கறுப்புப் பணம் | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | விசாலக்ஸ்மி பிலிம்ஸ் |
கதை | திரைக்கதை வலம்புரி சோமநாதன்கதை கண்ணதாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | பாலாஜி கண்ணதாசன் டி. எஸ். பாலையா கே. ஆர். விஜயா சந்திரகாந்தா |
படத்தொகுப்பு | எஸ். சூரியா, ஆர். தேவராசன் |
விநியோகம் | வேளாங்கண்ணி சினிஆர்ட்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 3, 1964 |
நீளம் | 4250 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கறுப்புப் பணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,கண்ணதாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கறுப்புப்பணத்தை வைத்திருக்கும் பணக்காரர்களிடமிருந்து அதனைப் பறித்து ஏழைகளுக்கு வழங்குபவரைப்பற்றி கதை.[1]
தணிக்காசலம் பெருஞ்செல்வந்தர். கொடையாளர். அவர் தனது பெயரில் பள்ளிகள், கல்லூரி, மருத்துவமனை, பூங்கா ஆகியன போன்றவற்றை அந்நகரில் நிறுவி இருக்கிறார். அவரிடம் பணவுதவி பெற்றுப் பலரும் படித்து முன்னேறியிருக்கின்றனர். அவர்களுள் அவ்வூரின் காவல்துறை ஆய்வாளர் சண்முக சுந்தரமும் அரசு வழக்கறிஞர் டெய்ஸியும் அடங்குவர். எனவே, புலவர்கள் அவரைப்பற்றிப் பாடல்கள் இயற்றுகின்றார். மக்கள் அவரது புகைப்படத்தை வீடுகளில் வைத்து விளக்கேற்றி, மாலையிட்டு வணங்குகின்றனர். நீதிபதி சதாசிவமும் தொழிலதிபர்களும் அவருடைய நண்பர்கள். தணிக்காசலத்திற்கு காந்தி என்னும் மகன் ஒருவர் உள்ளார்.
சத்தியநாதன் வணிகர். இவருக்கு இரு மனைவியர். முதல் மனைவியின் வழியாக கல்லூரிப் படிப்பை முடித்த ரவி என்னும் மகனும் கல்லூரியில் படிக்கும் தேவி என்னும் மகளும் உள்ளனர். இரண்டாம் மனைவியான சங்கரியின் வழியாக செலவாளியான ராஜூ என்னும் மகனும் இரு பெண்மக்களும் உள்ளனர்.
தாமோதரம் போக்குவரத்து நிறுவன முதலாளி. அவரிடம் 15 பேருந்துகள் இருக்கின்றன. முதியவரான இவர் தனது பேருந்துகளை எல்லாம் விற்று, அப்பணத்தோடு பெங்களூர் சென்று யாரேனும் இளம்பெண் ஒருவரை மணந்து அங்கேயே வாழத் திட்டமிடுகிறார்.
நடிகை ஒருவர் இளமையில் வறுமையில் வாடியவர். தற்பொழுது செல்வச்செழிப்போடு தன் அம்மாவுடன் அவ்வூரில் வசிக்கிறார். அவருக்கு ஒரு பெண் குழ்ந்தை இருக்கிறாள்; ஆனால், அவளை தன் தங்கை என ஊருக்குச் சொல்கிறார். அந்நடிகையைக் கொண்டு ஒரு குழுவினர் திரைப்படம் எடுக்கின்றனர்.
அந்நகரிலுள்ள ஒரு கொள்ளைக்கும்பல், கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களிடம் கொள்ளையடிக்கிறது. அதனை ஏழைகளுக்காகப் பயன்படுத்துகிறது. அக்குழுவைக் கண்டுபிடிக்கும் பணி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடமும் துப்பறிவாளர் ஒருவரிடமும் ஒப்படைக்கப்படுகிறது.
தேவி தணிகாசலத்தின் கல்லூரியில் படிக்கிறார். அக்கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் தணிகாசலத்திற்குப் பாராட்டுவிழா நடத்துகின்றனர். அதற்காக நன்கொடைபெற தாமோதரம் வீட்டிற்கும் தணிகாசலம் வீட்டிற்கும் தேவி செல்கிறாள். சத்தியநாதன் மகள்தான் தேவி என்பதை அறிந்த தாமோதரம் அவளை மணக்க ஆசைப்படுகிறார். தேவி திரட்டவேண்டிய நன்கொடை முழுவதையும் தணிகாசலமே கொடுத்துவிடுகிறார். தணிகாசலம் வீட்டிலும் அவருக்கான பாராட்டுவிழாவிலும் அவர் மகன் காந்தியும் தேவியும் சந்திக்கின்றனர்; காதலிக்கின்றனர். இதனை தணிகாசலம் அறிகிறார்.
தாமோதரத்திடம் இருக்கும் பேருந்துகள் அனைத்தையும் இருபது இலட்ச ரூபாய்க்கு சந்தியநாதன் ஒப்புக்கொள்கிறார். அதற்கு முன்பணமாக பத்து இலட்ச ரூபாயைக் கறுப்புப்பணமாகத் தருகிறார். மீதமுள்ள பத்து இலட்ச ரூபாயை குறிப்பிட்ட நாளில் கறுப்புப்பணமாகத் தருவதாகக் கூறிகிறார்.
‘சென்னை அழகி’யைத் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெறுகிறது. அதில் லூசி என்பவர் சென்னை அழகியாக மகுடஞ்சூட்டப்படுகிறார். அப்போட்டியைக் காண சத்தியநாதன் மகன் ராஜூம் செல்கிறார். போட்டி முடிந்து அனைவரும் கிளம்பும்பொழுது, சென்னை அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லூசி தானாக வந்து ராஜூவின் மகிழுந்தில் ஏறிக்கொள்கிறார். இருவரும் வீட்டிற்கு வந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்பொழுது ராஜூ தன் தந்தை கறுப்புப்பணம் வைத்திருப்பதையும் அதனைக் கொண்டு வணிகம் செய்வதையும் லூசியிடம் கூறுகிறார். ராஜூ குடும்பத்தினர் வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர், லூசி தன்னைச் சந்திக்கக் கடற்கரைக்கு வரும்படி ராஜூவை அழைக்கிறார். அந்த அழைப்பை ஏற்றுச்சென்ற ராஜூவை கொள்ளையர்கள் கடத்திவிடுகின்றனர்.
கடத்தப்பட்ட ராஜூவைத் திரும்பியனுப்ப பத்து இலட்ச ரூபாயை சத்தியநாதனிடம் கொள்ளையர்கள் கேட்கின்றனர். சத்தியநாதன் தன் மனைவியின் வற்புறுத்தலால் தாமோதரனுக்குத் தருவதற்காக வைத்திருந்த கறுப்புப்பணமான பத்து இலட்ச ரூபாயை கொள்ளையர்களுக்குக் கொடுத்து ராஜூவை மீட்கிறார். இதனால் சத்தியநாதனால் கெடுவுநாளில் தாமோதரனுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. தாமோதரனோ சத்தியநாதன் முன்பணமாகக் கொடுத்த பத்து இலட்ச ரூபாயையும் திருப்பித்தர மறுக்கிறார். தாமோதரன் பெங்களூருக்குச் சென்று யாரேனும் இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்ய இருப்பதை அறிகிறார். எனவே, மீதமுள்ள பத்து இலட்ச ரூபாய்க்குப் பதிலாக தன் மகள் தேவியை தாமோதரனுக்குத் திருமணம் செய்விக்க முடிவுசெய்கிறார். தாமோதரனும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். இதனை அறிந்து தேவியைக் காதலிக்கும் காந்தி வருந்துகிறார். தணிகாசலம் அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.
தாமோதரன், தேவி திருமணத்திற்கு தணிகாசலம் உள்ளிட்ட பெரியமனிதர்கள் அனைவரும் வருகின்றனர். தாமோதரன் தேவியின் கழுத்தில் தாலிகட்டப் போகும்பொழுது விளக்கு அணைக்கப்படுகிறது. இருள் சூழ்கிறது. மீண்டும் விளக்கு வந்தபொழுது தாமோதரன் கடத்தப்பட்டு இருப்பதை அனைவரும் அறிகின்றனர். தணிகாசலத்தின் உதவியோடு சத்தியநாதனும் ராஜூவும் காவல்துறையில் முறையீடு செய்கின்றனர். சத்தியநாதனிடமும் ராஜூவிடமும் காவல்துறை ஆய்வாளர் விசாரணைசெய்து கொள்ளையர்களால் செகநாதன் கடத்தப்பட்டு, பணங்கொடுத்து மீட்கப்பட்டதை அறிகிறார்.
நடிகையின் வீட்டில் லூசி வேலைக்காரராகச் சேர்கிறார். நடிகை, அவர் அம்மா, லூசி மூவரும் படப்பிடிப்பிற்குச் செல்கின்றனர். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்பொழுது லூசி தன் நண்பர்களுக்கு நடிகை வீட்டில் யாருமில்லை என்பதைத் தெரிவிக்கிறார். சிறிதுநேரத்தில், நடிகை வீட்டில் திருடுபோனது படப்பிடிப்பில் உள்ளவர்களுக்குத் தெரியவருகிறது. நடிகையும் அவர் அம்மாவும் காவலர்களோடு வீட்டிற்கு வந்தால், அங்கிருந்த கறுப்புப்பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.
