காபித்தான் அல்லது காபித்தான் சீனா என்பது தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த சீனச் சமூகத்தவரின் தலைவரை அல்லது சீனச் சமூகத்தின் பிரதிநிதியைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். முதன்முதலில் மலாக்கா சுல்தான்கள்தான் காபித்தான் முறைமை உருவாக்கினார்கள். அதன் பின்னர் போர்த்துகீசியர்களும் இந்த முறைமையைப் பயன்படுத்தினர்.[1]
மலாக்கா சுல்தானகத்தைத் தோற்கடித்து, மலாக்காவைத் தங்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த போர்த்துகீசியர்கள், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அந்தத் தலைமை முறைமையைத் தொடர்ந்து வழக்கத்தில் நிலை நிறுத்தினர். காபித்தான் எனும் சொல் Kapitein எனும் போர்த்துகீசிய சொல்லில் இருந்து உருவானது. அதையே இந்தோனேசியாவில் Majoor der Chinesen என்று டச்சுக்காரர்கள் அழைத்தனர்.
மலாக்காவில் இருந்த பல்வேறு இனத்து வணிகர்களின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரு தலைமை முறைமை தோற்றுவிக்கப்பட்டிருந்தது. 1400களில் மலாக்காவில் இந்தியர்கள், அராபியர்கள், ஜாவானியர்கள், சீனர்கள் என பல இனத்தவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அந்தந்தச் சமூகங்களுக்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தத் தலைவர் Headman என்று அழைக்கப்பட்டார்.[2]
சீனச் சமூகத்தின் தலைவரை காபித்தான் சீனா என்று அழைத்தனர். சீனச் சமூகத்தின் சிறிய பிரச்னைகளை அவரே தீர்த்து வைப்பார். பெரிய பிரச்னைகள் என்றால் சுல்தான் அல்லது ஆளுநரின் பார்வைக்கு கொண்டு செல்ல்லப்படும். மலாய்ச் சமூகத்தின் தலைவருக்கு என்ன அதிகாரங்கள் இருந்தனவோ, அத்தனை அதிகாரங்களும் காப்பித்தானுக்கு வழங்கப்பட்டு இருந்தது. சில சமயங்களில் சட்டங்களை இயற்றுவதற்கும் அவருக்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது.
குடிசார், குற்றம் தொடர்புடைய சட்டங்களை அமலாக்கம் செய்வது; அமைதியைக் காப்பது; தீர்வைகளைத் திரட்டுவது போன்றவை காபித்தான் சீனாவின் முக்கியப் பொறுப்புகளாகும். காலப் போக்கில், இந்தத் தலைமை முறைமை வழக்கம் மலாயாவின் பிற மாநிலங்களுக்கும் பரவியது. மலாய் அரசியல் அமைப்புடன், காபித்தான் சீனா முறைமையும் மிகவும் நெருக்கமாகிப் போனது.
சீனச் சுரங்கத் தொழிலில், சீனர்களிடம் இருந்து வரி வசூலிப்பதற்கு, இந்த முறைமை மலாய்த் தலைவர்களுக்கு பெரிதும் உதவியாகவும் இருந்தது. மலாயாவில் பொறுப்பு வகித்த காபித்தான் சீனா தலைவர்களில் யாப் ஆ லோய் என்பவர் பிரசித்தி பெற்றவர் ஆகும்.[3] கோலாலம்பூர் நகரத்தின் வளர்ச்சிக்கு சிறப்பான சேவைகளை வழங்கியுள்ளார்.கோலாலம்பூர் நகரத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இதுவரையில் ஐவர் கோலாலம்பூர் காபித்தான்களாகச் சேவை செய்துள்ளனர். ஐந்தாவது காபித்தானாக இருந்த யாப் குவான் செங் 1902இல் இறந்த பின்னர், இந்தக் காபித்தான் முறைமை ரத்து செய்யப்பட்டது.