கல்கி சுப்ரமணியம் (Kalki Subramaniam) ஓர் புகழ்பெற்ற திருநங்கைகள் மற்றும் LGBTQI உரிமைகள் ஆர்வலரும், கலைஞரும், நடிகரும், எழுத்தாளரும், தமிழ்நாட்டின் தொழில்முனைவருமாவார். இவரை இந்திய அரசின் சமூக நீதி அமைச்சகம் தேசிய திருநர் ஆணையத்தின் தென்னிந்திய உறுப்பினராக தேர்ந்தெடுத்தது.[1]
இவர், தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தார்.[2] ஒரு தொழிலாள வர்க்க குடும்பத்தில் பிறந்த இவர் கல்வியில் முதலிடம் பிடித்த ஒரு பிரகாசமான மாணவி ஆவார். இவர், பத்திரிக்கையில் மற்றும் மக்கள் தொடர்பியல், சர்வதேச உறவுகள் ஆகிய இரண்டு பாடங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரது முதுகலைப் படிப்புகளின் போது, இவர் 'சகோதரி' என்று அழைக்கப்படும் திருநங்கைகளுக்கான முதல் மாதாந்திர இதழை வெளியிடத் தொடங்கினார். இது இந்தியாவில் திருநங்கைகளுக்காக வெளிவந்த முதல் தமிழ் இதழ் ஆகும்.[3]
2008 ஆம் ஆண்டில், இவர், இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு ஆதரவளித்து அவர்களை மேம்படுத்தும் ஒரு தொண்டுநிறுவனமான சகோதரி அறக்கட்டளையை நிறுவினார்.[4] 2017 ஆம் ஆண்டில் கல்கி சுப்ரமணியம் தூரிகை எனற கலைத் திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட திருநங்கை மக்களுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பதன் மூலம் வெளிப்படும் கலைப்படைப்புகளை விற்பனை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வழி செய்தார் .[5].
2011 இல், இவர், தமிழ் திரைப்படமான 'நர்த்தகி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இது திருநங்கை மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது. இந்திய சினிமாவில் முதல் திருநங்கை கதாநாயகி கல்கி சுப்ரமணியம் ஆவார்.[6] 2017 ஆம் ஆண்டு 'தி லோன்லி வுல்வ்' (The Lonely Wolf) என்ற இந்தித் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான சர்கார் என்ற படத்தில் இடம் பெற்ற "ஒரு விரல் புரட்சி" என்ற பாடலில் ஒரு சிறப்பு தோற்றத்தை வெளிப்படுத்தினார்.[7][8] இவர் திரைப் படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்த முதல் திருநங்கையாவார்.[9]
இவரது ஓவியக் கலைப்படைப்புகள் பாப் கலை பாணியாகும். அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனியில் இவரது கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளார்.[10] குறி அறுத்தேன், வடு உட்பட தான் எழுதிய ஆறு கவிதைகளை கவிதை குறும்படங்களாக உருவாக்கினார்.[11] 2016 ஆம் ஆண்டில், இவர் தனது ஓவியங்களுக்கு பொது மக்களிடடையே பிரச்சாரத்தின் மூலம் நிதி திரட்டினார். அதன்மூலம் பெறப்பட்ட தொகையினை பாதிக்கப்பட்ட திருநங்கை பெண்களின் கல்விக்கு உதவினார்.[12]
2014 ஆம் ஆண்டு இவர் தமிழில் 'குறி அறுத்தேன்' என்ற கவிதை நூலை வெளியிட்டார்.[13] இந்தியாவில் திருநங்கை சமூகத்திலிருந்து வெளியான முதல் கவிதை நூல் இதுவேயாகும். 2021 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் இவர் எழுதிய 'We are not the Others' என்ற நூல் ஹார்வர்ட் பல்கலைக்கழக நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.[14] 2024 ஆம் ஆண்டு 'ஒரு திருநங்கையின் டைரிக் குறிப்பு' என்ற நூலை வெளியிட்டார்.[15] இவரது ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியப் படைப்புகள் பல கல்லூரிகள், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன.