கண் செதில் (ocular scale), கண் மூடி அல்லது கண்ணாடி என்பது பாம்புகளில் வெளிப்படையான, அசையாத வட்டு வடிவ தோல் அல்லது செதில் அடுக்கு ஆகும். இது சில விலங்குகளின் பாதுகாப்புக்காக, குறிப்பாகக் கண் இமைகள் இல்லாத விலங்குகளில் கண்களை மூடி உள்ளது. இசுகுவாமேட் ஊர்வனவற்றில் நிக்டிடேட்டிங் சவ்வு மற்றும் கண் இமைகள் இரண்டும் கண் மூடியின் பரிணாம தோற்றம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கரு ஆய்வுகள் முதுகு மற்றும் வயிற்றுப்புறக் கண் இமைகளின் இணைவை ஆதரிக்கின்றன.[1] பிரில் (Brille) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு செருமன், நார்வே மற்றும் இடச்சு மொழிகளில் "கண்ணாடி" அல்லது " மூக்குக் கண்ணாடி " என்று பொருள்.
பாம்புகளில், கண் இமைகள் இல்லை ஆனால் கண்மூடி தெளிவாக உள்ளது. ஆனால் பாம்புகள் தோலுரிக்கும் போது மட்டுமே இதனை வேறுபடுத்தி அறிய முடியும். இந்த நேரத்தில், இது மேகமூட்டம் போலக் கண்ணுக்கு மேல் மூடியாகத் தெரியும். பாம்பு தோலுரிக்கும் போது கண்மூடி தோலின் ஒரு பகுதியாக, பொதுவாக வெளியேறும். கண்மூடி கண்களைத் தூசி மற்றும் அழுக்கிலிருந்து பாதுகாக்கின்றது.[2]
பாம்புகள், பாத மடல் பல்லிகள், இரவு பல்லிகள் மற்றும் சில அரணைகளில் கண்மூடி காணப்படும். யூபில்பரினே (கண் இமை கெக்கோஸ்) என்ற துணைக் குடும்பத்தில் உள்ள விலங்குகளைத் தவிர அனைத்து மரப் பல்லிகளும் கண்மூடியினைக் கொண்டுள்ளன.
எலும்பு மீன்களின் சில குழுக்களில் ஒளி ஊடுருவக்கூடிய வகையில் கண்ணிமை காணப்படும். இது கொழுப்பு கண்ணிமை எனப்படும். சில ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பறவைகள் ஒரு ஒளி ஊடுருவக்கூடிய மூன்றாவது கண் இமையினைக் கொண்டுள்ளன. இது கண் முழுவதும் கிடைமட்டமாக நகர்கின்றது. இதற்கு நிக்டிடேட்டிங் சவ்வு என்று பெயர்.