காளிபட்டணம் இராமராவ் (Kalipatnam Ramarao ) (பிறப்பு: 1924 நவம்பர் 9) [1] "கதா மாஸ்டர்" என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய கவிஞரும் எழுத்தாளருமாவார். இவர் தெலுங்கு சிறுகதைகளுக்கு பெயர் பெற்றுள்ளார்.
காளிபட்டணம் 1924 இல் இந்தியாவின் சிறீகாகுளம், பொண்டுருவில் பிறந்தார். விசாகப்பட்டினத்தில் உள்ள புனித அந்தோனி உயர்நிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிய இவர் 1979 இல் ஓய்வு பெற்றார். எழுத்தாளர் எண்டமுரி வீரேந்திரநாத்தால் ஈர்க்கப்பட்ட காளிபட்டணம் இராம ராவ், அவரை குருவாக கருதி தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். இராமராவின் கதைகள் சமூகத்தில் நடுத்தர மற்றும் கீழ் வர்க்க மக்களிடையே சோதனைகள், இன்னல்கள் மற்றும் எப்போதாவது வாழ்க்கையின் வெற்றிகளை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இவரது உளவியல் நுண்ணறிவு மற்றும் அன்றாட வாழ்க்கையில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்த இவரது கூர்மையான பகுப்பாய்வு திறன்களுக்காகவும் அறியப்படுகிறார்.
இவரது முதல் கதை, "சித்ரகுப்தா" என்பதாகும். இது ஒரு அஞ்சல் அட்டையின் பின்புறத்தில் எழுதப்பட்ட ஒரு சிறு கதையாகும். இவர் தனது எழுத்தில் திருப்தி அடையாமல் 1955 இல் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் 1963 இல் "தீர்ப்பு" என்ற கதையை எழுதினார். 1960களின் பிற்பகுதியில் "தீர்ப்பு" எழுதியதைத் தொடர்ந்து பல கதைகளை எழுதினார், இதில் "யக்னம்", "மகாதசீர்வகனமு", "வீருடு-மகவீருடு", "ஆதிவாரம்", "ஹிம்சா", "நோ ரூம் ", " சினேகம் ", " ஆரத்தி ", " பயம் ", " சாந்தி ", " சாவு ", " ஜீவன தாரா மற்றும் குத்ரா" போன்ற கதைகளை எழுதினார். "குத்ரா" எழுதிய பிறகு, மீடும் எழுதுவதை நிறுத்தினார். இவர் தனது ஆரம்ப நாட்களில் நிறைய எழுதுவாதாகவும் ஆனால் தான் எழுதியதில் மகிழ்ச்சி இல்லாததால் அவற்றை வெளியீட்டுக்கு அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். பிற்காலத்தில், இவர் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு கதைகளைப் எழுதினார். இவரது கதைகள் உருசிய மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
விபிளவா இராச்சாய்தல சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் காளிபட்டணம் இருந்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதை வென்றார்.
கடந்த 15 ஆண்டுகளில், காளிபட்டணம் மற்ற எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை வெளியிடுவதில் தீவிரமாக இருந்தார். நியூயார்க்கில் நடந்த 9 வது வட அமெரிக்காவின் தெலுங்கு சங்க மாநாட்டில் உலக தெலுங்கு மாநாட்டின் விருந்தினராக இவர் 1993 இல் அமெரிக்காவில் இருந்தார் (டாக்டர் கலசபூடி சீனிவாச ராவ் மற்றும் இலக்கியக் குழுவின் எர்ரமில்லி பத்மாவதி ஆகியோர் இவரை அங்கு அழைத்து வருவதில் முக்கிய பங்கு வகித்தனர்). இந்த ஆண்டு, காளிபட்டணத்தின் 90 வது பிறந்த நாளை இவரது ரசிகர்கள் ஆந்திராவைச் சுற்றிலும் கொண்டாடினர். அந்த நேரத்தில், இவர் மீண்டும் தான் எழுதத் தொடங்கலாம் என்று சூசகமாகக் கூறினார்.
தெலுங்கு இலக்கியத்தை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அனுப்ப ஒரு ஆராய்ச்சி மையமாகவும் நூலகமாகவும் காளிப்பட்டணம் 1997 பிப்ரவரி 22 அன்று கதா நிலையத்தைத் தொடங்கினார். [2] இந்த மையம் சிறீகாகுளத்தில் விசாகா 'ஏ' காலனியில் அமைந்துள்ளது. [3] தற்போது, இந்த மையத்தில் 5000 க்கும் மேற்பட்ட வார இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் சிறப்பு சேர்த்தல்கள் மற்றும் பலவகையான தெலுங்கு இதழ்கள் உள்ளன. [4]