![]() பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காந்தாரத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலை | |
செய்பொருள் | இளகல் தீப்பாறை |
---|---|
அளவு | உயரம்: 95 சமீ அகலம்: 53 சமீ |
காலம்/பண்பாடு | கிபி 2ம் - 3ம் நூற்றாண்டு |
இடம் | சமால் கார்கி, காந்தாரம், பாக்கிசுத்தான் |
தற்போதைய இடம் | அறை 33, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன் |
காந்தார புத்தர் சிலை, இன்றைய பாகிசுத்தானில் இருப்பதும், பண்டைய காந்தாரத்தைச் சேர்ந்ததுமான சமால் கார்கி என்னும் களத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொடக்ககாலப் புத்தர் சிலை ஆகும். இது கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 33ம் எண் அறையில் உள்ளது.[1] கிபி முதலாம் நூற்றாண்டு வரை ஞானம் பெற்ற நிலையில் உள்ள புத்தர் சிலைகள் உருவாக்கப்படவில்லை. இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார்.[2] இப்பகுதி, பேரரசன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட கிரேக்க-பக்ட்ரிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், பிற காந்தார, கிரேக்க- பௌத்த கலைகளைப் போலவே இந்தச் சிலையும் பண்டைய கிரேக்கக் கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளது.[3][4]காந்தாரம், மாமன்னர் அலெக்சாண்டரின் ஆளுகைக்கு உட்பட்ட கிரேக்க-பாக்டீரிய ஆட்சிப்பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
இச்சிலை இளகல் தீப்பாறையில் செதுக்கப்பட்டதனால், விரல் நகங்கள் வரையான நுணுக்கமாகச் செதுக்க முடிந்தது. நியம நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இச்சிலையில் நிலை தர்மச்சக்கர முத்திரையையைக் காட்டுகிறது. ஞானம் பெற்று, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகில் சாரநாத்தில் தனது முதலாவது உபதேசத்தை வழங்கிய பின்னரே புத்தர் இத்தகைய ஒரு நிலையை மேற்கொண்டார்.புத்தர் கிமு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தாலும், கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இச்சிலை தொடக்ககாலச் சிலையாகும். இவ்வாறான சிலைகள் கிபி முதலாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்படவில்லை. புத்தர் இறந்து முதல் நான்கு நூற்றாண்டுகள் புத்தர் அவரது காலடி போன்ற குறியீடுகளாலேயே காட்டப்பட்டார்.[2]
இப்புத்தர் அரசிருக்கை அல்லது ஒரு மேடையில் இடப்பட்ட மெத்தையில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இருக்கைக்கு முன்னால் தலையில் முடியும் ஒளிவட்டமும் பொருந்திய போதிசத்வர்களும், இரு புறமும் முழந்தாழிட்ட நிலையில் ஆணும் பெண்ணுமான இரு உருவங்களும் உள்ளன. இவ்விருவரும், இச்சிலையை உருவாக்குவதற்கான நிதியை வழங்கியவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[5]
பிபிசி வானொலி 4ன் 100 பொருட்களில் உலக வரலாறு என்னும் நிகழ்ச்சித் தொடரில் ஒரு பொருளாக இச்சிலை பயன்படுத்தப்பட்டது. குறியீடுகளால் காட்டப்பட்ட புத்தர் உருவச் சிலைகளாக வடிக்கப்படும் நிலை உருவாகியது தொடர்பான மாற்றங்களை இந்நிகழ்ச்சி விளக்கியது.[6]