கங்காமூலா (Gangamoola) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். இது வராக பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. கங்காமூலா மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலைகளில் ஒன்றாகும். மேலும் இது துங்கா, பத்ரா மற்றும் நேத்ராவதி ஆகிய மூன்று ஆறுகள் உற்பத்தியாகும் இடமாக அறியப்படுகிறது.[1]
கங்கமூலா என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் கங்காமூலா-அரோலி-கங்கிரிகல் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும்.[2] இது கடல் மட்டத்திலிருந்து 1458 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலை குதுரேமுக தேசிய பூங்காவின் எல்லைக்குள் உள்ளது.[3] இந்த மலை அடர்ந்த காடுகளுடன் ஆண்டிற்கு 575 செ.மீ. மழை பெறும் பகுதியாக உள்ளது.[4] இந்த மலைக்கு அருகாமையில் உள்ள பகுதி இரும்பு தாதின் மூலமான காந்தம் - குவார்ட்சைட் படிவுகளால் நிறைந்துள்ளது.[2]
கங்கமூலா என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் குதுரேமுக பல்லுயிர் துணைக் குழுவின் ஒரு பகுதியாகும். இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின்உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5] 1980ஆம் ஆண்டு பறவையியல் வல்லுநர் டேவிட்டர் நடத்திய ஆய்வில், குதிரைமுகே-அரோலி-கங்காமூலா பகுதியில் 107 வகையான பறவை சிற்றினங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டது.[6] காட்டுச் சாதிக்காய், மிரிசுடிகா டாக்டிலாய்ட்சு போன்ற மரங்களால் அதிக எண்ணிக்கையிலான பறவை சிற்றினங்கள் இங்கு உள்ளன.[6]
துங்கா, பத்ரா, நேத்ராவதி ஆகிய மூன்று ஆறுகளின் பிறப்பிடம் கங்கமூலா.
துங்கா தன் தோற்றத்திலிருந்து, வடகிழக்கு திசையில் சிருங்கேரி, தீர்த்தஹள்ளி மற்றும் சீமக்கா நகரங்களைக் கடந்து செல்கிறது. இதன் குறுக்கே காஜனூரில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 147 கி.மீ. தூரத்தைக் கடந்த பிறகு, இது சீமக்கா அருகே கூடிளியில் பத்ராவுடன் இணைந்து துங்கபத்திரை ஆறாக உருவாக்குகிறது.[7]
தன் தோற்றத்திலிருந்து, பத்ரா ஆறு முதலில் கிழக்கே பாய்கிறது. பின்னர் பத்ராவதி நகரைக் கடந்து வடகிழக்காகப் பாய்கிறது. சுமார் 178 கி.மீ. தூரம் பயணித்த பிறகு கூட்லியில் துங்காவுடன் இணைகிறது.[7]
நேத்ராவதி தன் தோற்றத்திலிருந்து, மேற்கு நோக்கிப் பாய்ந்து, தர்மஸ்தலா மற்றும் மங்களூர் நகரங்களைக் கடந்து அரபிக்கடலில் கலக்கின்றது.
இப்பகுதி தேசிய பூங்காவின் பகுதியாக இருந்தாலும், குத்ரேமுகே இரும்புத்தாது குழும நிறுவனம் மூலம், இந்த பகுதியில் இரும்புத் தாது வெட்டி எடுக்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது குறித்து கவலைகளைத் தெரிவித்தனர். ஏனெனில் சுரங்கமானது இப்பகுதியில் உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் சமநிலையைச் சீர்குலைப்பதாகவும், ஆறுகள் முக்கியமாக பத்ரா நதியை மாசுபடுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிறுவனம் தனது சுரங்க நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முடிவின்படி, 31 திசம்பர் 2005 அன்று சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்டது.[8]