கிரீஷ் பரத்துவாஜ் (Girish Bharadwaj) (மே 2, 1950) இந்திய சமூக செயற்பாட்டாளரான இவர் போக்குவரத்து வசதியற்ற, தொலைதூர கிராமப்புறங்களில் பாயும் ஆறுகளை மக்கள் கடந்து செல்வதற்கு வசதியாக, குறைந்த செலவில், தரமான 127 தொங்கு பாலங்களை அமைத்துக் கொடுத்த வகையில், இவருக்கு தொங்கு பாலங்களின் நண்பர் என்றும் இந்தியாவின் பால மனிதர் என்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகறார். தன்னலமற்ற மக்கள் சேவைக்காக இவருக்கு இந்திய அரசு 2017-ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கியது.[1][2][3][4]
2 மே 1950-இல் கர்நாடகா மாநிலத்தின் தெற்கு கன்னட மாவட்டத்தில் உள்ள சுல்லியா எனும் ஊரில் பிறந்தார். இவர் மாண்டியாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இளநிலை இயந்திரவியல் படிப்பில் பட்டம் பெற்றார்.[1][5] இவருக்கு உஷா எனும் மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
தெற்கு கன்னட மாவட்டத்தின் ஆரம்பூர் எனும் தொலைதூர கிராமத்தில் பாயும் பயஸ்வினி ஆற்றின் குறுக்கே 1980-இல் முதன்முதலில் ஒரு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒரு தொங்கு பாலங்த்தை நிறுவினார். அதன் பிறகு கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்கு தொங்கு பாலங்களை அமைத்து கொடுத்தார்.[3][6]