கங்கார் பூலாய் Kangkar Pulai | |
---|---|
![]() பூலாய் இண்டா பொழுதுபோக்கு பூங்கா | |
![]() | |
ஆள்கூறுகள்: 1°33′28.260″N 103°35′10.770″E / 1.55785000°N 103.58632500°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
மாநகரம் | இசுகந்தர் புத்திரி |
முக்கிம் | பூலாய் |
உருவாக்கம் | 1917 |
அரசு | |
• நகரண்மைக் கழகம் | இசுகந்தர் புத்திரி மாநகராட்சி |
• மாநகரத் தலைவர் | சாலேவுதீன் அசான் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 81110 |
தொலைபேசி | +607 |
வாகனப் பதிவெண்கள் | J |
கங்கார் பூலாய், (மலாய்: Kangkar Pulai; ஆங்கிலம்: Kangkar Pulai; சீனம்: 江加蒲來新村); ஜாவி: کڠکار ڤولاي ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கிராமம் ஆகும். மாநிலத் தலைநகர் ஜொகூர் பாருவில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நகர்ப்புறக் கிராமத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் கங்கார் பூலாய் புதுநகரம் (Bandar Baru Kangkar Pulai) உள்ளது. கிழக்கில் தாமான் ஸ்ரீ பூலாய் பெர்டானா 2 (Taman Sri Pulai Perdana 2) எனும் குடியிருப்புத் திட்டம் உள்ளது. மற்ற பகுதிகளில் கெக் செங் (Keck Seng Group) குழுமத்திற்கு சொந்தமான எண்ணய்ப்பனைத் தோட்டங்கள் உள்ளன.[1]
கங்கார் பூலாய் கிராமத்தின் முதல் குடியேற்றம் கங்கார் பூலாய் பழைய நகரத்தில் உருவானது (மலாய்: Pekan Lama Kangkar Pulai; ஆங்கிலம்: Kangkar Pulai Old Town). அப்போது அது ஒரு சீனர் கிராமமாகும்.
அப்போதைய ஜொகூர் சுல்தான் இப்ராகிம் (Sultan Sir Ibrahim) அவர்களின் ஆட்சியின் போது கஞ்சு முறையின் (Kangchu System) கீழ் உருவான குடியேற்றம் ஆகும்.[2]
கஞ்சு முறை அல்லது கஞ்சு அமைப்பு என்பது 19-ஆம் நூற்றாண்டில் ஜொகூரில், சீன விவசாயக் குடியேற்றக்காரர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு ஆகும். முன்பு காலத்தில் அங்கு குடியேறிய சீனர்கள் தங்களுக்குள் இனச் சமூகச் சமூகங்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.[3]
அந்த வகையில் கங்கார் பூலாய் பகுதியில் குடியேறிய சீனர்களும் தங்களுக்குள் ஒரு சமூக அமைப்பை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் குடியேறிய இடம் ஒரு சீனர் கிராமமாக மாறியது. கங்கார் பூலாய் கிராமமும் உருவானது.
கங்கார் பூலாய் ஊராட்சி மன்றம் (Kangkar Pulai Municipal Council) 15 மார்ச் 1953-இல் நிறுவப்பட்டது. அந்த மன்றத்தின் முதல் அலுவலகம் கங்கார் பூலாய் சாலையில் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அலுவலகம் சீன வணிகச் சபைக் கட்டடத்திற்கு (Chinese Business Assembly) மாற்றப்பட்டது.
பின்னர் மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1959-ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கட்டப்பட்ட கங்கார் பூலாய் சமூக மண்டபத்திற்கு (Kangkar Pulai Community Hall) கங்கார் பூலாய் ஊராட்சி மன்றத்தின் அலுவலகம் மாற்றப்பட்டது.
1971-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி, கங்கார் பூலாய் ஊராட்சி மன்றமும் மற்றும் ஜொகூர் பாருவில் இருந்த மற்ற 7 உள்ளூர் ஊராட்சி மன்றங்களும் மத்திய ஜொகூர் பாரு மாவட்ட நகராண்மைக் கழகத்தில் (Johor Bahru Tengah District Council) இணைக்கப்பட்டன.
பின்னர் 2018-ஆம் ஆண்டில் இருந்து அந்தக் கூட்டு மன்றங்களின் அமைப்பு இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (Iskandar Puteri City Council) என அழைக்கப் படுகின்றது.[4]
கங்கார் பூலாய் நகர்ப் புறத்தின் பழைய நகரம் (Kangkar Pulai Old Town) ஒரு சீனர் கிராமம் ஆகும். மற்றும் கங்கார் பூலாயின் முதல் குடியேற்றமாகும். அந்தக் கிராமத்தின் பெயரால் தான் கங்கார் பூலாய் நகரமும் இப்போது அழைக்கப்படுகிறது. இப்போது அங்குள்ள கிராமவாசிகள் கஞ்சு முறையின் போது குடியேறிய ஆக்கா (Hakka) வழித்தோன்றல்கள் ஆகும்.
முன்பு காலத்தில் கங்கார் பூலாய்க்கு அருகிலுள்ள செம்பனைத் தோட்டங்களில் குடியேறிய தமிழர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் அங்கு வாழ்கின்றனர். மலாயா அவசரகாலத்தின் போது, கங்கார் பூலாய் கிராமம் பிரிக்ஸ் திட்டத்தின் (Briggs Plan) கீழ் 5 புது கிராமங்களாகப் பிரிக்கப்பட்டது.
இங்குள்ள மலாய்க் கிராமம் 1950-களின் முற்பகுதியில் உருவானது. பழைய கங்கார் பூலாய் நகரத்தின் மேற்கில் மலைப்பாங்கான பகுதியில் மலாய் குடியேற்றவாதிகளால் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது.
கங்கார் பூலாய் நகர்ப் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி.[5] 663 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[6][7]
கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி 1953-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. தொடக்கக் காலத்தில் காரை நகர் தமிழ்ப்பள்ளி (SRJK (T) Karai Nagar) என்று அழைக்கப்பட்டது.
1985-ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கத்தின் முழு உதவி பெறும் தமிழ்ப்பள்ளியாக மாற்றம் கண்டது. அதன் பின்னர் பள்ளியின் பெயர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி என மாற்றப்பட்டது.[8]
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|
கங்கார் பூலாய் | SJK(T) Kangkar Pulai | கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி | கங்கார் பூலாய் | 663 | 47 |