கம்போடியர் அல்லது கெமர் (Cambodian or Khmer literature) இனமக்களின் இலக்கியம் மிகப் பழமையான காலத்திலேயே தோற்றம் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. பெரும்பாலான தென்கிழக்காசியாவின் இலக்கியங்கள் போலவே கம்போடியர் இலக்கியத்தின் சொற் தொகுதியும் இரண்டு வேறுபட்ட அம்சங்களை அல்லது நிலைகளைக் கொண்டுள்ளது.
கல்வெட்டுகளின் மீது காணப்படும் கல்வெட்டெழுத்துகள் கெமர் மொழியின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. கெமர் பேரரசின் வரலாற்றை மீட்புருவாக்கம் செய்வதற்குக் கிடைத்த எழுதப்பட்ட ஆதாரங்களாகவும் இவை விளங்குகின்றன.
பத்திகள், தூண்கள் மற்றும் சுவர்களின் மீது எழுதப்பட்டிருந்த இக்கல்வெட்டெழுத்துகள், அரச மரபின் மதப்பிரகடனங்கள், பிராந்திய வெற்றிகள் மற்றும் பேரரசின் உள்ளமைப்பு முதலியனவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.
கெமர் மொழியின் பழைமையான சில ஆவணங்கள், பாலி மொழியில் எழுதப்பட்ட கௌதம புத்தரின் போதனைகளான திரிபிடகத்தின் மொழிபெயர்ப்புகள் மற்றும் கருத்துரைகள் என்பதை இக்கல்வெட்டுச் செய்திகள் உணர்த்துகின்றன.
பெரும்பாலும் இந்நூல்கள் பௌத்தத் துறவிகளால் பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தன. நாடு முழுவதுமுள்ள பல்வேறு மடங்களில் வைக்கப்பட்டிருந்த இத்தகைய நூல்களில் பல கம்போடியாவை ஆண்ட அரசியற்கட்சியான கெமர் ரூச் படையினரால் அழிக்கப்பட்டன.
பிரபல இந்தியக் காவியமான இராமாயணத்தின் கம்போடியப் பதிப்பு இரீம்கர் (இராமர் மரபு) எனப்படுகிறது. கம்போடிய இராமாயணம், நடன அசைவுகளைத் தழுவி இசையொலியுடன் கூடிய வசனங்களால் பல பத்திகளாக ஆக்கப்பட்டிருந்தது. உள்ளூர் நடனக் கலைஞர்கள் அவற்றை நடனமாகவும் ஆடிக் காட்சிப்படுத்தினர்.
கம்போடிய நாட்டின் மிகப் பழைமையான நாடகக் கலை வடிவமாக இரீம்கர் உள்ளது. அனுமன் மற்றும் சோவன்மச்சா என்றழைக்கப்பட்ட தங்கக் கடற்கன்னி குறித்த இராமாயணக் காட்சியை அடிப்படையாகக் கொண்டது ரோபம் சோவன் மச்சா என்ற நடனவடிவமாகும். இது மிகவும் புகழ்பெற்ற பாரம்பரியக் கம்போடிய நடனவடிவங்களில் ஒன்றாகும்.
1629 முதல் 1634 வரையிலான காலத்தைச் சார்ந்த இரண்டாம் தோமாரச்சா என்ற அரசர் கெமர் இளம் தலைமுறையினருக்கான கவிதை ஒன்றை எழுதினார். இன்றளவுக்கும் நேசிக்கப்படும் ஒரு பாரம்பரியக் கவிதையாக அக்கவிதை மதிக்கப்படுகிறது.
1841 முதல் 1860 வரையிலான காலத்தைச் சார்ந்த அரசர் அங் துவாங் அரசராக மட்டுமின்றிப் பழம்பெரும் கெமர் இலக்கிய உரைநடை ஆசிரியராகவும் அறியப்படுகிறார்.
