கிரீஷ் புத்தன்சேரி | |
---|---|
பிறப்பு | 1957 கோழிக்கோடு, கேரளா |
இறப்பு | கோழிக்கோடு, கேரளா | பெப்ரவரி 10, 2010
தொழில் | பாடலாசிரியர், திரைக்கதை |
நடிப்புக் காலம் | 1989 – 2010 |
துணைவர் | பீனா |
பிள்ளைகள் | ஜிதின் கிருஷ்ணன், தினாநாத் |
கிரீஷ் புத்தன்சேரி (23 September 1957 – 10 பெப்ரவரி 2010) ஓர் புகழ்பெற்ற மலையாள திரைப்பாடலாசிரியரும் திரைக்கதையாசிரியரும் ஆவார். இந்திய கலையுரிமை சமூகத்தின் (Indian Performance Rights Society,IPRS) ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர்.கேரள அரசின் ஆண்டின் சிறந்த திரைப்பாடலாசிரியர் விருதை ஏழு ஆண்டுகளாகப் பெற்று வந்தவர்.[1] பெப்ரவரி 10 , 2010 அன்று கோழிக்கோட்டில் மரணமடைந்தார்.[2]
கிரீஷ் புலிக்கல் கிருஷ்ண பணிக்கருக்கும் மீனாட்சியம்மாவிற்கும் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள உள்ளியேரி கிராமத்தின் அருகாமையில் உள்ள புத்தன்சேரியில் பிறந்தார். அவரது தந்தை ஆரூடம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ சேவையாற்றி வந்தார். அவரது தாயார் ஓர் கர்நாடக இசைக் கலைஞர்.
அவர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும்போதே கோழிக்கோடு வானொலிக்கு மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு பாடல்கள் எழுதி வந்தார். 1988ஆம் ஆண்டு சக்கரவாலத்தினப்புறம் என்ற திரைப்படம் மூலம் தமது திரைவாழ்வைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 328 மலையாளத் திரைப்படங்களில் 1556 பாடல்கள் எழுதியுள்ளார்.[3] மக்களிடையே புகழ்பெற்ற அவரது முதல் பாடல் ஜானிவாக்கர் என்ற திரைப்படத்திலாகும். கேரள மாநில திரைப்பட விருதினை ஏழு முறை பெற்றுள்ள கிரீஷ் 2001 முதல் 2004 வரை தொடர்ந்து நான்குமுறை பெற்று சாதனை புரிந்துள்ளார்.[1] சனவரி 14,2010 அன்று வெளியான ஹாப்பி ஹஸ்பெண்ட்ஸ் (Happy Husbands) என்ற மலையாளத் திரைப்படமே அவர் கடைசியாகப் பணியாற்றியப் படமாகும்.
திரைப்பாடலாசிரியராக பணியாற்றியதுடன் திரைக்கரை ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.மலையாள பெரும் நடிகர் மோகன்லால் நடித்து வெளிவரவிருந்த ராமன் போலீஸ் என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதிவரும்போதே மரணமடைந்தார்.[4]
பெப்ரவரி 3 அன்று ஏற்பட்ட வாதத்தால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.[5] இருமுறை அறுவை சிகிட்சை செய்தும் பயனின்றி மூளையில் குருதிவெடிப்பு ஏற்பட்டு பெப்ரவரி 10,2010 அன்று மருத்துவமனையிலேயே மரணமடைந்தார். அவருக்கு பீனா என்ற மனைவியும் ஜிதின் கிருஷ்ணன், தினாநாத் என்ற இரு மகன்களும் உள்ளனர்.