் 2002–2004 | |
முன்னையவர் | மு. சிவசிதம்பரம், தவிகூ |
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சேனையூர், திருகோணமலை, இலங்கை | சனவரி 4, 1941
இறப்பு | மே 17, 2021 திருகோணமலை | (அகவை 80)
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழிடம் | மூதூர் கிழக்கு |
வேலை | பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் |
சமயம் | இந்து |
இனம் | இலங்கைத் தமிழர் |
கதிர்காமத்தம்பி துரைரத்தினசிங்கம் (Kathirgamathamby Thurairetnasingam, பிறப்பு: சனவரி 4, 1941 – மே 17, 2021) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1][2]
திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் 1982 இல் சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். 1998 இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி இளைப்பாறினார்.
துரைரத்தினசிங்கம் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ததேகூ உறுப்பினர்களில் இரண்டாவதாக வந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.[3] ஆனாலும், ததேகூ தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 சூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.[3] திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] தனிப்பட்ட காரணங்களுக்காக 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை.[5]
துரைரத்தினசிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[6] இவர் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[7][8][9]
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2001 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | ததேகூ | தெரிவு செய்யப்படவில்லை | |
2004 நாடாளுமன்றம்[4] | திருகோணமலை மாவட்டம் | ததேகூ | 34,773 | தெரிவு செய்யப்பட்டார் |
2015 நாடாளுமன்றம்[6] | திருகோணமலை மாவட்டம் | ததேகூ | 14,779 | தெரிவு செய்யப்படவில்லை (தேசியப் பட்டியல் மூலம் தெரிவு) |
துரைரெட்ணசிங்கம் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 மே 17 அன்று தனது 80-வது அகவையில் காலமானார்.[10][11]