காந்தா (Kantha) என்ற பூத்தையல் கைவினைக் கலை வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. காண்டா மற்றும் குவாண்டா என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. ஒடிசாவில், பழைய புடவைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, கையால் தைத்து மெல்லிய மெத்தை துண்டை உருவாக்குகிறார்கள். இது பொதுவாக படுக்கை மெத்தைகளுக்கு மேலே அல்லது மெத்தைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] "காந்தா புடவைகள் பாரம்பரியமாக வங்காள பிராந்தியத்தின் பெண்களால் அணியப்படுகின்றன. [2] இந்த நாட்களில், புடவை, குர்தா (அல்லது பஞ்சாபி) மற்றும் சுரிதார் மற்றும் பல ஆடைகளில் பூத்தையல் தைக்கப்பட்டு அது காந்தாத் தையல் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இவற்றின் அழகியல் மதிப்பு மற்றும் கையால் செய்யப்பட்ட பண்புகள் காரணமாக இவை பிரபலமடைந்து வருகின்றன.
காந்தா தையல் என்ற பூப்பின்னல் கலை எளிய மெத்தைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை பொதுவாக நாக்சி காந்தா என்று அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் உள்ள பெண்கள் பொதுவாக பழைய புடவைகள் மற்றும் துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றை காந்தா தையல் மூலம் அடுக்கி, இலேசான போர்வை, படுக்கை விரிப்பு, குறிப்பாக குழந்தைகளுக்கான விரிப்புகள் முதலியனவற்றை தயாரிக்கிறார்கள். இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே காந்தா மிகவும் பிரபலமானதாக உள்ளது.
காந்தா என்பது கிராமப்புற பெண்களால் அடிக்கடி செய்யப்படும் பூத்தையல் வடிவமாகும். காந்தா பூத்தையலின் பாரம்பரிய வடிவம் மென்மையான வேட்டிகள் மற்றும் புடவைகளின் விளிம்புகளில் எளிமையான ஓடும் தையல் மூலம் செய்யப்படுகிறது. முடிக்கப்பட்ட தயாரிப்பின் பயன்பாட்டைப் பொறுத்து அவை லெப்கந்தா அல்லது சுசினி காந்தா என அழைக்கப்பட்டன.
சால்வைகள், கண்ணாடிகளுக்கான உறைகள், பெட்டிகள் மற்றும் தலையணைகள் உட்பட பல பயன்பாடுகள் பூத்தையல் செய்யப்பட்ட துணிகளுக்கு உள்ளன. சில சந்தர்ப்பங்களில், முழுத் துணியும் ஓடும் தையல்களால் மூடப்பட்டிருக்கும். பூக்கள், விலங்குகள், பறவைகள், வடிவியல் வடிவங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளின் கற்பனை அழகான உருவங்கள் பூத்தையல் செய்யப்பட்ட துணியில் நெய்யப்படுகின்றன. துணி மீது நெய்யப்படும் சிறிய தையல் சுருக்கம், அலை அலையான விளைவை கொடுக்கிறது. தற்கால காந்தா என்பது புடவைகள், துப்பட்டா, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சட்டைகள், படுக்கை மற்றும் பிற அலங்காரத் துணிகள், பெரும்பாலும் பருத்தி மற்றும் பட்டு போன்ற ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நவீன காந்தா-தையல் கைவினைத் தொழில் மிகவும் சிக்கலான பல-நிலை உற்பத்தி மாதிரியை உள்ளடக்கியதாகும் . [3]