கனி குசுருதி Kani Kusruti | |
---|---|
![]() 2024இல் கனி குசுருதி | |
பிறப்பு | கனி திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | நாடகப் பள்ளி, திருச்சூர் |
பணி | நடிகை |
கனி குசுருதி (Kani Kusruti) ஒரு இந்திய நடிகையும் மற்றும் வடிவழகியும் ஆவார். 2009 ஆம் ஆண்டில் கேரளா கஃபே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அங்கீகாரம் பெற்றார். அதில் இவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[1][2] 2020 ஆம் ஆண்டில் கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருதையும்,[3] பிரியானி படத்தில் கதீஜா வேடத்தில் நடித்ததற்காக மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும் பெற்றுள்ளார்.[4]
கனி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள செருவக்கல் என்ற சிறிய கிராமத்தில் சமூக ஆர்வலரும் பகுத்தறிவுவாதியுமான பெற்றோர்களான ஜெயஸ்ரீ ஏ. கே. மற்றும் மைத்ரேய மைத்ரேயனுக்கும் மகளாகப் பிறந்தார். 15 வயதில், தனது 10 ஆம் வகுப்பு தேர்வு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்வதற்காக தனது கடைசி பெயரை “குசுருதி” (மலையாளத்தில் “குறும்பு” என்று பொருள்படும்) என எழுதினார். திருவனந்தபுரத்தில் நாடக பயிற்சியாளர்களுக்கான பொதுவான தளமான ‘அபிநயா நாடக ஆராய்ச்சி மையத்தில்’ பயிற்சி பெற்றார்.[5][6]
பின்னர் திருச்சூருக்கு குடிபெயர்ந்த கனி, அங்கு 2005 முதல் 2007 வரை ‘திருச்சூர் நாடகப் பள்ளி’யில் நாடகக் கலைத் திட்டத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டு ஆண்டுகள் பயிற்சியைப் பெற்றார்.[7]
அபிநயா நாடக ஆராய்சி மையத்தில் பௌதயனாவின் பாகவதாஜ்ஜுகம் எனும் உன்னதமான கேலிநாடகத்தில் குசுருதி தனது நாடகத் திரையுலகில் அறிமுகமானார். 2000 முதல் 2006 வரை வசந்ததேனா நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பாரத் ரங் மகோத்சவ் மற்றும் கேரளாவின் சர்வதேச நாடக விழா உள்ளிட்ட நாடக விழாக்களில் இந்த நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஹேர்மன் ஹெசேவின் சித்தார்த்தா எனும் புதினத்தை தழுவி எம். ஜி. ஜோதிஷின் இயக்கத்தில் மேடை ஏற்றப்பட்ட நாடகத்தில் கமலா எனும் பாத்திரத்தை இவர் ஏற்று நடித்தார்.
கனி குசுருதி தன்னை ஒரு நாத்திகர் என்றும் பகுத்தறிவுவாதி என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். [8][9] 19 பிப்ரவரி 2019 அன்று, திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாலியல் சீண்டல் காரணமாக நடிப்பை விட்டு விலகியதாக கூறினார். ஒரு நடிகையாக மலையாளத் திரைப்படத் துறைக்கு எதிராக கடுமையான கூற்றுக்களை முன்வைத்துள்ளார். கனி மீண்டும் நாடகத்திற்குச் செல்ல நினைத்தார் ஆனால் அத்துறையில் போதுமான வருமானம் இவரால் பெற முடியவில்லை.
இருப்பினும் மி டூ இயக்கம் மற்றும் பிற திரையுலகப் பெண்கள் போன்றவர்களின் முன்முயற்சிகளுக்குப் பிறகு மலையாளத் திரைப்படத் துறை குறித்து கனி நம்பிக்கை கொண்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில், குஸ்ருதியும் நாட்டின் 48 குறிப்பிடத்தக்க கலைஞர்களும் நாட்டில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர்.