கம்வீர தேவன் | |
---|---|
பத்ருது[1] | |
கஜபதி இளவரசன் | |
ஆட்சிக்காலம் | அக்டோபர் 1472 - 1476 |
முன்னையவர் | புருசோத்தம தேவன் |
பின்னையவர் | புருசோத்தம தேவன் |
குழந்தைகளின் பெயர்கள் | குமார கபிலேசுவர மகாபத்ரன்[2][3][4][5] நரகரி பத்ரன்[6] |
மரபு | சூரிய குலம் |
தந்தை | கபிலேந்திர தேவன் |
மதம் | இந்து சமயம் |
கம்வீர தேவன் (Hamvira Deva) இந்தியாவில் கஜபதி பேரரசின் ஒடியா இளவரசராகவும், குறுகிய காலத்திற்கு கஜபதி ஆட்சியாளராகவும் இருந்தார். இவர் கஜபதி பேரரசின் நிறுவனர் கபிலேந்திர தேவனின் மூத்த மகன் ஆவார். கஜபதி பேரரசின் இராணுவ விரிவாக்கத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் இவரது இளைய சகோதரர் புருசோத்தம தேவனுக்கே அரியணை வழங்கப்பட்டது.
கம்வீர தேவன், கஜபதி பேரரசின் நிறுவனர் கபிலேந்திர தேவனின் மூத்த மகனும் மற்றும் வாரிசாகக் கருதப்படுபவருமாவார்.[4][7] இவர் அடிக்கடி எதிரி நாடுகளுக்கு எதிராக இராணுவப் போர்களை மேற்கொண்டு, பேரரசை பெரிதும் விரிவுபடுத்தினார். இவர் கி.பி.1464 க்கு முன் கஜபதி பேரரசின் தெற்குப் பிரதேசங்களின் ஆளுநராக இருந்தார்.[2] இவருக்கு குமார கபிலேசுவரன் என்ற மகன் இருந்தார். அவர் இராணுவப் போர்களில் இவருக்கு உதவினார். பின்னர் பேரரசின் தெற்குப் பிரதேசங்களின் ஆளுநரானார்.[2][3][5][4] மேலும் இவருக்கு நரஹரி பத்ரன் என்ற மகனும் இருந்தார். அவர் கிருஷ்ணதேவராயனின் விஜயநகர இராணுவத்தால் 1516 இல் கஜபதி பேரரசர் பிரதாப்ருத்ர தேவனிடமிருந்து கொண்டவீடு கோட்டை கைப்பற்றியபோது கைது செய்யப்பட்டார்.[6]
கி.பி.1449 இல், மால்வா சுல்தான் மக்மூத் கல்ஜியின் கீழ் பாமினி சுல்தானகத்தின் மீது படையெடுத்தது. அந்த நேரத்தில் கம்வீர தேவன், பாமினியின் தலைநகரான பீதர் மீது படையெடுத்து, அதை எளிதாகக் கைப்பற்றினார். பின்னர், இவர் மால்வா சுல்தானகத்தின் தலைநகரான தார் மீது படையெடுத்து கொள்ளையடித்தார். [1][8] பின்னர் இவர் 1460 களில் தெலங்காணாவின் இரேச்சர்லா நாயக்கர்களின் உதவியுடன் இரண்டு முறை பீதர் மீது தாக்குதல் நடத்தினார்.
