கடல்பாசி வளர்த்தல் (Seaweed farming) என்பது கடல்நீரின் ஆல்காக்களை வளர்த்து அறுவடை செய்யும் நடைமுறையைக் குறிக்கும். கடல்பாசிகள் யாவும் பூக்கும் திறனற்றவையாகும். உண்மையான வேர்த்தண்டும் இலைகளும் இவற்றுக்குக் கிடையாது. எளிய வடிவத்தில், இவை பாறைகள், இறந்த பவழப்பாறைகள், கற்கள், கூழாங்கற்கள், கடினமான ஆதாரத்தளங்கள் மற்றும் பிற தாவரங்களின் மீது காணப்படுகின்றன. மிகவளர்ந்த நிலையில் இவை ஆல்காக்களின் வாழ்க்கைச் சுழற்சியை கட்டுப்படுத்துகின்றன. நீண்ட காலமாக சீனா, கொரியா சப்பான் போன்ற நாடுகளில் கடல்பாசியானது முக்கிய உணவுப் பொருளாக இருந்து வருகிறது. கெலிடியம், டெரோகிளாடியா[1], போர்ஃபைரா[2], லாமினேரியா[3] போன்ற பாசியினங்கள் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த சில இனங்களாகும். பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும், மீன்பிடி அழுத்தம் மற்றும் சுரண்டப்படும் மீன்வளத்தைக் குறைக்கவும் கடல்பாசி வளர்த்தல் ஒரு மாற்றாக கருதப்படுகிறது.[4] உலகம் முழுவதும் கடல்பாசி ஓர் உணவு ஆதாரமாக சாகுபடி செய்யப்படுகிறது. அகரகர் மற்றும் காராகீனன் பாசிப்பொருட்கள் ஓர் ஏற்றுமதிப் பொருளாகக் கருதப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்படுகின்றன [5].
டோக்கியோ விரிகுடாவில் [2] 1670 ஆம் ஆண்டளவில் சப்பானில் கடற்பாசி சாகுபடி தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் இலையுதிர்காலத்தில், விதைச்செடிகள் கிடைக்கின்ற கடற்பகுதியில் விவசாயிகள் மூங்கில் கிளைகளை வைப்பார்கள். ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் இந்த கிளைகள் நதிக் கரையோரத்திற்கு மாற்றப்படும். ஆற்றின் ஊட்டச்சத்துக்கள் மூலம் கடற்பாசி வளரும் [2].
1940 களில் சப்பானியர்கள் இரண்டு மூங்கில்களில் இணைக்கப்பட்ட செயற்கை கயிற்று வலைகளில் கடல்பாசி சாகுபடி முறையை அரிமுகப்படுத்தி மேம்படுத்தினர். இதனால் விளைச்சல் இருமடங்காக இரட்டித்தது. இதே முறையின் ஒரு மலிவான மாறுபாடாக நீள் கயிற்றில் பாசி வளர்க்கும் முறை தோன்றியது. இதை இபி முறை என்று அழைக்கிறார்கள். இம்முறையில் மூங்கில்களுக்கு இடையில் எளிய கயிறுகள் கட்டி கடல்பாசிகள் வளர்க்கப்பட்டன.
1970 களின் முற்பகுதியில் கடற்பாசி மற்றும் கடற்பாசி தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் பெற்ற ஒரு தேவை இருந்தது. சாகுபடியையும், விநியோகத்தையும் அதிகரிப்பது தயாரிப்புகளை அதிகரிக்க சிறந்த வழிமுறையாக கருதப்பட்டது[6].