கத்ரி கோபால்நாத் Kadri Gopalnath | |
---|---|
பிள்ளையார்பட்டியில் கத்ரி கோபால்நாதின் கச்சேரி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | மங்களூர், கருநாடகம், இந்தியா | 11 திசம்பர் 1949
இறப்பு | 11 அக்டோபர் 2019 மங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 69)
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, திரையிசை, ஜாசு இசைக்கோர்வை |
தொழில்(கள்) | சாக்சபோன் வாசிப்பு |
இணையதளம் | http://www.kadrigopalnath.com/ |
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள் | |
சாக்சபோன் |
கத்ரி கோபால்நாத் (துளு: ಕದ್ರಿ ಗೋಪಾಲನಾಥ್, டிசம்பர் 11, 1949 - அக்டோபர் 11, 2019) தென்னிந்தியாவைச் சேர்ந்த சாக்சபோன் இசைக் கலைஞர் ஆவார்.
கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா.[1] கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார்.[2] மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத். பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.
கோபால்நாத் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை செம்பை நினைவு அறக்கட்டளையில் நிகழ்த்தினார். அதன்பிறகு 1980 ஆம் ஆண்டு நடந்த ‘பாம்பே ஜாஸ் இசைவிழா’ இவரின் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த ஜான் ஹன்டி எனும் ஜாஸ் இசைக் கலைஞர், கோபால்நாத்தின் இசையால் ஈர்க்கப்பட்டு இருவரும் இணைந்து இசை வழங்க விரும்பினார். ஜாஸ்சும் கருநாடக இசையும் கலந்த இசைக்கோர்வை, இசை நேயர்களை பெரிதும் கவர்ந்தது.
பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, செருமனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த அனைத்துலக செர்வான்டினோ இசைவிழா (International Cervantino Festival), பிரான்சின் பாரிசில் நடந்த ‘இசையரங்க இசைவிழா’ என நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார்.
தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது; அப்பாடல்களில் பெரும்பாலும் 'கல்யாண வசந்தம்' எனும் இராகம் பயன்படுத்தப்பட்டது. செவ்வி ஒன்றில் கத்ரி கோபால்நாத் பகிர்ந்தது: "ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது."