கன்னி நாய்

கன்னி
பிற பெயர்கள் வேட்டை நாய்
தோன்றிய நாடு இந்தியா
தனிக்கூறுகள்
எடை 13.6 முதல் 32.5 கிலோகிராம்கள் (30 முதல் 72 lb) [1]
உயரம் ஆண் 60 முதல் 76 சென்டிமீட்டர்கள் (24 முதல் 30 அங்) [1]
பெண் 54 முதல் 70 சென்டிமீட்டர்கள் (21 முதல் 28 அங்) [1]
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

கன்னி தமிழ்நாட்டை சார்ந்த ஒரு நாயினமாகும். இது தமிழ்நாட்டின் தென் பகுதிகளான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக காணப்படுகிறது. இந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த நாய்களை காட்டு முயல் போன்ற அதி வேகமாக ஓடும் சிறு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்தனர்.[1]

தோற்றம்

[தொகு]

சுமார் 100 வருடங்கள் முன்பு ஊத்துமலை [2] (திருநெல்வேலி மாவட்டம்) ஜமீன்தார் அவர்கள் ராஜ்புத் ஜமீன்தார்கள் (ராஜஸ்தான் மாநிலம்) இடம் இருந்து கொடுக்கல், வாங்கல் முறையில் இவர்களிடம் இருந்த மண் சார்ந்த நாய்களை கொடுத்தும் அங்கு அவர்கள் முயல் மான் போன்ற விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி கொண்டிருந்த வேட்டை நாய்களை வாங்கி வந்து பெருமையாக வளர்த்து வந்தார்கள். அவற்றின் மாறுபட்ட தோற்றத்தை பார்த்து வியந்து போன சுற்று வட்டார வேட்டைக்காரர்கள் ஜமீனில் வேலை பார்த்தவர்கள் மூலம் மறைமுகமாக சில குட்டிகளை பெற்று அவற்றை இங்கு பூர்வீகமாக வேட்டைக்கும், காவலுக்கும் வைத்திருந்த நாய்களில் (பூர்வீக நாய்களாவன - நாம் இன்று இடத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டிருக்கும் பெருவெட்டு நாய், நாட்டு நாய், கொச்சி நாய், குப்பை நாய், கோம்பை நாய், ராமநாதபுரம் நாய், மண்டை நாய், கிடை நாய், பட்டி நாய், கீதாரி நாய், செங்கோட்டை நாய், பாளையம் கோட்டை நாய், அலங்கு நாய், கத்தாளம்பட்டி நாய், மலை நாய் போன்றன) கலந்து உருவான ஒரு இனமே இந்த கன்னி நாய்கள் (உதாரணமாக டாபர்மேன் நாய் இனம் ராட்வைலர் உட்பட பல நாய் இனங்களை பயன்படுத்தி உருவாக்க பட்ட நாய் இனமே) [2]

சான்று: இன்றளவும் இந்த நாய்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் அதிக எண்ணிக்கையில் காணப்பட இதுவே காரணம். மேலும் இவ்வகை நாய்கள் சென்று சேராத பிற மாவட்ட கிராமங்களில் இன்றளவும் பூர்வ குடி நாய்களே பயன்பாட்டில் உள்ளன.

பெயர் காரணம்

[தொகு]

கன்னி நாயை ஆரம்ப காலங்களில் வேட்டை நாய், சாதி நாய் என அழைத்து வந்தார்கள், இன்றளவும் அழைத்து வருகிறார்கள் அதே நேரத்தில் கன்னி எனும் நிறத்தை குறிக்கும் இந்த சொல், இந்த நாய் வளர்ப்பவர்கள் மத்தியில் சொல்லாடலாக பிரபலமடைந்து காலப்போக்கில் அதுவே இனப்பெயராக உருப்பெற்றது எனலாம். இந்த கன்னி நாய் இனத்தில் காணப்படும் நிறங்களே செவலை, மயிலை, கன்னி, பிள்ளை, சாம்பல், செம்மறை போன்றவையே தவிர கன்னி நிறத்தை தவிர்த்து பிற நிறங்களை சிப்பிப்பாறை என அழைப்பது முற்றிலும் தவறு (சிப்பிப்பாறை என்பது நமது பூர்வ குடி நாய் அதாவது அந்த ஊரில் சிப்பிப்பாறை எனவும் அதே நாய்கள் பிற ஊர்களில் பிற பெயரிலும் இன்றளவும் கிராமங்களில் நம் கண் முன்னே நம்மால் பிரித்தறியும் அறிவு கூட இல்லாமல் சுற்றி திரிகிற ஒரு வித நாட்டு நாய்கள் என்பதே உண்மை)

மேலும் திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு சீதனமாக கன்னி நிற நாய்கள் வழங்கும் வழக்கம் இருப்பதால் இப்பெயர் பெற்றது என கூறுபவர்களும் உண்டு.

