கட்டுமான விபரக்கூற்று நிறுவனம் (Construction Specification Institute) என்பது, கட்டுமான விபரக்கூற்றுகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். இது இப்போது கட்டிடத் தகவல் மேலாண்மையையும், கட்டிட வசதிகளை மேம்படுத்துவதற்காகத் திட்டக் குழுக்களுக்கான கல்வியையும் முன்னேற்றுவதை நோக்கமாகக்கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம்,விபரக்கூற்றாளர், கட்டிடக்கலைஞர், பொறியாளர், ஒப்பந்தக்காரர், கட்டிடப்பொருள் உற்பத்தியாளர், கட்டிட உரிமையாளர் போன்றோரை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களோடு கூடியது.
இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவில் கட்டுமானங்கள் பெருமளவு அதிகரித்தன. இத்தகைய ஒரு சூழலில் கட்டுமானங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டியிருந்தது. கட்டுமான விபரக்கூற்றுகள் கட்டுமானங்களின் தரத்தைப் பேணுவதில் முக்கியமான பங்காற்றுவதால். தரமான விபரக்கூற்றுகளை உருவாக்குவதன் தேவை உணரப்பட்டது. 1948 ஆம் ஆண்டில், கட்டுமான விபரக்கூற்றுகளின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்காவின் அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த சில விபரக்கூற்று எழுத்தர்கள் ஒன்றுகூடி கட்டுமான விபரக்கூற்று நிறுவனத்தை உருவாக்கினர். விபரக்கூற்றுகளுக்கான மிகச்சிறந்த நடைமுறைகள், செந்தரங்கள், விபரக்கூற்று ஆவணத்துக்கான தரவடிவங்கள், தொழில்முறைக் கல்வி வசதிகள், சான்றளித்தல் போன்றவற்றை உருவாக்கிப் பேணுவது இந்நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருந்தது.[1]
அரசாங்க நிறுவனங்களின் விபரக்கூற்று எழுத்தர்களை உறுப்பினர்களாகக்கொண்டு தொடங்கிய இந்த நிறுவனம், பின்னர் தனியார்துறையைச் சேர்ந்த விபரக்கூற்று எழுத்தர்களையும் சேர்த்துக்கொண்டது. காலப்போக்கில், கட்டுமான விபரக்கூற்றின் ஆர்வத் துறைகளோடு தொடர்புடைய பல்வேறு உயர்தொழில் வல்லுனர்களையும், கட்டிடப்பொருள் உற்பத்தியாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், கட்டிடவசதி மேளாளர்கள் போன்றோரையும் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு வளர்ச்சியடைந்தது. இப்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இதற்கு உறுப்பினர்கள் உள்ளனர்.
கட்டுமானத் துறையில், தகவல் மேலாண்மை தொடர்பான பல்வேறு விடயங்களின் மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்களில் இந்நிறுவனம் பிற நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படுவதைக் காண முடிகிறது.
1960களில் இருந்து "மாஸ்டர்போர்மட்" (MasterFormat), "செக்சன்போர்மட்" (SectionFormat), "பேஜ்போர்மட்" (PageFormat) போன்ற விபரக்கூற்றுத் தரவடிவங்களை இந்நிறுவனம் உருவாக்கிப் பேணிவருகிறது.