கல்பாத்தி இரதோத்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து கோயில் திருவிழா ஆகும். இந்தத் திருவிழாவானது விசாலாட்சி உடணுறை விசுவநாத சுவாமி கோயிலில் நடக்கும் திருவிழா ஆகும். இங்கு உள்ள தெய்வங்கள் சிவன் (விசுவநாதர்) மற்றும் அவரது துணைவி விசலட்சி, பார்வதியின் மற்றொரு பெயர்.
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இங்கு நடத்தப்படும் பத்து நாள் தேர் திருவிழா கேரளத்தின் குறிப்பிடத்தக்க விழாக்களில் ஒன்றாகும். திருவிழாவின் முதல் நான்கு நாட்கள் கோயிலில் வேத நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது 700 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்று நம்பப்படுகிறது. அடுத்து வரும் மூன்று நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி அலங்கரிக்கப்பட்ட கோயில் இரதங்களை தெருக்களில் இழுப்பர்.
நிலா நதி என்றும் அழைக்கப்படும் கல்பாத்தி ஆற்றின் கரையில் பழங்கால சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1425 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. வட இந்தியாவின் கங்கைக் கரையில் உள்ள புகழ்பெற்ற வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுடன் தொடர்பு படுத்தபடுகிறது : காசியில் பகுதி கல்பாதி அதாவது பாதி காசி கல்பாதி என்று இத்தலம் குறித்து கூறப்படுகிறது, கோயில் அமைந்துள்ள கிராமம் அல்லது அக்ரகாரம் என அறியப்படுவது, ஆரம்பகால தமிழ் பிராமண குடியேற்றமாகும்.
கல்பாத்தி விசுவநாத சுவாமி கோயில் மலபாரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். இது கி.பி 1425 இல் அப்போதைய பாலக்காட்டின் அரசர் கோம்பி அச்சனால் கட்டபட்டது. லட்சுமியம்மாள் என்ற ஒரு பிராமண விதவை பனராசுக்குச் சென்றபோது கொண்டுவந்த லிங்கமானது தற்போதைய இடத்தில் அதாவது நீலா பகீரதி ஆற்றின் தென் கரையில் நிறுவப்பட்டதாக செவிவழிக் கதை கூறுகிறது. கோயிலின் இருப்பிடமும் ஆற்றுக்குச் செல்லும் படிகளும் கங்கைக் கரையில் உள்ள பனாரஸ் கோயில்களை பார்வையாளர்களின் நினைவில் கொண்டு வருகின்றன. எனவே இந்த கோயிலை "காசியில் பகுதி கல்பாத்தி" (பாதி பனாரஸ்) என்று அழைக்கப்படுகிறது.
கல்பத்தி தேர்த் திருவிழா வேத தமிழ் பிராமண கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. திருவிழாவின் முக்கிய மையமாக கல்பாத்தி விசுவநாதசுவாமி கோயில் உள்ளது. புதிய கல்பாத்தி, பழைய கல்பாத்தி மற்றும் சத்தபுரம் கிராமத்தில் உள்ள மூன்று துணைக் கோயில்களும் இந்த திருவிழாவைக் கொண்டாடுகின்றன.
இத்திருவிழாவானது பொதுவாக நவம்பர் 8 முதல் 16 வரை என 10 நாட்கள் நடத்தப்படுகிறது,. இந்த நேரத்தில், கல்பாத்தியின் 4 கோயில்களில் இருந்து 6 தேர்கள் ஒன்றன்பின் ஓன்றாக கிராமங்களின் வீதிகளில் பிரமாண்ட ஊர்வலமாக வலம் வருகின்றன. 4 + 2 தேர்கள் பின்வருமாறு: சிவபெருமானைச் சுமக்கும் பிரதான தேர் மற்றும் அவரது பிள்ளைகளான பிள்ளையார் மற்றும் முருகனுக்கு கூடுதலாக 2 சிறிய தேர்கள்; பிள்ளையாருடன் புதிய கல்பாத்தி, கிருஷ்ணருடன் பழைய கல்பாத்தி, பிள்ளையாருடன் சத்தபுரம் ஆகிய பிற 3 கிராமங்களிலிருந்து தேர்கள் வருகின்றன. இது 'தேவரதசமகம்' என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கல்பாத்தியில் ஒன்றுகூடி தேர்களை இழுக்கின்றனர்.[1]