நூலாசிரியர் | ஹரீந்தர் எஸ் சிக்கா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | உளவுக் கதை |
வெளியீட்டாளர் | பெங்குயின் |
வெளியிடப்பட்ட நாள் | 14 மே 2018 |
பக்கங்கள் | 256 பக்கங்கள் |
ISBN | 9780143442301 |
காலிங் ஷெஹ்மத் (Calling Sehmat) என்பது 2008 ஆண்டைய உளவுப்புனைவு புதினம் ஆகும். உண்மைச் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு ஹரீந்தர் சிக்காவால் எழுதப்பட்ட புதினம் இது ஆகும். சிக்காவின் முதல் புதினமான இது 2008 ஏப்ரலில் கொன்காரர் பிரசுரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.[1][2] 2018 மே மாதம் பென்குயின் ரேண்டம் ஹவுசால் இந்தியாவாவால் இதன் திருத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.[3]
2018 ஆம் ஆண்டில் இந்தப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு தர்மா புரொடக்சன்சால் ராசி என்ற இந்தி திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதில் ஷாஹத் கான் என்ற முதன்மைப் பாத்திரத்தில் அலீயா பட் நடித்தார், மேலும் அவரது பாக்கித்தான் கணவராக விக்கி கௌஷால் நடித்தார்.[2][4][5]
1971 ஆம் ஆண்டய இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடப்பதாக இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது, காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் தந்தைக்கும் இந்து தாய்க்கும்[6]. பிறந்த ஷெஹ்மத் கானைச் சுற்றியே கதை சுழல்கிறது. ஷெஹ்மத் ஒரு இளம் கல்லூரி மாணவி இவரது தந்தை ஒரு விடுதலைப் போராட்ட வீரர் இவரது தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார். நாட்டுப்பற்றுள்ள தந்தையின் கடைசி விருப்பத்தின்படி ஷெஹ்மத் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் மகனை மணமுடிக்கிறார். பாகிஸ்தானிலிருக்கும் தன் புகுந்த வீட்டிலிருந்து, இந்தியாவுக்காக உளவு பார்க்கிறார்.
ஷெஹ்மத்தின் திருமணத்துக்கு முன்னதாக, இந்திய புலனாய்வு அமைப்பான ராவின் உறுப்பினர்களால் அவருக்கு உளவுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, தனது புதிய குடும்பத்தினரிடமும் அவர்களின் நண்பர்களிடமும் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஷெஹ்மத் செயல்பட்ட அதே நேரத்தில் இராணுவ முக்கியத்துவம்வாய்ந்த முக்கிய தகவல்களை சேகரிக்கத் தொடங்குகிறார். இறுதியில், ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி ஒரு முக்கியமான இந்தியக் கடற்படை இலக்கை மூழ்கடிக்கவிருக்கும் திட்டத்தைக் கண்டுபிடிக்கிறார். உடனடியாக இத்தகவலை உளவு அமைப்புக்குத் தெரியப்படுத்துகிறார். இவர் கொடுத்த தகவலால் வங்காள விரிகுடாவில் இருந்த இந்தியக் கடற்படை விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். ‘விக்ராந்த் பாகிஸ்தான் ராணுவத்திடமிருந்து 1971 போரின்போது பாதுகாக்கப்படுகிறது.[7]
இறுதியில் ஷெஹ்மத் மாட்டிக்கொள்ள, தன் கையாட்கள் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பித்து வருகிறார். அப்போது அவர் பாக்கிஸ்தானிய கணவரால் கர்ப்பமுற்றவராக இருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்து வளர்ந்து, பின்னர் இந்திய ராணுவத்தில் ஒரு அதிகாரியாக சேர்கிறது.[5]
இந்தப் புதினத்தை எழுதியவரான ஹரீந்தர் சிக்கா இந்தியக் கடற்படையில் துணைத் தளபதியாக இருந்தவர். கார்கில் போரின்போது இந்திய ராணுவம் உளவு பார்க்கும் விஷயத்தில் நிறைய கோட்டைவிட்டதாக கருதினார். அது குறித்து ஆய்வு நோக்கில் பல ராணுவ அதிகாரிகளை அவர் தொடர்புகொண்டார். அப்போது ஓர் அதிகாரி, இந்திய நாட்டுக்காக 1971 போரின்போது பாகிஸ்தானிலிருந்து உளவு பார்க்க காஷ்மீர் முசுலீமான தன் தாய் பாக்கித்தான் இராணுவ அதிகரியை மணந்து உளவு பார்த்த கதையைச் சொல்லியிருக்கிறார். உடனடியாக சிக்கா பஞ்சாப்பின் மாலர்கோட்லாவில் அந்தத் தாயைச் சந்தித்து நிறைய விஷயங்களைப் பேசிலத் தெரிந்துக் கொண்டார்.
இந்த உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதையை உருவாக்குவதற்கு சிக்கா சுமார் 8 ஆண்டுகள் செலவிட்டார். இந்த புதினத்தில் வரும் ஷெஹ்மத் உண்மையாக வாழ்ந்த ஒரு பெண் என்றாலும், ஷெஹ்மத் என்பது உண்மையான பெயர் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அண்மையில் ஒரு நேர்காணலின் போது, அந்த பாத்திரத்தின் பின்னால் உள்ள உண்மையான பெண் இறந்துவிட்டதாக கூறினார்.[8][9]
இந்த புத்தகமானது 2018 மார்ச்சில் பென்குயின் இந்தியாவால் புதிய வடிவமைப்பில் மீண்டும் வெளியிடப்பட்டது.[10]