காங்கிரஸ் வானொலி (Congress Radio) ஒரு இரகசிய வானொலி நிலையமாக இருந்தது, இது 1942ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்காக பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்[1] போது சுமார் மூன்று மாதங்கள் ஒலிபரப்பானது. காங்கிரஸ் வானொலி, இந்திய தேசிய காங்கிரஸின்[2] அதிகாரப் பூர்வ ஒலிபரப்பாக இருந்தது, தற்போது மும்பை என்று அழைக்கப்படும் பம்பாயிலிருந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதை ஹாம் ரேடியோ ஆபரேட்டர்களின் [3] உதவியுடன் இந்தியாவின் மூத்த சுதந்திர போராட்ட வீரர் உசா மேத்தா (1920–2000) அறிவிப்பாளராக செயல்பட்டார். காங்கிரஸ் வானொலியை ஒலிபரப்பு செய்வதற்காக அவரது மற்ற நண்பர்கள் விட்டல்தாஸ் காக்கர், சந்திரகாந்த் ஜாவேரி மற்றும் பாபுபாய் தாக்கர் ஆகியோர் உதவி செய்தனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உபகரணங்களை மும்பையின் சிகாகோ வானொலியின் நானிக் மோட்வானே வழங்கினார். ராம் மனோகர் லோஹியா, அச்சியூத்ராவ் பட்வர்தன், புருஷோத்தம் திரிகம்தாஸ் போன்ற பிரபலங்களும் காங்கிரஸ் வானொலியுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
ஆகஸ்ட் 14, 1942 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள், இரகசிய காங்கிரஸ் வானொலி ஒலிபரப்பைத் தொடங்கியது, டாக்டர் உஷா மேத்தாவின் முதல் அறிவிப்பு இப்படி செய்யப்பட்டது: "இது காங்கிரஸ் வானொலி, இந்தியாவின் ஏதோவொரிடத்திலிருந்து 42.34 மீட்டர் அலைவரிசையில் (அலைநீளம்) ஒலிபரப்பப்படுகிறது."