கந்தையா வைத்தியநாதன்

கந்தையா வைத்தியநாதன்
K. Vaithianathan
வீடமைப்பு, சமூக சேவைகள் அமைச்சர்
பதவியில்
1952–1953
இலங்கை செனட் சபை உறுப்பினர்
நிரந்தர செயலாளர், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு அமைச்சு
பதவியில்
1947–1952
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1896
இறப்பு1965
தேசியம்இலங்கைத் தமிழர்
சமயம்இந்து

சேர் கந்தையா வைத்தியநாதன் (Kanthiah Vaithianathan, 1896-1965) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மேலவை உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.

அரசுப் பணி

[தொகு]

வைத்தியநாதன் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் கோப்பாய் கிராமத்தில் பிறந்தவர்.யாழ் சம்பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றவர். இலங்கை அரசுப்பணியில் நீண்டகாலம் பணியாற்றியவர். 1947 ஆம் ஆண்டில் இவர் சுதந்திர இலங்கையின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அன்றைய டி. எஸ். சேனநாயக்கா அரசில் 1952 ஆம் ஆண்டில் வைத்தியநாதன் இலங்கை செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1] 1953 ஆம் ஆண்டில் ஜி. ஜி. பொன்னம்பலம் அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இவருக்குத் தொழிற்துறை அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. இவருக்கு இங்கிலாந்து மன்னரால் "சேர்" பட்டம் வழங்கப்பட்டது.

அன்றைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார்.

சமயப் பணி

[தொகு]

இறுதிக் காலத்தில் திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.[2] திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண வேலைகளை அவரே நேரடியாக கவனித்தார். இதற்காக அவர் கோயிலுக்கு அருகாமையிலேயே "கொட்டில்" என ஒரு சிறிய வீடு கட்டி அங்கேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்.

நாட்டில் உயர்ந்த பதவி வகித்தவராக இருந்தபோதும் கோயிலில் சாதாரணமாக ஒரு வேட்டியுடனும் துண்டுடனும் தொண்டரோடு தொண்டராக பணி செய்வார்.

கோவிலைப் புனரமைத்ததுடன் அதன் அருகாமையில் ஒரு சமஸ்கிருத பாடசாலை ஆரம்பித்து அந்தண சிறுவர்கள் இலவசமாக சமஸ்கிருதம், வேதம் மற்றும் ஆகமங்கள் பயில ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்திலிருந்து சுப்பிரமணிய பட்டர் என்ற சமஸ்கிருத பண்டிதரை குருவாக நியமனம் செய்தார்.

திருக்கேதீச்சர பணிகள் நடைபெற்ற காலப்பகுதியிலேயே (1950களின் நடுப்பகுதியில்) தனது சொந்த ஊரான கோப்பாயில் இருந்த வீரபத்திர சுவாமி கோயிலையும் ஊர் மக்களுடன் சேர்ந்து புனருத்தாரணம் செய்து உதவினார். அக்கோவிலில் 1955 ஆம் ஆண்டு தை மாதம் கும்பாபிடேகம் நடைபெற்றது.

குடும்பம்

[தொகு]

வைத்தியநாதனின் மகன் மகேன் வைத்தியநாதன் இலங்கை வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajasingham, K. T. "Chapter 15: Turbulence in any language". SRI LANKA: THE UNTOLD STORY. Archived from the original on 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
  2. 2.0 2.1 Boyle, Richard (2 மே 1999). "He went against the flow". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/990502/plus7.html.