கனடாவின் தேசிய பலே

கனடாவின் தேசிய பேலே என்பது 1951 ஆம் ஆண்டில் டொரோண்டோ, ஒன்டாரியோவில் நிறுவப்பட்ட ஒரு கனடிய பேலே நிறுவனமாகும். இதன் முதல் கலை இயக்குநராக செலியா பிரான்கா இருந்தார். சொந்தமான இசைக்குழுவுடன் 70 நடனக் கலைஞர்களைக் கொண்ட இந்த தேசிய பேலே நிறுவனம், 2022 ஆம் ஆண்டு முதல் கலை இயக்குநர் ஹோப் மியூர் தலைமையில் இயங்கி வருகிறது. பல்வேறு பாணிகளைக் கொண்ட பாரம்பரிய முழு நீள செவ்வியல் பேலே நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்கும், சமகால படைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், புதிய பேலே நடனங்களின் உருவாக்கத்தையும், கனடிய நடனக் கலைஞர்கள், நடன அமைப்பாளர்களின் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதற்கும் இந்நிறுவனம் பெயர் பெற்றது.

இந்த நிறுவனத்தின் படைப்புகளில் சர் ஃபிரெடெரிக் ஆஷ்டன், ஜார்ஜ் பலான்சின், ஜான் கிரான்கோ, ருடோல்ஃப் நுரேயேவ், ஜான் நியூமையர், வில்லியம் ஃபோர்சைத், ஜேம்ஸ் குடெல்கா, வேன் மெக்கிரிகர், அலெக்ஸி ரட்மான்ஸ்கி, கிரிஸ்டல் பைட், கிறிஸ்டோபர் வீல்டன், அஸுர் பார்டன், கில்லாம் கோட் மற்றும் ராபர்ட் பினெட் ஆகியோரின் படைப்புகள் அடங்கும். தேசிய பேலே குழு கனடாவிலும் பன்னாட்டு அளவிலும் சுற்றுப்பயணம் செய்கிறது. இலண்டன், பாரிஸ், ஹாம்பர்க், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், நியூயார்க் நகரம், வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் அரங்கேற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

உருவாக்கம்

[தொகு]

1951 ஆம் ஆண்டில், கனடாவில் இரண்டு முக்கிய பேலே நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று குவெனெத் லாய்டின் தலைமையில் இயங்கிய ராயல் வின்னிபெக் பேலே, மற்றொன்று பொரிஸ் வோல்கோஃப் நிறுவிய வோல்கோஃப் கனேடியன் பேலே ஆகியவையாகும். பிந்தைய நிறுவனமானது டொரொண்டோவை தளமாகக் கொண்டிருந்தது. சாட்லர்ஸ் வெல்ஸ் ராயல் பேலேயினால் அமைக்கப்பட்ட முன்மாதிரியைப் பின்பற்றி, பரந்த அடிப்படையிலான கனேடிய பேலே குழுவை உருவாக்கும் நோக்கத்துடன், கனேடிய பேலே ஆர்வலர்களின் ஒரு குழு இந்த நிறுவனத்தை உருவாக்க முன்வந்தது.[1]

ஆங்கில பாலே ஆர்வலர்களான சீலா புளூம், ரோஸ்மேரி வின்க்லி மற்றும் பட்ரீசியா பார்ன்ஸ் (பிறப்பு பெயர் வின்க்லி) (அப்போதைய காலகட்டத்தில் டொரன்டோவில் வசித்து வந்தவர்கள்) தொடக்க கால நிதி திரட்டலுக்குப் பொறுப்பாக இருந்தனர். இந்த முயற்சி நிறுவனத்திற்கு அதன் முதல் நடனக் கலைஞர்கள், நடன அமைப்பாளர்கள் மற்றும் கலை இயக்குநர் ஆகியோரை ஈர்க்க உதவியது. லாய்டும் வோல்கோஃப்பும் நிறுவனத்தின் முதல் கலை இயக்குநராக இருப்பதில் ஆர்வமாக இருந்தனர். ஆனால், புதிய பாலே நிறுவனத்திற்கான நடனக் கலைஞர்களை பாரபட்சமற்று தேர்வு செய்வதை உறுதிப்படுத்த ஒரே வழி வெளியாள் ஒருவரை பணியமர்த்துவதே என்று ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டனர். அம்முடிவின்படி பிரித்தானிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான சீலியா ஃபிரான்காவை கலை இயக்குநராகத் தேர்ந்தெடுத்தனர். அவருக்கு நடனக் கலைச் சமூகத்தினுள் பல தொடர்புகள் இருந்தன, ஆனால், அந்த நேரத்தில் அவர் கனடாவிற்கு இரண்டு முறை மட்டுமே சென்றிருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Crabb, Michael; Cornell, Katherine (2015-03-04). "National Ballet of Canada". The Canadian Encyclopedia. Historica Canada. Retrieved 2015-05-23.
  2. James Neufeld (1996). Power to Rise: The Story of National Ballet of Canada. Toronto, Ontario, Canada: University of Toronto Press. ISBN 0-8020-4109-4.