இவருடைய காக்கெ (சமசுகிருதத்தின் பெண் காக்கை என்ற சொல்லில் இருந்து தோன்றியது) சாதகக் கதைகளால் அகத்தூண்டல் பெற்று எழுதப்பட்ட நாவலாகும். இந்நாவலில் பிராந்திய நாட்டுப்புறக் கதையின் கூறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. துரோகம் செய்யும் ஒரு பெண் அவளுடைய நம்பிக்கைத் துரோகச் செயலுக்காக முடிவில் கணவனால் எவ்வாறு தண்டிக்கப்படுகிறாள் என்பதை விவரிப்பதாக அந்நாவலை அவர் படைத்துள்ளார். இந்நாவல் குறிப்பிட்ட சில முக்கியமான தார்மீகப் படிப்பினைகளைக் கொண்டிருப்பதால் கம்போடியப் பள்ளிகளில் நீதி போதனைத் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. காக்கெ நாவலின் சமூக நெறிகள் பாரம்பரியமாகக் கெமர் இனப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்நாவலின் கதை மதிப்புகள் தற்காலத்திற்கும் ஏற்புடைய கலாச்சாரப் பொருத்தத்தைக் கொண்டுள்ளன.[1]
அரசர் அங் துவாங், சாதகக் கதைகளால் அகத்தூண்டல் பெற்று எழுதிய மற்றொரு நாவல் புத்திசென் நியாங் கோங் ரெயி என்ற நாவலாகும். பன்னிரண்டு சகோதரிகளில், ஒருத்தியின் மகனான புத்திசென்னுக்காகத் தன் இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் கோங் ரெயி என்ற பெண்ணைப் பற்றி இந்நாவல் பேசுகிறது.கெமர் இனக் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் தங்கள் பாடல்களில் நடத்தை கெட்ட பெண்களைக் காக்கெ என்றும் உண்மைக்குப் புறம்பில்லாத பெண்களை நியாங் கோங் ரெயி என்றும் இந்த சொற்களைப் பயன்படுத்துகின்றனர்[2].
கம்போடிய அரசர்களின் தொடர் வரலாறு அல்லது கம்போடியத் தொடர் வரலாறு என்பது சுமார் 1430 ஆம் ஆண்டு தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு[3] வரையிலான காலத்தை மையப்படுத்துகின்ற 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பாகும். பிரெஞ்சு தேசிய நூலகத்தில் இக்கையெழுத்துப் பிரதிகளின் 34 பிரதிகளும் இலத்தின் மொழியில் பார்த்துப் படியெழுதிய மூன்று பிரதிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. 1796 ஆம் ஆண்டு வரையிலான மிகப்பழம் தொடர்வரலாறான ஆங் எங்கின் துண்டுகள் என்ற நூலும் தாய்லாந்தின் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1346 முதல் 1351 வரையிலான காலத்தைச் சார்ந்த பரம் நிப்பானாபாத் ஆட்சிக்காலம் மற்றும் முதலாம் பரமராசாவின் ஆட்சிக்காலமான 1434 முதல் 1438 வரையிலான ஆட்சியையும் மட்டுமே இந்நூல் விவரிக்கிறது.
இவை தவிர உகானா வன்சா சரப்யன் நான், சாம்டெக் காவா வாமின் யூவான், வாட் கொக் காக் மற்றும் அம்பால் கிசாட்டர் போன்ற தொடர் வரலாறுகள் அறியப்படுகின்றன[4].
கெமர் மொழியானது பெருமளவில் வேறுபட்ட வாய்மொழிக்கதை அல்லது நாட்டுப்புறக் கதைகளின் பாரம்பரியம் கொண்டதாகும். இம்மொழியில் புராணகாலத்து நாயகர்கள் மற்றும் ஆவிகள் தொடர்பான பல பிரபலமான செவிவழிக் கதைகள், கற்பனைக் கதைகள் மற்றும் பாடல்கள் காணப்படுகின்றன. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுவரை அவை எழுதப்படாமல் இருந்தன. அதற்கு முன்னர் அவை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டும் மனனம் செய்யப்பட்டும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டன[5].
இவற்றில் பெரும்பாலானவை இந்திய இதிகாசக் கதைகளான இராமாயண மற்றும் மகாபாரதக் கதைகள் மற்றும் பௌத்த சாதகக் கதைகளில் இருந்து கடனாகப் பெறப்பட்டவைகளாகும். மேலும் அவற்றில் தாய்லாந்து நாட்டு கலாச்சாரத் தாக்கமும் இருந்தது.
வாய்வழி-பாரம்பரியப் புனைவுகள் பெரும்பாலும் இசை இயைபுடைய வசனங்கள் கொண்ட மிக நீண்ட கதைகளாக இருந்தன. கதாநாயகர்கள் பெரும்பாலும் இளவரசர்கள் மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுட சக்திகளாக இருந்தனர். தொடர்புடைய காட்சிகளும் அரண்மனைகள் மற்றும் மடங்களோடு இணைக்கப்பட்டிருந்தன. கட்டுப்பாடுகள் மற்றும் மதிப்புகளை சந்ததியருக்கு மாற்றித் தருவது ஒன்றே செவிவழிக் கதைகள் மற்றும் இலக்கியங்களின் மிகமுக்கியமான நோக்கமாக இருந்தது. பெரும்பாலான கதைகள் மோதல்களுக்கான தீர்வாக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தின. நாட்டின் புவியியல் சிறப்புகள் மற்றும் கம்போடிய நாட்டின் முக்கிய இடங்களின் பெயர்கள் சொல்லும் உண்மைகள், அர்த்தங்கள் முதலியவற்றை கதைகள் வழியாக அடுத்த தலைமுறைக்கு அவை கடத்தின[6].
