காட்டு விலங்குத் துன்பம் (ஆங்கிலம்: Wild animal suffering) என்பது நோய், காயம், ஒட்டுண்ணித்தன்மை, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு, வானிலை, இயற்கை பேரழிவுகள், பிற விலங்குகளால் கொல்லப்படுதல் உள்ளிட்ட தீங்குகளாலும்[1][2] உளவியல் ரீதியாக மன அழுத்தத்தாலும்[3] மனிதனின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு வெளியே வாழும் மனிதரல்லா விலங்குகள் அனுபவிக்கும் துன்பமாகும். சில கணக்கெடுப்புகளின் படி இந்த தனிப்பட்ட விலங்குகள்தான் உலகில் வாழும் விலங்குகளில் பெரும்பாலானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.[4] பெரும்பாலான இயற்கைத் துன்பங்கள் டார்வினிய பரிணாம வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவாகவே அறியப்படுகின்றன.[5] விலங்குகளின் இனப்பெருக்க முறைகள் பரந்துபட்டு இருப்பது, அதன் விளைவாக அதிக அளவில் குட்டிகள் ஈனப்படுவது, அதன் பின்னர் அவற்றில் பெரும்பாலான குட்டிகளுக்கு கிடைக்கும் குறைந்த பெற்றோர் கவனிப்பு, பிறந்தவற்றில் சில மட்டுமே வளர்ந்து பெரிய விலங்காவது, மீதமுள்ளவை வலிமிகுந்த பல்வேறு வழிகளில் இறந்து போவது என இவையனைத்தும் இயற்கையில் மகிழ்ச்சியைக் காட்டிலும் துன்பமே பெரிதாக ஆதிக்கம் செலுத்துகிறது என்று சில அறிஞர்கள் வாதிடுகின்றனர்.[1][6][7]
காட்டு விலங்குகளின் துன்பம் என்ற விடயம் காலங்காலமாக மதக் கோட்பாடுகளின் பின்னணியில் தீவினைச் சிக்கல் என்பதன் ஒரு நிகழ்வாக கருதப்பட்டு வந்துள்ளது.[8] சமீப காலங்களில், குறிப்பாகப் 19-ம் நூற்றாண்டில் தொடங்கி, பல அறிஞர்கள் மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் இருந்து இந்த விடயத்தை ஒரு பொதுவான தார்மீக பிரச்சினையாகக் கருதி இவையாவும் மனித முயற்சிகளின் மூலம் தடுக்குப்படக் கூடியவையே என்று கருதத் துவங்கியுள்ளனர்.[9] எனினும் இத்தகைய செயல்களை மேற்கொள்வதில் சிலரிடம் கணிசமான கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இவ்வாறு கருதுபவர்கள் பெரும்பாலும் "இயற்கை மீதான மனிதத் தலையீடுகள் நடைமுறையில் சாத்தியமற்றவை",[10] "தனிப்பட்ட விலங்குகளின் நலனைக் காட்டிலும் சுற்றுச்சூழல் நலனே பெரிதாக மதிக்கப்பட வேண்டும்",[11] "விலங்குகளின் உரிமைகள் என்ற பார்வையில் வன விலங்குகளின் துன்பத்தைக் குறைப்பதற்கான எந்தவொரு செயலையும் கடமையாகக் கருதுவது அபத்தமானது",[12] "இயற்கை என்பது இன்பம் பரவலாக இருக்கும் ஒரு அழகிய இடமாகும்"[6] உள்ளிட்ட வாதங்களை முன்வைக்கின்றனர். மேலும் சிலரோ இயற்கை மீதான இத்தகைய மனிதத் தலையீடுகள் மனித மேலாதிக்க சிந்தனையையும் தானே கடவுளாக நிலைகொள்வதற்கு மனிதன் எடுக்கும் முயற்சி என்பதையுமே காட்டுகிறது என்று வாதாடுகின்றனர். இதற்குச் சான்றாக இயற்கை மீதான மற்ற மனிதத் தலையீடுகள் விளைவித்துள்ள எதிர்ப்பாராத தீங்குகளைக் காட்டுகின்றனர்.[13] விலங்குரிமை அறிஞர்கள் உள்ளிட்ட மேலும் சிலரோ தலையிடாமைக் கொள்கை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் "மனிதர்கள் காட்டு விலங்குகளுக்கு தீங்கிழைக்கவும் கூடாது அவை அனுபவிக்கும் இயற்கையான தீங்குகளை குறைக்கும் முயற்சியில் அவற்றில் தலையிடுவதும் கூடாது" என்று கருதுகின்றனர்.[14][15]
