கம்சி குணரத்தினம் Kamzy Gunaratnam | |
---|---|
2019 இல் கம்சி | |
ஒசுலோ தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 ஆக்டோபர் 2021 | |
தொகுதி | ஒசுலோ |
ஒசுலோ நகர துணை முதல்வர் | |
பதவியில் 21 அக்டோபர் 2015 – 1 அக்டோபர் 2021 | |
முன்னையவர் | லிபே ரைபர்-மோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கம்சாயினி குணரத்தினம் 27 மார்ச்சு 1988 கந்தர்மடம், யாழ்ப்பாணம், இலங்கை |
குடியுரிமை | நோர்வே |
அரசியல் கட்சி | தொழிற் கட்சி |
இணையத்தளம் | [1] |
கம்சி குணரத்தினம் (Kamzy Gunaratnam) என அழைக்கப்படும் கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam, பிறப்பு: 27 மார்ச் 1988) இலங்கைத் தமிழ் பின்புலம் கொண்ட நோர்வே தொழிற் கட்சி அரசியல்வாதி ஆவார். 2021 நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் இவர் ஒசுலோ தொகுதியின் தொழிற் கட்சியின் இரண்டாவது வேட்பாளராக நியமிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[1] இவர் ஒசுலோ மாநகரத்தின் துணை முதல்வராக 2015 முதல் 2021 வரை பதவியில் இருந்தார்.[2]
கம்சியின் இயற்பெயர் கம்சாயினி. இவர் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் என்ற ஊரில் பிறந்தவர். தனது மூன்றாவது வயதில் 1991 இல் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார்.[3]. இவர் ஒசுலோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியலில் பட்டம் பெற்றவர்.[4] 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நோர்வே தீவிரவாதத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர். இவர் தாக்குதல் நடைபெற்ற தீவில் இருந்து கடலில் நீந்தி வந்து உயிர் தப்பினார்.[5]
கம்சாயினி தொழிற்கட்சியின் ஒசுலோ மாநகரக் கிளை துணைத் தலைவராகவும், இளைஞர் பிரிவுத் தலைவராகவும் உள்ளார். ஒசுலோ மாநகர சபையின் உறுப்பினராக 2007 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக மாநகரசபை உறுப்பினரானார். 2015 அக்டோபர் 21 இல் ஒசுலோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.[3][6][7] 2021 நோர்வே நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி, தலைநகர் ஒசுலோவில் நிறுத்திய வேட்பாளர்களில், பிரதமர் பதவிக்கான வேட்பாளருக்கு அடுத்த இடத்தில் கம்சியை நிறுத்தியதன் மூலம் அவரது நாடாளுமன்றப் பதவியை உறுதி செய்தது.[8] 2021 செப்டம்பர் 13 இல் நடைபெற்ற தேர்தலில் கம்சி வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[9] இவர் தனது பதவியை 2021 அக்டோபர் 1 இல் ஏற்றுக் கொண்டார்.