கவிச்சந்திரா காளிச்சரண் பட்நாயக் | |
---|---|
![]() | |
இயற்பெயர் | କାଳୀଚରଣ ପଟ୍ଟନାୟକ |
பிறப்பு | பதாம்பா | 23 திசம்பர் 1898
இறப்பு | 24 சூலை 1978 | (அகவை 79)
கல்வி நிலையம் | ராவன்ஷா கல்லூரி |
வகை | ஒடிசி இசை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கவிச்சந்திர கீதாவளி, பதா, கும்பார சக்கா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | மாநில சாகித்ய அகாதமி விருது (1977) |
பெற்றோர் | துர்கா சரண் பட்நாயக் |
குடும்பத்தினர் | சியாமாமணி தேவி (உறவினர்) |
கையொப்பம் | |
![]() |
கவிச்சந்திரா என்ற பெயரால் அறியப்படும் காளிசரண் பட்நாயக் ( Kalicharan Pattnaik ) ஒடிசாவின் சிறந்த இலக்கிய மற்றும் கலை ஆளுமையாவார். ஒடிசி இசை, ஒடிசி நடனம் மற்றும் ஒடிய நாடகத் துறையில் இவருக்குப் பங்களிப்பு இருந்தது. ஆரம்பகால ஒடியத் திரைப்படங்களின் வளர்ச்சிக்கும் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தார். 1898 ஆம் ஆண்டு திசம்பர் 23 ஆம் தேதி அப்போதைய பதாம்பா சமஸ்தானத்தில் பிறந்தார். [1] பல்வேறு பாரம்பரிய இராகங்களில் இவரது இசையமைப்புகள் ஒடிசி இசை மற்றும் நடனத் துறையில் பரவலாகப் பாடப்படுகின்றன. [2]
காளிசரண் பட்நாயக் 1898 ஆம் ஆண்டு திசம்பர் 23 ஆம் தேதி அப்போதைய பதாம்பா சமஸ்தானத்தில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை பாங்கியில் உள்ள சர்ச்சிகா பள்ளியில் பெற்றார். பாங்கியில் தனது கல்விக்குப் பிறகு, குர்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மேலும் உயர் கல்விக்காக மெட்ரிகுலேஷன் பிறகு கட்டக் ராவன்ஷா கல்லூரிக்குச் சென்றார். ஆனால் 1919 இல் இவரது தந்தையின் அகால மரணம் இவரது கல்வியை நிறுத்தியது. [3] [4] கல்வியை முடித்த பிறகு, கஞ்சம், கந்தபராவில் உள்ள பள்ளி ஆய்வாளராக சிலகாலம் பணியாற்றினார்.
பள்ளிப் பருவத்திலேயே காளிசரண் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது பள்ளி நண்பர்களின் உதவியுடன் பாபாஜி என்ற நாடகத்தை தயாரித்தார். இது ராமசங்கர் ரேயின் மற்றொரு நாடகமான காஞ்சி காவேரியில் இருந்து ஈர்க்கப்பட்டது. தனது குழந்தைப் பருவத்தில், பண்டிட் வாசுதேவ மகோபத்ரா மற்றும் கானு மியான் போன்ற கலைஞர்களிடமிருந்து ஒடிசி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். [5] பின்னர் கல்லூரியில் படிக்கும் போது மாதவராவ் என்பவரிடம் கற்றார். கந்தபராவில் சில ஆண்டுகள் பள்ளிகளின் ஆய்டாளராகப் பணியாற்றிய பிறகு கட்டக் வந்தார். சுதம் சரண் நாயக்கின் மரணத்திற்குப் பிறகு இவர் ஒடியா பத்திரிகையான உத்கலா தீபிகாவுடன் தொடர்பு கொண்டார். பிரஜாசுந்தர் தாசின் 'முகுரா' என்ற இதழின் உதவி ஆசிரியராகவும் இருந்தார்.
1922 ஆம் ஆண்டில் பத்திரிக்கைத் துறையிலிருந்து வெளியேறி மயூர்பஞ்ச் சென்று நாடகக் கலைஞரானார். இவரது வழிகாட்டுதலின் கீழ் அங்கு ஒரு நாடகக் குழு நிறுவப்பட்டது. காளிசரண் மயூர்பஞ்சின் பாரம்பரிய சாவ் நடனத்தில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஒடிசாவின் பாரம்பரிய நடனப் பாணியான ஒடிசியில் இருந்து பல புதிய அம்சங்களை அதில் அறிமுகப்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகு புரிக்கு வந்து அரச ஒடிசி இசைக்கலைஞராகவும் புரி ராஜா கஜபதி ராமச்சந்திர தேவனின் ஆலோசகராகவும் ஆனார். புரியில் தங்கியிருந்த காலத்தில் புரிபாசி என்ற வார இதழை வெளியிட்டார். புரியில் இவரது முயற்சியால் முதன்முறையாக சங்கீத பிரபா என்ற இதழ் ஒரு மாத இசை இதழாக வெளியிடப்பட்டது. இவரது இசையமைப்பிற்காக கஜபதியால் கவிச்சந்திரா என்று கௌரவிக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு புரியில் தங்கியிருந்த போது ஒடிசி இசை மற்றும் நாடகங்களுக்கு புதிய ஆற்றலை அறிமுகப்படுத்த ராச லீலையைத் தொடங்கினார். 1926 முதல் 1939 வரை, உத்கல சாகித்ய சமாஜம் போன்ற புகழ்பெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் இவரது ராச லீலை மாநிலம் முழுவதும் பரவலான புகழ் பெற்றது. அதன்பின் சமூக மற்றும் வரலாற்று நாடகங்களில் கவனம் செலுத்தினார். முதல் பிரபலமான சமூக நாடகம் பிரதிசோதா 1937 இல் அரங்கேற்றப்பட்டது. 1939 வாக்கில் ராசலீலை மற்றும் நாடகங்கள், பல பக்திப் பாடல்கள் மற்றும் குழந்தை இலக்கியங்கள் மீது ஏராளமான பாடல்களை வெளியிட்டார். 1939 முதல் 1950 வரை நியூ ஒடிசா தியேட்டர் என பெயரிடப்பட்ட இவரது நாடகக் குழு இவரது வழிகாட்டுதலின் கீழ் பிரபலமானது. [6] [7] [8] [9]
ஒடிய இலக்கியத்தில் நாடகம் பெரும்பாலும் புராணங்கள் போன்ற சில கட்டுப்பாடான வகைகளில் கவனம் செலுத்தியது. காளிசரண் தனது நாடகங்கள் மூலம் சமூகப் பொருத்தமான தலைப்புகளுடன் இந்தத் தடையை உடைத்தார். [10] [11]