இயற்கைக் காரணங்களால் காடுகளில் துன்பப்படும் விலங்குகளுக்கு உதவ வேண்டியது மனிதனின் கடமை என்றே விலங்குரிமை மற்றும் விலங்குநலன்புரி நிலைபாடுகள் குறிக்கின்றன என்று விலங்குரிமைச் சிந்தனையாளர்கள் வாதிடுகின்றனர். இதே போன்ற துன்பங்களில் சிக்கும் மனிதர்களுக்கு உதவாதது தவறு என்பது உண்மையாயின் அதே சூழ்நிலைகளில் சிக்கும் விலங்குகளுக்கு மட்டும் உதவ மறுப்பது விலங்கினவாதத்திற்கு ஒரு உதாரணம் என்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.[2] மனிதர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகவும் தங்களது சுற்றுச்சூழல் இலக்குகளுக்காகவும் இயற்கையின் செயற்பாடுகளில் தொடர்ந்து—சில நேரங்களில் மிகவும் கணிசமான வகையில்—தலையிடுகிறார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர்.[16] தற்போதுள்ள இயற்கைத் தீங்குகளைத் தணிப்பது மனிதப் பொறுப்பே என்ற எண்ணமும் இத்தகைய தலையீடுகளுக்கு ஒரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.[17] காயம்பட்ட விலங்குகளுக்கு மருந்து போடுதல், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்குத் தடுப்பூசி போடுதல், விலங்குகளின் நோய்களைக் குணப்படுத்துதல், தீ மற்றும் பிற இயற்கை பேரழிவுகளில் சிக்கும் விலங்குகளை மீட்பது, பசியுள்ள விலங்குகளுக்கு உணவளித்தல், தாகமுள்ள விலங்குகளுக்கு தண்ணீர் வழங்குதல், அனாதையாக விடப்பட்ட விலங்குகளைப் பராமரித்தல் என ஏற்கனவே பலவகையிலும் மனிதர்கள் வெற்றிகரமாக காடுகளில் உள்ள விலங்குகளுக்கு உதவுகிறார்கள் என்று சிலர் சுட்டுகின்றனர்.[18] நமது தற்போதைய புரிதலுடன் பரந்த அளவிலான தலையீடுகள் சாத்தியமில்லை என்றாலும், மேம்பட்ட அறிவாலும் தொழில்நுட்பங்களாலும் எதிர்காலத்தில் அவை சாத்தியமாகக் கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.[19][20] இந்தக் காரணங்களுக்காகவே, வனவிலங்குகளின் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இந்தச் சூழ்நிலைகளில் துன்பப்படும் விலங்குகளுக்கு மனிதர்கள் உதவ வேண்டும் என்ற கருத்தைப் பரப்புவதும், எதிர்காலத்தில் அதிகத் தீங்கு விளைவிக்காமல் அந்தத் துன்பங்களைக் குறைக்க எடுக்கக்கூடிய பயனுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதும் முக்கியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.[6][16]
Murray, Michael (April 30, 2011). Nature Red in Tooth and Claw: Theism and the Problem of Animal Suffering. Oxford University Press. ISBN978-0199596324.