கார்ட்டோசாட் (Cartosat) என்பது நிலவியல் ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவப்படும் புவிநோக்குச் செயற்கைக்கோள் வகை செயற்கைக்கோளாகும். இத்தொடர் வரிசை செயற்கைக்கோள்கள் யாவும் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இதுவரையில் 5 கார்டோசாட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. கார்டோசாட் வரிசைச் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்புவது இந்தியத் தொலை உணர்வுகாணல் ஆய்வுத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். புவிவளத்தை கண்காணித்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல் போன்ற நோக்கத்திற்காக இவை குறிப்பாக விண்ணில் ஏவப்படுகின்றன.
இந்தியாவின் முதலாவது புவிநோக்குச் செயற்கைக்கோள் கார்டோசாட்-1 ஆகும். முனைய துணைக்கோள் ஏவு கலம் சி6 (பி.எசு.எல்.வி - சி6) 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் புதியாகக் கட்டப்பட்ட இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இச்செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது[1]. முன்னதாக இந்திய விண்வெளித்துறை இதேநிலவியல் ஆய்வுக்காக பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தது. அவை வெற்றிகரமாக விண்ணில் செயற்பட்டுக் கொண்டுமிருந்தன. 1:1 மில்லியன் முதல் 1:12,500 வரையிலான பல்வேறு வகையிலான அளவுகோள்களில் நிலவியல் தொடர்பான தரவுகளை அவை பூமிக்கு வழங்கிக் கொண்டிருந்தன. இந்திய தொலைதூர உணர்வு செயற்கைக்கோள்கள் பயணத்திட்டம் ஒவ்வொன்றிலும் அளவுப்பகுதி, அலைமாலை, கதிரியக்கப் பிரிதிறன் போன்ற கூறுகள் மேம்படுத்தப்பட்டு தரவுத் தொடர்கள் உறுதிப்படுத்தப்பட்டும் வந்தன, நிலவியல் தரவுகளின் தேவை பெருமளவில் அதிகரித்ததன் காரணமாக இந்திய விண்வெளித்துறை கார்டோசாட்-1 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது.
முனைய துணைக்கோள் ஏவு கலம் சி6 (பி.எசு.எல்.வி - சி6) 2005 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் புதியாகக் கட்டப்பட்ட சத்தீசு தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இச்செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது[1] . இச்செயற்கைக்கோள் வழங்கும் புகைப்படங்கள் உலகளாவிய பங்கீட்டுக்கு ஏதுவாக அமெரிக்காவிலுள்ள சுற்றுப்பாதை படமாக்கும் நிறுவனமான சியோஐ – இல் கிடைக்கிறது. ஒட்டுமொத்த பூமியையும் 126 நாள் சுழற்சியில் 1867 சுற்றுப்பாதைகளில் இச்செயற்கைக்கோள் படம்பிடித்து முடிக்கிறது[2]. கார்டோசாட்-1 செயற்கைக்கோளில் நவீன பன்னிறமுணர் ஒளிப்படக் கருவிகள் இரண்டு பொருத்தப்பட்டிருந்தன. மின்காந்த அலைமாலையின் கட்புலனாகும் புவிப்பகுதியை இக்கருவிகள் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கவல்லவையாகும். இவ்விரண்டு ஒளிப்படக் கருவிகளும் 2,5 இடப்பிரிகைத்திறன் கொண்டவையாகும். ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தன்னகப்படுத்திக் கொள்ளும் திறன் மிக்கவையுமாகும். செயற்கைக்கோளுக்கு முன்புறத்தில் +26 பாகை கோணத்தில் ஒரு படமும், செயற்கைக்கோளுக்குப் பின்புறத்தில் -5 பாகை கோணத்தில் மற்றொரு படமும் முப்பரிமாணமாக கணநேரத்தில் இவ்வொளிப் படங்கள் எடுக்கப்படுகின்றன[3]. ஒரே காட்சியை இவ்விரு ஒளிப்படக்கருவிகளும் தன்னகப்படுத்திக் கொள்வதில் ஏற்படும் நேரைடைவெளி 52 வினாடிகள் மட்டுமேயாகும்[2]
முனைய துணைக்கோள் ஏவு கலம் சி7 (பி.எசு.எல்.வி – சி7) 2007 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இச்செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது.. கார்டோசாட்-2 செயற்கைக்கோளில் நவீன பன்னிறமுணர் ஒளிப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.. பூமியின் சுற்றுப்பாதையை இந்த உயர்நுட்ப பநிமு படம்பிடிக் கருவிகள் 9.6 கி.மீ அகலத்திலும், இடப்பிரிகை திறன் 1 மீ-க்கு குறைவாகவும் இருக்கும் வகையில் எடுக்கக் கூடியனவாகும் [4]. கார்டோசாட்- 2 செயற்கைக்கோளை 45 பாகை கோண அளவில் பூமியை நோக்கியும், அதே போல் அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும். ஒரு குறிப்பிட்ட காட்சிப் புள்ளியை ஒளிப்படத் தொகுதிகளாகத் தரும் அளவிற்கு கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் மேம்பட்ட ஒரு தொலையுணர்வு செயற்கைக் கோளாகும். இந்த செயற்கைக்கோளின் புகைப்படங்களை, விவரமான வரைபடங்கள் தயாரித்தல், பிற நிலப்பட வரைவியல் பணிகளில் ஈடுபடுதல், கிராம புற மற்றும் நகர கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற செயல்களுக்கு புவியியல் மற்றும் நில விவர அமைப்புகள் பயன்படுத்துகின்றன.