குணம்

[தொகு]

நம்மிடம் காணப்படும் பூர்வகுடி நாய்களை ஒப்பிடும்போது கன்னி நாய்களிடம் காவல் திறனை விட மிக வேகமாக ஓடும் விலங்குகளை துரத்திப் பிடிக்கும் திறன் அதிகமாக இருக்கும். மேலும் பிற நாய்களுக்கு ஒப்பிடும்போது மோப்ப சக்தி குறைவாக இருக்கும். அதிகமாக குரைப்பது இல்லை. பொதுவாக மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகக்கூடிய நாய்கள். வெளிநபர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்களைப் பார்த்து குரைத்தாலும் நமது பூர்வகுடி நாய்களை போன்று தைரியமாக நின்று குரைப்பது இல்லை. கூச்ச சுபாவம் இருக்கும்.[3]

கன்னியில் கலப்பின நாய்கள்

[தொகு]

நமது பூர்வகுடி நாய்கள் பிற மாநிலத்தில் இருந்து சொற்ப எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்ட நாய்களுடன் கலந்து தனி இனமாக உருப்பெற்று பல தலைமுறைகள் ஆகிய நிலையில் சிலர் வியாபார நோக்கிலும், பெருமைக்காகவும், உயரத்தை கூட்டவும் சமீப காலமாக பிற மாநில அல்லது பிற நாட்டு நாய்களுடன்கலந்து பிறக்கும் குட்டிகளை தூய கன்னி நாய்கள் என வியாபாரம் செய்து வருகிறார்கள். இது கன்னி நாய் இனத்தை அழிக்க வழிவகை செய்யும். இதுவே கலப்பு நாய் தானே அப்படி இருக்கும் போது பிற நாய்களை கலந்தால் என்ன தவறு என வினா எழுப்புபவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்: டாபர்மேன் நாய்கள் ராட்வைலர் நாய்களில் இருந்து உருவாக்க பட்டிருந்தாலும் இன்று ஒரு டாபர்மேன் நாயும் ராட்வைலர் நாயும் இணை சேர்த்து பிறக்கும் குட்டிகளை எப்படி நாம் கலப்பு நாய் என்று கூறுகிறோமோ அதே போல் கன்னி நாய்களில் பிற இனங்களை கலந்து பெறப்படும் குட்டிகளும் கலப்பின குட்டிகளே.

கலப்பின நாய்களை கண்டறிவது எப்படி?

[தொகு]

பொதுவாக கன்னி நாய்கள் தோற்றத்தில் பிற சயிட் ஹவுண்ட் இனங்களில் இருந்து சற்று மாறுபட்டு காணப்படுகிறது. அவையாவன,

1. தலை அமைப்பு - முக்கியமாக தலை அமைப்பு நாட்டு நாய்களை ஒத்தும் சிறிது நீட்டமாகவும் காணப்படும் (சங்கு மண்டை வராது (தலை உச்சியில் காணப்படும் சங்கு போன்ற புடைப்பு)

2. மூஞ்சு சிறிது நீட்டமாகவும் அதே நேரம் தலை கொஞ்சம் பெரிதாகவும் காணப்படும்) தலையும் மூஞ்சும் ஒன்று போல் சிறிதாகவோ, தலைக்கும் முஞ்சிக்கும் இடையில் பள்ளம் இல்லாமல் தட்டையாகவோ, பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது மூஞ்சில் மேடுடன் கூடிய ஒரு சிறிய வளைவுடனோ, மூஞ்சு முழுவது கிரேட் டேன் நாயில் காணப்படுவது போன்ற கருப்பு நிறத்துடனோ தோற்றமளிப்பதில்லை)

3. கேரவன் ஹவுண்ட் நாய்களில் காணப்படுவது போன்ற பெரிய வெற்றிலை போன்று நன்கு மடிந்து பக்கவாட்டில் தொங்குவது போல் இல்லாமல் இவற்றின் காதுகள் சற்று சிறியதாகவும், தூக்கியும் (குத்து காது), இரண்டு பக்கம் மடிந்தும் (நெறி காது) மடிந்தும் (மடி காது) போன்ற அமைப்புகளில் காணப்படும்

4. மிக மெல்லிய வால் (வாலில் உள்ள கணுக்கள் அதாவது எலும்பு முடிச்சி தெரியும் அளவு மெல்லிய வால்), வால் மேலே தூக்கியும், சில நாய்களில் நுனி வாழ் சுருண்டும் காணப்படும் (நாட்டு நாய்களில் காணப்படுவது போன்ற வால் முழுவது இரட்டை சுருட்டு வருவதில்லை), வாலில் ரோமத்தின் அளவு சிறிதாக காணப்படும்)


5. சுத்த கருப்பு, கருப்பும் வெள்ளையும் கலந்த வருவது (எச் எப் மாட்டின் நிறம்), பேய் கருப்பு (டாபர்மேன் நாய் போன்ற கருப்பு), நெஞ்சில் அதிகமான மச்சம், பால் வெள்ளை (ராஜபாளையம் போன்ற அல்பினோ வெள்ளை) வருவதில்லை.


6. மிகுந்த அச்சம், மிகுந்த கூச்ச சுபாவம், வாலை இரண்டு கால்களுக்கு அடியில் சுருட்டி வைத்து கொண்டு நடுங்கி கொண்டு இருப்பது செயல்பாடுகள் பிற ஹவுண்ட் இனங்களின் கலப்பு இதன் இரத்தத்தில் அதிக அளவு இருப்பதை உறுதி செய்கிறது

தற்கால இலக்கியத்தில்

[தொகு]

கி. ராஜநாராயணன் எழுதிய நூலான கரிசல்காட்டுக் கடுதாசி என்ற நூலில் வரும் ஒரு பாத்திரம் கன்னி நாய்களை இனக்கலப்பு ஏற்படாமல் காத்து வளர்த்து போல வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "National Bureau of Animal Genetic Resources". National Bureau of Animal Genetic Resources.
  2. 2.0 2.1 "முதல் நண்பன் 03: தென் தமிழகத்தின் அடையாளம் - hindutamil.in".
  3. "Rajapalayam, Kanni, Combai — all about Indian dog breeds PM Modi talked about in Mann ki Baat".