நகரின் பெரிய விடுதியொன்றில் லூசியின் நடனநிகழ்ச்சி நடக்கிறது. அதற்கு துப்பறிவாளரும் சென்றிருக்கிறார். லூசி நடனமாடிக்கொண்டே அரங்கிற்குள் உலாவி அங்கு வந்திருக்குப்பவர்களின் கைப்பை, பணப்பை ஆகியவற்றித் திருடி தன் நண்பர்களிடம் கொடுக்கிறார். இதனை துப்பறிவாளர் கவனிக்கிறார். நடனம் முடிந்து அனைவரும் கிளம்பும்பொழுது லூசியையும் அவர் கூட்டத்தினரையும் பிடிக்க துப்பறிவாளர் முயல்கிறார். அவர்களில் ஒருவரை அடித்துப்போட்டுவிட்டு அவரின் வேடத்தில் துப்பறிவாளர், கொள்ளையர்கள் கூட்டத்தோடு சேர்ந்து அவர்கள் இடத்திற்குச் செல்கிறார்.
அங்கே, கடத்தப்பட்ட தாமோதரனைத் துன்புறுத்தி அவருடைய கறுப்புப்பணமும் தங்கக்கட்டிகளும் அவரது பண்ணைவீட்டில் இருப்பதை கொள்ளையர்கள் அறிகின்றனர். அவற்றை அன்றிரவு கொள்ளையடிக்கத் திட்டமிட்டுவிட்டு, குடித்துக் கும்மாளமிட்டு மயங்கிவிடுகின்றனர். துப்பறிவாளர் அங்கிருந்து வெளியேறுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் கொள்ளையர்கள் கிளம்புகின்றனர்.
தாமோதரனின் தோட்டத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் பொழுது காவல்துறையினர் அங்கு வந்துவிடுகின்றனர். தப்பியோட முயன்ற கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்கின்றனர். அப்பொழுது கறுப்புப் பர்தா அணிந்த உருவமொன்று இருட்டில் பதுங்கிப் பதுங்கிச் செல்வதை ஆய்வாளர் சண்முகசுந்தரம் கவனிக்கிறார்; பிந்தொடர்ந்து சென்று அவ்வுருவத்தின் முகத்தில் விளக்கை அடிக்கிறார். அந்த உருவத்தில் இருப்பவர் தணிகாசலம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
வீட்டிற்குத் திரும்பிய ஆய்வாளர் சண்முகசுந்தரம் செய்நன்றிக்காக தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அதனைத் தடுக்கும் தணிகாசலம், சண்முகசுந்தரத்திடம் சரணடைகிறார். வழக்கு தணிகாசலத்திற்கு நண்பரான நீதிபதி சதாசிவத்தின் முன் விசாரணைக்கு வருகிறது. அரசு வழக்கறிஞர் டெய்சி அரசு சார்பாக தணிகாசலத்திற்கு எதிராக வாதிடுகிறார். தணிகாசலமும் அவர் கூட்டாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். தணிகாசலம் நீதிபதியிடம் அனுமதி பெற்று குற்றத்திற்கான காரணத்தை விளக்குகிறார். அதில், தான் இளமையில் தாயை இழந்தவன்; கல்லூரிப்படிப்பிற்குத் தேவையான பணத்தை தன் தந்தைக்கு முதலாளி தரமறுத்ததால் தந்தையை இழந்தவன்; எனவே, பணம் இல்லாததால் கல்லூரிப்படிப்பு மறுக்கப்பட்டவன். அதன்விளைவாக சமூகச் சமநிலையை உருவாக்க, தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களிடம் கொள்ளையடித்து அவர்கள் பெயரிலேயே நன்கொடையாக ஏழைகளுக்கு உதவியவன்; இதற்காக தன் மகள் லூசியை ஈடுபடுத்தியவன் எனக் கூறிகிறார்.
நீதிமன்றம் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்குகிறது. நீதிமன்ற வாயில் தணிகாசலம், தன் மகன் காந்திக்கும் சத்தியநாதன் மகள் தேவிக்கும் திருமணம் செய்துவைத்த பின்னர் தன் நண்பர்களோடு சிறைக்குச் செல்கிறார்.
எண் | பாடல் | பாடியவர் | இயற்றியவர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "எல்லாரும் எல்லாம்" | சீர்காழி கோவிந்தராஜன் | கண்ணதாசன் | 3:15 |
2 | "இரைக்க இரைக்க" | 1:00 | ||
3 | "கண்மணி கண்மணி கண்ணே" | பி. சுசீலா | 3:22 | |
4 | "அம்மம்மா கேளடிi" | எல். ஆர். ஈஸ்வரி | 5:28 | |
5 | "கையிலே பணமிருந்தால்" | 3:28 | ||
6 | "ஆடவரெல்லாம் ஆட வரலாம்" | 3:23 | ||
7 | "பட்டுச் சிறகுகொண்ட" | ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி | 3:44 | |
8 | "தங்கச்சி சின்ன பொண்ணு" | சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி | 6:24 | |
9 | "இறைவா இறைவா" (உந்தன் ராஜசபை) | எஸ். ஜானகி | 4:21 |