1481 இல், பாமினி சுல்தான் மூன்றாம் முகமது கொண்டவீடு கோட்டை மீது படையெடுத்து கம்வீர தேவனின் இராணுவத்தைத் தோற்கடித்தனர். இவர் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது கம்வீர தேவனின் கடைசிப் போராக இது இருந்திருக்கக் கூடும். [9]
தென்னிந்தியாவின் வலிமையான கோட்டைகளில் ஒன்றான கொண்டவீடு கோட்டை, விஜயநகரத்தின் இரண்டாம் தேவ ராயனின் ஆட்சியின் கீழ் இருந்த ரெட்டிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இரண்டாம் தேவ ராயன் முதல் கஜபதி படையெடுப்பை தோற்கடித்த ஒரு திறமையான ஆட்சியாளர். கபிலேந்திர தேவன் தென் மாநிலங்களை தனது பேரரசுடன் இணைக்க இளவரசர் கம்வீர தேவனை அனுப்பினார். இரண்டாம் தேவராயனின் வாரிசான மல்லிகார்ஜுன ராயன் ஒரு பலவீனமான மன்னராக இருந்தார். கம்வீர தேவன் இதைப் பயன்படுத்திக் கொண்டு வீரபத்ர ரெட்டியின் கீழ் ராஜமன்றியைத் தாக்கி 1448 இல் அதை கைப்பற்றினார். பின்னர், தனது உறவினர் ரகுதேவ நரேந்திர மகாபத்ரனை அதன் ஆளுநராக நியமித்தார்.[10][4]
விஜயநகரத்துடனானப் போரில் ரெட்டிகள் உதவிய போதிலும் கம்வீர தேவன் கி.பி.1454 இல் கொண்டவீடு கோட்டையைத் தாக்கி வெற்றி பெற்றார். பின்னர் இவர் கணதேவ ரௌத்ரே என்பவரை கோட்டையின் ஆளுநராக நியமித்தார்.[8][11]
அனந்தவரம் மானியத்தின்படி, சந்திரகிரி, படவீடு, வழுதுலாரன்பட்டி, உசாவடி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய கோட்டைகளும் காஞ்சிபுரம் நகரமும் கம்வீரனிடம் வீழ்ந்தன. கைப்பற்றப்பட்ட பகுதி இவரது மகன் குமார கபிலேசுவர மகாபத்ரனின் பொறுப்பில் விடப்பட்டது.[5]
மல்லிகார்ஜுன ராயன் விஜயநகர சிம்மாசனத்திற்கு வந்த போது பவவீனமாக இருந்தர். இதை கபிலேந்திர தேவன் பயன்படுத்திக் கொள்ள முயன்றார். மேலும், பாமினி சுல்தானகத்தின் ஆதரவுடன் கம்வீர தேவனை விஜயநகரத்தின் தலைநகரான அம்பிக்கு அனுப்பினார். அம்பியை வென்று மல்லிகார்ஜுன ராயனை கப்பம் கட்டும்படி கட்டாயப்படுத்தியதாக கஜபதிகளின் அனந்தவரம் செப்புத் தகடுகளில் ஆதாரங்கள் கூருகின்றன. இருப்பினும், விஜயநகரக் கவிஞர் கங்காதரன் என்பவரால் எழுதப்பட்ட கங்காதாச-விலாச சரிதம், முற்றுகையின் போது தலைநகரில் இருந்த அவரது புரவலர் மல்லிகார்ஜுன ராயன், கஜபதிகள் மற்றும் பாமினிகளின் கூட்டுப் படைகளை முறியடித்ததாகக் கூறுகிறது.[6] வரலாற்றாசிரியர் ஆர். சுப்ரமணியம், கம்வீர்ன் விஜயநகரப் படைகளை ஒரு போரில் தோற்கடித்தார். ஆனால் அம்பியின் உறுதியான பாதுகாப்புகளை உடைக்கத் தவறி பின்வாங்கினார் என எழுதுகிறார்.[12]
கி.பி.1460 இல், கபிலேந்திர தேவனின் படைத் தளபதி தும்ம பூபாலன் உதயகிரி கோட்டையை விஜயநகரத்திடமிருந்துக் கைப்பற்றினார். உதயகிரியைத் தளமாகக் கொண்டு, விஜயநகரப் பேரரசின் கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் தென் ஆற்காடு வரையிலான பகுதிகளைக் கைப்பற்ற கம்வீரன் தனது தந்தைக்கு உதவினார்.[6]
பாமினிகள் வெலமா நாயக்கர்களின் பகுதிகளை அடிக்கடித் தாக்கிவந்தனர். இதனால் தேவரகொண்டாவின் வெலமா தலைவர் (இன்றைய தெலங்காணா பகுதி), கஜராவோ திப்பா, பாமினி சுல்தானகத்திற்கு எதிராக கபிலேந்திர தேவனிடம் உதவி கேட்டார்.[1][8][5]
கி.பி.1458 இல், தேவரகொண்டாவில் நடந்த ஒரு போரில் கம்வீர தேவன், சுல்தான் உமாயூன் ஷாவின் தளபதியான சஞ்சார் கானின் கீழ் பாமினி படைகளை தோற்கடித்தார். பின்னர், இவர் கம்மம் கோட்டையைக் கைப்பற்றி, ராஜமன்றியின் ஆளுநரும் தனது உறவினருமான ரகுதேவ நரேந்திர மகாபத்ரனின் பொறுப்பில் ஒப்படைத்தார்
கி.பி. 1469 இல் பாமினி பிரதம மந்திரி மக்மூத் கவான் பாதுகாப்பிலிருந்த வாரங்கல் கோட்டையைத் தாக்கி அதைக் கைப்பற்றினார்.[6][12][10]
கபிலேந்திர தேவனின் எண்ணற்ற குழந்தைகளில் மிகவும் திறமையானவராக [2] இருந்ததால், அமைச்சர்கள், அரசவையினர் மற்றும் சில கஜபதி ஆட்சியாளர்களால் இவருக்கு ஆதரவளிக்கப்பட்டது என "அபிநவ-கீத-கோவிந்தம்" மூலம் அறியப்படுகிறது.[13] இருப்பினும், இவர் தனது இளைய சகோதரர் புருசோத்தம தேவனுக்கே அரியணை அளிக்கப்பட்டது.[3][7] கம்வீர தேவன் தனது தந்தைக்கு எதிராக கலகம் செய்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே புருசோதம தேவன் அவரது விருப்பமான மகனானார். மேலும், கிருஷ்ணா ஆற்றங்கரையில் அவரது தந்தை கபிலேந்திர தேவனால் வாரிசாக நியமிக்கப்பட்டார். கபிலேந்திரனின் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் அவரது மகன் கம்வீர தேவன் தலைமையில் கிருஷ்ணா ஆற்றுப்பகுதியில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது என்று வரலாற்றாசிரியர் ஆர்.சுப்ரமணியம் கருதுகிறார்.[3][10][8] கபிலேந்திர தேவன் கிளர்ச்சியை அடக்க கிருஷ்ணா பகுதிக்கு வந்தார். ஆனால் அவரது உடல்நலக்குறைவு அவரை அவ்வாறு செய்வதைத் தடுத்தது. இறப்பதற்கு முன், புருசோத்தமனை வாரிசாக நியமித்தார். [2][3][14]
தெய்வீக வழிகாட்டுதலின் கீழ், கபிலேந்திர தேவன் புருசோத்தமனை வாரிசாகப் பெயரிடுவதாக அறிவித்தபோது, கம்வீர தேவன் உட்பட பதினெட்டு மூத்த மகன்கள் தங்கள் கோபத்தில் புருசோத்தமன் மீது ஈட்டிகளை வீசினர். அவை அனைத்தும் தவறவிட்டன என்று ஒரு புராணக்கதை உள்ளது.[15]
புருஷோத்தமன் சக்கரவர்த்தி ஆனதில் அதிருப்தி அடைந்த கம்வீரன், உதயகிரி கோட்டையில் இருந்து ஆட்சி செய்து தன்னை அரசனாக அறிவித்தார். விஜயநகரப் பேரரசின் பேரரசர் சாளுவ நரசிம்ம தேவ ராயன், கஜபதி உள்நாட்டுப் போரைப் பயன்படுத்தி 1469 இல் உதயகிரி மீது படையெடுத்து கம்வீரனை கைது செய்தார். கம்வீரன் சமாதானமாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சாளுவ நரசிம்ம தேவ ராயனிடம் தோல்வியுற்ற பிறகு இவரது பலவீனமான நிலை காரணமாக, கி.பி.1470 இல் பாமினி சுல்தானகத்தின் ஆதரவை நாடினார்.[16] மூன்றாம் முகம்மது ஷாவின் தளபதி மாலிக் உசைன் பெய்ரி (நிஜாம்-உல்-முல்க் என்றும் அழைக்கப்படுகிறார்) கொண்டபள்ளி மற்றும் ராஜமன்றியைக் கைப்பற்ற கம்வீரனுக்கு உதவினார். பின்னர் இவர்களது கூட்டுப் படைகள் கஜபதியின் தலைநகரான கட்டக்கிற்கு அணிவகுத்துச் சென்று, 1472 இல் புருசோத்தமனை தோற்கடித்து, கம்வீரன் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார்.[7][17] அவரது உதவிக்கு ஈடாக, கம்வீரன் ராஜமன்றி மற்றும் கொண்டவீடு கோட்டையை முகம்மது சாவிற்கு விட்டுக்கொடுத்தார். [7] புருசோத்தம தேவன் 1476 இல் கம்வீரனிடமிருந்து சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றினார்.
இவரது பிற்கால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. தனது சகோதரர் புருசோத்தம தேவனுடான இரகசிய கடிதப் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டபோது, பாமினி சுல்தானால் இவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்று கே. சி. பானிகிரகி குறிப்பிடுகிறார். கம்வீரனின் திறமையான மகன் குமார கபிலேசுவர மகாபத்ரன் ஒரு போரின் போது இறந்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
புருசோத்தம தேவனும் கம்வீர தேவனும் சமரசம் செய்துகொண்டதாக ஆர்.சுப்ரமணியம் கருதுகிறார். 1476 இல் கம் வீரன் தோற்கடிக்கப்பட்டபோது. புருசோத்தமன் இவரை பரலகேமுண்டி செல்ல அனுமதித்தார். அங்கு இவர் புருசோத்தம தேவனின் அடிமையாக ஆட்சி செய்தார். எனவும் கூறுகிறார்.[6][5][12]