முனைய துணைக்கோள் ஏவு கலம் சி9 (பி.எசு.எல்.வி – சி9) 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் உள்ள சதீசு தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஒன்பது செயற்கைக்கோள்களுடன் சேர்த்து இச்செயற்கைக்கோளையும் விண்ணுக்கு ஏவியது [5]. அது ஒரு வான்வெளி கட்டளை நிறுவும் செயல்பாட்டில் இது இந்திய ராணுவத்தின் ஒரு பிரத்யேக செயற்கைக்கோள் ஆகும். கார்டோசாட்-2எ செயற்கைக்கோள், இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இக்கால கட்டத்தில் இந்திய விமானப் படை வான்பாதுகாப்புக்காக புதிய படையமைப்பை அமைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[6] கார்டோசாட்-2எ செயற்கைக்கோளில் நவீன பன்னிறமுணர் ஒளிப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. மின்காந்த அலைமாலையின் கட்புலனாகும் புவிப்பகுதியை இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கவல்லது ஆகும். கார்டோசாட்- 2எ செயற்கைக்கோளை 45 பாகை கோண அளவில் பூமியை நோக்கியும், அதே போல் அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும்.
முனைய துணைக்கோள் ஏவு கலம் சி15 (பி.எசு.எல்.வி – சி15) 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 12 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் உள்ள சதீசு தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இச்செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது இச்செயற்கைக்கோளில் நவீன பன்னிறமுணர் ஒளிப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தது. மின்காந்த அலைமாலையின் கட்புலனாகும் புவிப்பகுதியை இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கவல்லது ஆகும். கார்டோசாட்- 2பி செயற்கைக்கோளை 26 பாகை கோண அளவில் பூமியை நோக்கியும், அதே போல அதன் சுற்றுப்பாதையை நோக்கி திருப்பவும் முடியும். எனவே எத்திசையிலும் அடிக்கடி படமெடுப்பது சாத்தியமாகும்[7].
முனைய துணைக்கோள் ஏவு கலம் சி34 (பி.எசு.எல்.வி – சி34) 2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் சிறீ அரிகோட்டாவில் உள்ள சத்தீசு தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இச்செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது. இச்செயற்கைக்கோளில் நவீன பன்னிறமுணர் ஒளிப்படக் கருவிகள் இரண்டு பொருத்தப்பட்டுள்ளன[8].2014 ஆம் ஆண்டு செலுத்தப்பட இருந்த இச்செயற்கைக்கோள் தற்பொழுது தாமதமாக விண்ணில் ஏவப்படுகிறது[9]. மின்காந்த அலைமாலையின் கட்புலனாகும் புவிப்பகுதியை இக்கருவி கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கவல்லவை ஆகும். பூமியிலுள்ள எந்தப் பொருளையும் இவ்விரண்டு ஒளிப்படக் கருவிகளும் 2 மீட்டர் விட்டத்தில்.30 கிலோமீட்டர் பரப்பளவில் கருப்பு வெள்ளையில் முப்பரிமாணப் படங்களாக எடுக்கும் திறன் கொண்டவையாகும். கார்டோசாட்- 2சி செயற்கைக்கோள் உதவியால் நீர்வள மேபாடு, காடுகள் பாதுகாப்பு மற்றும் பெருநகர குடியிருப்புகளை செம்மைப்படுத்துதல் போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும்[10][11][12]