இவ்வகையான செவிவழிக் கதைகளின் பிரதிநிதியாக வார்வோங் மற்றும் சார்வோங்கின் கதையைக் கூறலாம். இக்கதை கெமர் வாய்மொழி இலக்கியத்தின் பாரம்பரியச் சிறப்புமிக்க ஒரு கதையாகும். இக்கதையில் இரண்டு இளவரசர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி அவமானப்பட்டு மீண்டும் தங்களின் பழைய இளவரசநிலைக்கு திரும்புவதாக அமைந்திருக்கும் ஒரு கதையாகும். வார்வோங் மற்றும் சார்வோங் கதை முதன்முதலில் அகசுதே பாவி என்ற பிரெஞ்சு அரசு ஊழியரால் எழுதப்பட்டது. இக்கதையை, சமராவாங்டாங் மாவட்டத்தில் சொல்லப்பட்ட ஓல்டு அங்கிள் நிப் என்றவொரு கதையில் இருந்து பெற்றதாக அவர் தெரிவித்தார். பட்டாம்பாங் நகரத்திலும் எழுதப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் வார்வோங் மற்றும் சார்வோங் கதை கம்போடியாவின் அரசவை நடனம் என்ற மதிப்புமிக்க நடனவடிவாக மாற்றப்பட்டு சிறப்பு பெற்றது[7]
செவிவழிக் கதையின் கதாநாயக இளவரசர்களின் வார்வோங் மற்றும் சார்வோங் பெயர்கள் கிர்ரோம் தேசியப் பூங்காவில் காணப்படும் இரண்டு மலைக்குன்றுகளின் பெயர்களாகச் சூட்டப்பட்டுள்ளன. இவை பனோம் சுரோச்சு மாவட்டம் மற்றும் காம்போங் சிபெயு மாகாணம் முதலிய இடங்களில் உள்ளன. பனோம் கோங் ரெய் என்ற உள்ளூர் மலையொன்றும் கெமர் நாட்டுப்புறக் கதைகளின் சார்பாக இருக்கிறது[8]
தும் தீவ் என்ற உன்னதமான சோகமய காதல் கதையின் தொகுப்பு, துபாங் குமும் மாகாணத்தில் உருவாகி 19 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்து நாடு முழுவதும் சொல்லப்பட்டு வந்துள்ளது. இக்கதை 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில் மேலும் பழைமையான கம்போடிய நாட்டுப்புறப் பாடலாகத் தோன்றிய கவிதையில் இருந்து தோன்றியிருக்கலாம். தற்பொழுது கெமர் மொழியில் இக்கதை வாய்மொழி இலக்கியம், எழுத்திலக்கியம், நாடகம், திரைப்படம் என அனைத்து கலைவவிவங்களிலும் காணப்படுகிறது. 1880 ஆம் ஆண்டில் இக்கதையின் முதல் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியில் எட்டினெ அய்மோனியரால் செய்யப்பட்டது. 1915 ஆம் ஆண்டில் பாதுமெத்தேரா சாம் என்ற பௌத்த துறவி எழுதிய இலக்கிய வடிவ தும் தீவ் கதையை கியார்சு சிகாசு மொழிபெயர்த்த பிறகு இக்கதை மிகவும் பிரபலமானது.[9]
பிரெஞ்சு ஆதிக்கத்தின் சகாப்தம் கம்போடிய நாட்டு இலக்கியத்தில் முக்கியப்பங்கு வகித்தது. கெமர் எழுத்துருவில் முதலாவது நூல் புனோம் பென் நவீன அச்சகத்தில் 1908 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. அதுவொரு பாரம்பரிய ஞானம் சார்ந்த நூலாகும்.
பிரெஞ்சின் ஆதிக்கம் கம்போடிய நாட்டின் கல்வியிலும் ஆதிக்கம் செலுத்தி நவீனப்படுத்தியது. இதனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெமர் மொழியில் நாவல் ஆசிரியர்கள் பலர் புதியதாகத் தோன்றினர். இவர்கள் எழுதிய உரைநடை இலக்கியத்தில் சராசரி கம்போடிய மக்களின் நடவடிக்கைகளும் சாதாரண கம்போடிய மக்களின் வாழ்வும் இடம்பெற்றன.
பண்டைய இந்திய மற்றும் தாய்லாந்து நாட்டு இலக்கியங்களின் தாக்கம் முற்றிலுமாக விடுபடவிலை. முதலாவது இலக்கியப் படைப்புகளான சிலநவீன, டியூக் ரோம் பிக்கா ரோம் (நடனமிடும் தண்ணீர் மற்றும் நடனமிடும் மலர்) போன்ற நாவலில் அவற்றின் ஆதிக்கம் இருக்கவே செய்தது. பின்னர் 1915 இல் வெளிவந்த தும் தீவ், சௌ சேத்தின் எழுதிய பிம்பாபைலேப், 1942 ஆம் ஆண்டில் நௌ கான் படைத்த டாவ் ஏக் போன்ற படைப்புகளிலும் இவ்வாதிக்கம் தொடர்ந்தது[10]
1975 மற்றும் 1977 இறகு இடைப்பட்ட ஆண்டுகளில், சனநாயக கம்பூச்சிய ஆட்சியில் புத்திசாலிகள் துன்புறுத்தப்பட்டனர். கம்போடிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் நகர்ப்புற பின்னணியில் இருந்ததால் 1975 இல் கெமர் ரூச் வெற்றிக்குப் பின்னர் நகரங்களில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாண்டுகளில் கெமர் எழுத்தாளர்களால், அவர்களின் திறமைகளை பயிற்சிக்குட்படுத்த இயலவில்லை. மற்ற அறிவாளிகள் போல இவர்களும் கால்நடைகள் போல வாழ்க்கையை நகர்த்த கட்டாயப்படுத்தப்பட்டனர். கிராமம் சார்ந்த அடிப்படையிலான சிறுசிறு வேலைகளில் இடுபட்டு பொழுதைக் கழித்தனர். படித்தவர்கலும் கூட தங்கள் கல்வித் தகுதியை மறைக்க வேண்டியிருந்தது. இவர்களின் கல்வி நிலையை அறிய நேரிட்டால் கெமர் ரூச் படையினர் அவர்களைக் கொன்று குவித்தனர்.[11] கம்போடிய இலக்கியம் முழுவதும் விரவிக்கிடந்த அமானுசிய நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பௌத்த மதத்தின் போல் போட்டின் இயக்கத்தில், கெமர் ரூச் படையினரின் பெருமுயற்சியால் கெமர் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் ஒரு முடிவுக்கு வந்தது.[12]
பொல் போட்டின் ஆட்சியின் தோல்விக்குப் பின்னர் கம்பூச்சிய மக்கள் குடியரசு நிறுவப்பட்டதும், பெருமைக்குரிய கம்போடிய எழுத்தாளர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டனர். அதே போல் பௌத்தம் நாட்டுக்கான ஒரு பகுதி மதமாகவும், உள்ளூர் நாட்டுப்புறவியல் மற்றும் மரபுகள் ஒரு புதிய உத்வேகத்துடன் மறுமலர்ச்சி கண்டன.
தங்களின் முந்தைய நிலையை பல அறிஞர்கள் மீண்டும் பெற்றனர். அவர்களுடைய சாதனைகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டன. பொதுவுடைமை தத்துவம், முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் முன்னாள் வியட்நாம் கட்டுப்பாடுகளால் கம்பூச்சிய மக்கள் குடியரசின் கலாச்சார மறுமலர்ச்சி நடவடிக்கைகளின் வேகம் குறைந்தது.[13] இருப்பினும் வேட்டெய் செங் (நாம் கொடுத்த விலை) அல்லது நேவி பிம் (கெமர் ஆட்சியின் பிம்பங்கள்) போன்ற எழுத்தாளர்கள் கெமர் ரூச்சின் ஆட்சிக்காலம் தொடர்பாகவும் போல் பொட்டின் சர்வாதிகாரம் குறித்தும் வெளிப்படையாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.[14]
சோமலி மம் என்ற பெண் எழுத்தாளர் தனது அனுபவங்களை முன்வைத்து மனித கடத்தல் தொடர்பான கண்டனத்தை தைரியமாக தெரிவித்து படைப்பாக்குகிறார்.[15] சோமலி மம் மற்றும் வேறு சில கம்போடிய எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளை அந்நிய மொழியில் மொழிபெயர்த்து பொருளீட்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கெமர் மொழியில் எழுதும் கம்போடிய எழுத்தாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கெமெர் எழுத்தாளர் சங்கம் 1993 ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.[16]