கல்ப சூத்திரம் (சமக்கிருதம்: कल्पसूत्र) என்பது சைனத்தீர்த்தங்கரர்கள், குறிப்பாக பார்சுவநாதர் மற்றும் மகாவீரரைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட சைன நூலாகும்.[1] மரபின்படி, இந்நூல் பத்திரபாகுவினால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன்படி, இந்நூலின் காலம் கி.மு. 4ம் நூற்றாண்டாகும்.[2] பெரும்பாலும் இந்நூல் மகாவீரர் நிர்வாணம்அடைந்து 980 அல்லது 993 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டிருக்கலாம்.
சுவேதாம்பரப் பிரிவுக்கான சைன இலக்கியத் தொகுப்புக்களின் ஆறு பிரிவுகளில் இது சேட சூத்திரங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இச் சூத்திரம் விரிவான வாழ்க்கை வரலாறுகளைக்கொண்டுள்ளது. மேலும், 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, சிறு ஓவியங்களும் உள்ளடக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது கிடைத்துள்ள மிகப்பழமையான பிரதிகள் மேற்கிந்தியாவில் 14ம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டவையாகும்.
பத்திரபாகுவினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கல்ப சூத்திரம், மரபின் படி மகாவீரரின் நிர்வாணத்தின் (இறப்பு) பின் 150 ஆண்டுகள் கழித்துத் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2] இந்நூல் மகாவீரரின் இறப்பின் பின் 980 அல்லது 993 ஆண்டுகள் கழித்து, துருவசேனனின் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கக் கூடும்.[3]
இந்நூல், எட்டு நாட்கள் கொண்டாடப்படும் பர்யூசான் விழாவின் போது, சைனத் துறவிகளால் பொதுமக்களுக்கு படித்து விளக்கப்படும். சைனத்தில் இந் நூல் உயரிய ஆன்மீக மதிப்புக் கொண்டிருப்பதால், இந்நூலை சமணத் துறவிகள் மட்டுமே படிக்கலாம்.
மகாவீரர் நிர்வாணம் குறித்த கல்பசூத்திரப் பக்கங்கள். பிறை வடிவத்திலமைந்த சித்தசீலவையும் காணலாம். இது நிர்வாணத்தின் பின் சித்தர்கள் அனைவரும் வசிக்கும் இடமாகும்.
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.