கான்சுட்டன்டினோ டி சா டி நோரொஞ்ஞா (Constantino de Sá de Noronha), ஆராவதும், எட்டாவதுமான ஆளுனனாக இரண்டு தடவைகள் இலங்கையின் போர்த்துக்கேய ஆளுனனாக இருந்தான். போர்த்துக்கலின் இரண்டாம் பிலிப்பின் ஆட்சியில் 1618 முடல் தடவை ஆளுனனாக நியமிக்கப்பட்ட டி சா 1622 வரை பதவியில் இருந்தான். இரண்டாவது தடவை 1623 இலிருந்து 1630 வரை இரண்டாவது தடவை அதே பதவியில் அமர்த்தப்பட்டான். இவனைத் தொடர்ந்து முதல் தடவை யார்ச் டெ அல்புகெர்க் என்பவனும், இரண்டாம் முறை பிலிப்பே மசுக்கெரனாசு என்பவனும் ஆளுனராயினர்.[1]
இவன் முதல் தடவை பதவியில் இருந்த காலத்தில், 1619 இல், பிலிப்பே டி ஒலிவேரா தலைமையில் படையொன்றை அனுப்பி யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றப்பற்றிப் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தான். 1619 நவம்பரில், கோவாவில் இருந்த போர்த்துக்கேய அரசரின் அரசப் பிரதிநிதி இறக்கவே, பெர்னாவ் டி அல்புகேர்க் புதிய அரசப் பிரதிநிதி ஆனான். இவனது மகன் இலங்கையில் படைத் தலைவனாக இருந்தான். அவனை இலங்கையின் ஆளுனன் ஆக்குவதற்காக, டி சா கோவாவுக்குத் திருப்பி அழைக்கப்பட்டான். இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின்னர் திருகோணமலையில் ஒரு கோட்டையைக் கட்டினான். இதற்காக அங்கிருந்த புகழ் பெற்ற இந்துக் கோயிலான திருக்கோணேசுவரம் சிவன் கோயிலையும் இடித்தான். கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுமாறும் இவனுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வசதியாக சிங்களவர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டான்.[2]
கண்டி இராச்சியத்துடன் இடம்பெற்ற ரந்தெனிவலைச் சண்டை போர்த்துக்கேயப் படைகள் முழு அழிவை எதிர்நோக்கிய போது அவ்விடம் விட்டு விலக மறுத்து உயிர்நீத்தான்.[3]